பஹ்ரைனின் மனாமாவில் நடைபெற்று வரும் ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025-இல் இந்திய மகளிர் கபடி அணி, இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்திய பெண்கள் கபடி அணி, குரூப் சுற்றுகளில் தோல்வியை சந்திக்காமல் முதலிடத்தில் நீடித்தது. லீக் சுற்றுகளில் வங்கதேசத்தை 46-18, தாய்லாந்தை 70-23, இலங்கையை 73-10 மற்றும் ஈரானை 59-26 என்ற கணக்கில் வீழ்த்தியது. ரவுண்ட் ராபின் போட்டிகளுக்குப் பிறகு குரூப் சுற்றுகளில் முதல் இரண்டு இடங்களில் இருந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
மகளிர் கபடி இறுதிப் போட்டியில், இந்திய அணியும் ஈரான் அணியும் மோதின. இதில், இந்திய மகளிர் அணி அபாரமாக விளையாடி 75 - 21 என்ற புள்ளிக் கணக்கில் ஈரானைத் தோற்கடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. ஈரான் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
இந்திய மகளிர் அணியில், சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த இளம் வீராங்கனை கார்த்திகா இடம்பெற்றிருந்தார். அவரது சிறப்பான ஆட்டம், இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்வதில் முக்கியப் பங்கு வகித்தது. கார்த்திகாவுக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இவர் கண்ணகி நகர் அரசுப் பள்ளியில் படித்து வருகிறார்.
பெண்களைப் போலவே ஆண்கள் கபடி அணியும் இந்தத் தொடரில் தங்கம் வென்றிருக்கிறது. இவர்களும் குரூப் சுற்றுகளில் தோல்விகயை சந்திக்காமல் இறுதிபோட்டியில் ஈரானை எதிர்கொண்டு 35-32 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருக்கின்றனர். குரூப் சுற்றுகளில் வங்கதேசத்தை 83-19, இலங்கையை 89-16, பாகிஸ்தானை 81-26, இரானை 46-29, பஹ்ரனை 84-40 என்ற கணக்கிலும் தாய்லாந்தை 85-30 என்ற கணக்கிலும் பிரம்மாண்ட வெற்றிகளை இந்திய அணி பதிவு செய்திருக்கிறது.
இந்த இரண்டு தங்கப்பதங்களை அடுத்து, தற்போது இந்திய அணியிடம் 10 பதக்கங்கள் இருக்கின்றன. அதில் 2 தங்கப் பதக்கங்களும், 3 சில்வர் பதக்கங்களும், 5 வெண்கலப் பதக்கங்களும் அடங்கும். இந்தியாவின் சார்பாக மொத்தமாக 222 வீரர், வீராங்கனைகள் இந்த ஏசியன் யூத் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று இருக்கின்றனர்.
தற்போது வரை சீனா 8 தங்கம், 11 வெள்ளி, 2 வெண்கலம் என 21 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. தாய்லாந்து மற்றும் உஸ்பெகிஸ்தான் தலா 10 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்தியா 12 பதக்கங்களுடன் 5 ஆம் இடத்தில் இருக்கிறது.
2025 ஆம் ஆண்டு ஏசியன் யூத் கேம்ஸ் போட்டிகள் பஹ்ரைனின் மனாமா நகரில் அக்டோபர் 22 தொடங்கி 31 வரை நடைபெற இருக்கின்றன. நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்துவதற்கு திட்டமிட்டப்பட்ட இந்தப் போட்டித்தொடர் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். 2009 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற தொடக்க ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா ஐந்து தங்கம், மூன்று வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் என 11 பதக்கங்களை வென்றிருந்தது.
நான்ஜிங்கில் நடந்த இரண்டாவது தொடரில் இந்திய விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிட்டு 14 பதக்கங்களை வென்றனர். அதாவது மூன்று தங்கம், நான்கு வெள்ளி மற்றும் ஏழு வெண்கல பதக்கங்களை வென்றிருந்தனர். இந்நிலையில்தான் தற்போது மூன்றாவது தொடர் நடத்தப்பட்டு வருகிறது.