siraj pt web
கிரிக்கெட்

சேர்க்கப்படாத சிராஜ்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்.. தரவுகள் என்ன சொல்கின்றன?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிராஜ் சேர்க்கப்படாமல், ரிசர்வ் வீரராக வைக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Angeshwar G

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியா தனது முதல் போட்டியை வரும் 20ஆம் தேதி - துபாயில் - வங்கதேசத்துக்கு எதிராக, விளையாட உள்ளது. இந்நிலையில் முதன்மையான அணிகளான இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா போன்ற அணிகள் தங்களது பிரதான பந்துவீச்சாளர்களின்றி களமிறங்குகிறது. முக்கியமாக, இந்திய அணியின் தேர்வு ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோலி, பும்ரா, ரோகித், கம்பீர்

காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் சாம்பியன்ஸ் டிராபியில் ஜஸ்பிரீத் பும்ரா பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ஜஸ்பிரீத் பும்ராவுக்கு பதில் இளம் வீரர் ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ஐசிசியிடம் பிசிசிஐ கொடுத்த இறுதி பட்டியலில் ஜெய்ஸ்வாலுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட அணியில் இருந்து இந்த இரு மாற்றங்களை பிசிசிஐ செய்துள்ளது.

அகமதாபாத்தில் நடந்த தேர்வாளர்கள் கூட்டத்தில் அகர்கர், கவுதம் கம்பீர், ரோகித் சர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆலோசனையின் முடிவில் ஹர்ஷித் ராணா மற்றும் வருண் சக்கரவர்த்தி அணியில் சேர்க்கப்பட்டனர். இருவரும் ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்காக விளையாடுபவர்கள். எனவே, வீரர்கள் தேர்வில் கம்பீரின் ஆதிக்கம் அதிமாக இருக்கிறதோ என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். ஏனென்றால், அனுபவம் வாய்ந்த சிராஜ் ரிசர்வ் வீரராக வைக்கப்பட்டுள்ளார்.

பும்ராவிற்கு பதில் சேர்க்கப்பட்டுள்ள ஹர்ஷித் ராணா தனது முதல் ஒருநாள் போட்டியில் மறக்கமுடியாத பந்துவீச்சை பதிவு செய்திருந்தாலும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவரது பந்துவீச்சு எடுபடவில்லை. எனவே, பும்ராவிற்கு மாற்றாக சிராஜ்தான் மிகச்சிறந்த தேர்வாக இருப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிடிஐயிடம் இதுதொடர்பாக பேசிய முன்னாள் தேர்வாளர் ஒருவர், “துபாயில் புதிய பந்தினை சிறப்பாக பயன்படுத்துபவர் விக்கெட்களைப் பெறலாம். ஆனால், சிராஜ் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர் அணியில் இருக்க வேண்டுமென விரும்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதுவரை 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சிராஜ் 24.04 என்பதை சராசரியாக வைத்து 71 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 2023 ஆம் ஆண்டில் ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடமும் பிடித்திருந்தார். அதுமட்டுமின்றி 2022 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர். இத்தகைய வீரரைத் தேர்வு செய்யாதது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மறுபுறம் ஹர்ஷித் ராணா 16 லிஸ்ட் ஏ போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 26 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளார். சிராஜிற்கு பதிலாக மாற்று வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டது குறித்து ரோகித் சர்மா ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், “புதிய பந்தில் பந்துவீசக்கூடிய ஒருவரை நாங்கள் விரும்பினோம். புதிய பந்தில் பந்துவீச அர்ஷ்தீப் சிங் சரியாக இருப்பார் என நினைத்தோம். ஏனெனில், புதிய பந்தில் பந்துவீசுவதற்கான சிராஜின் செயல்திறன் குறைந்துகொண்டு வருகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

எது எப்படியிருந்தாலும், அர்ஷ்தீப் சிங், முகம்மது ஷமி, ஹர்ஷித் ராணா, ஹர்திக் பாண்டியா போன்றவர்கள் முக்கியப் பந்துவீச்சாளர்களாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் செயல்பட இருக்கிறார்கள். துபாயில் 2009 ஆம் ஆண்டு முதல் 58 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் 466 விக்கெட்களை வீழ்த்தியுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர்கள் 334 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

இந்திய தேர்வுக்குழுவின் இந்த முடிவுகள் பலனளிக்குமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.