கவலை தரும் இந்தியாவின் பந்துவீச்சு.. உலகக்கோப்பைக்குள் சரிசெய்ய வேண்டிய 3 விசயங்கள்!
இந்திய அணியின் பந்துவீச்சு கவலையளிப்பதாக உள்ளது.. 2027 உலகக்கோப்பைக்குள் சரிசெய்யவேண்டிய 3 விசயங்கள் குறித்து விவரிக்கிறது கட்டுரை..
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. நடந்து முடிந்துள்ள 2 போட்டியிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா பரிதாபமாக தோற்று தொடரை இழந்துள்ளது.
பேட்டிங்கில் மிடில் ஆர்டர் வீரர்கள் சொதப்பிவரும் அதேவேளையில், பந்துவீச்சில் இந்தியா மோசமான நிலையில் இருப்பது அப்பட்டமாக தெரிந்துள்ளது. இந்தியாவின் பந்துவீச்சை பும்ரா மற்றும் ஷமி இருவரும் தலைவர்களாக வழிநடத்திய நிலையில், அவர்கள் இல்லாத இந்தியாவின் பந்துவீச்சு கவலையளிக்கிறது..
இந்த நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சில் சரிசெய்ய வேண்டிய 3 விசயங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்..
பவுலிங் காம்பிஷேசனில் தொடரும் குழப்பம்
இந்திய அணியின் தேர்வுக்குழு தொடர்ந்து அணியின் பவுலிங் காம்பினேஷனில் குழப்பத்தில் இருந்துவருகிறது. பும்ரா, ஷமி இல்லாத சூழலில் எந்த பவுலர்களை தேர்வுசெய்யவேண்டும், யாருக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என்ற பரீட்சையில் ஈடுபட்டிருப்பது போல் தெரிகிறது. அதாவது 2027 உலகக்கோப்பைக்கான தயாரிப்பை இப்பொழுதே இந்தியா தொடங்கியிருக்கிறது..
ஆனால் நீங்கள் ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிக்கு எதிராக தொடரை வெல்லும்போது தான் அது ஆடும் வீரர்களுக்கு அதிகப்படியான நம்பிக்கையை உருவாக்கும்.. அதற்கு ஒரு போட்டியில் வீரர்கள் பரீட்சையில் ஈடுபடுத்தப்பட்டால், அது சரியாக செல்லாத சூழலில் அடுத்தப்போட்டியில் முடிந்தளவு வலுவான அணியை களமிறக்கவேண்டும்..
ஆனால் தொடர்ந்து வீரர்களின் பரீட்சையில் கவனம் செலுத்தும்போது, அணி தோல்வியை சந்திக்கிறது. இது விளையாடி தோற்கும் வீரர்களின் நம்பிக்கையை குலைப்பதோடு பெவிலியனில் அமர்ந்திருக்கும் வீரர்களின் நம்பிக்கையையும் சேர்த்து பாதிக்கும் சூழலை ஏற்படுத்துகிறது. நல்ல ஃபார்மில் இருக்கும் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்களை பெஞ்சில் அமரவைப்பது எந்தளவு சரியான முடிவாக இருக்கும் என்பது புரியவில்லை..
அதிகப்படியான ஆல்ரவுண்டர்கள்
இந்திய அணி பேட்டிங் ஆர்டரை பலப்படுத்தும் எண்ணத்தில் தொடர்ந்து அதிகப்படியான ஆல்ரவுண்டர்கள் மேல் கவனம் செலுத்தி வருகிறது. ஆடும் லெவனில் முழுமையான பந்துவீச்சாளர்களாக அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் மட்டுமே நீடிக்கின்றனர். வெறும் இரண்டு முழுமையான பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு உங்களால் வெற்றியை பெறமுடியாது..
போதாக்குறைக்கு ஆல்ரவுண்டர்களாக அணியில் எடுக்கப்பட்டுள்ள நிதிஷ்குமார், ஹர்சித் ராணா, வாசிங்டன் சுந்தர் போன்ற வீரர்களின் செயல்பாடுகள் மோசமாக இருப்பது அணியின் வெற்றியை பாதிக்கிறது.
கடந்த 2023 உலகக்கோப்பையின் போது 5 முழுமையான பவுலர்களோடு களமிறங்கிய இந்திய அணிக்கு, ஷமி மற்றும் பும்ராவிற்கு ஏற்பட்ட காயம் இறுதிப்போட்டியில் தோல்விக்கு வழிவகுத்தது. அதைக்கருத்தில் கொண்டு ஆல்ரவுண்டர்களை அணியில் எடுக்கும் தேர்வுக்குழுவின் முயற்சி நல்லவிசயமாக இருந்தாலும், அது அணியின் பேட்டிங் ஆர்டரில் ஏற்படும் குழப்பத்தாலும் எதிர்ப்பார்த்த முடிவை எடுத்துவருவதில்லை..
2023 உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்டியா என்ற ஒரு ஆல்ரவுண்டரை நம்பி இருந்த இந்திய அணி, அவர் இல்லாத சூழலில் பெரும் சிக்கலுக்கு தள்ளப்பட்டது. அதை சரிசெய்யவேண்டிய இடத்தில் இந்திய அணி இருந்தாலும், பவுலர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கான கலவையை சரியான விதத்தில் கொண்டுசெல்வது அவசியமானதாக இருக்கிறது.. முடிவில் உங்களால் 2 பவுலர்களால் வெற்றியை பெறமுடியாது..
முழுமையான ஸ்பின்னர் இல்லை
2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி இரண்டு முழுமையான மேட்ச் வின்னிங் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரையும் கொண்டிருந்தது.. ஆனால் தற்போது அணியில் ஒரு முழுமையான ஸ்பின்னரும் இடம்பெறவில்லை.. அது அணியின் வெற்றிவாய்ப்பை பாதிக்கிறது.
2027 உலகக்கோப்பை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவிருப்பதால் வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் மீது இந்தியா கவனம் செலுத்தினாலும், அணியில் ஒரு முழுமையான ஸ்பின்னரை எடுத்துச்செல்லாமல் வெற்றிபெறுவதென்பது சாத்தியமற்ற விசயமாகவே இருக்கப்போகிறது..
ஆஸ்திரேலியா போன்ற கண்டிசனில் ஆடம் ஜாம்பா போன்ற சுழற்பந்துவீச்சாளர் 4 விக்கெட்டை வீழ்த்த முடிந்தால், குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தியால் பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்த முடியும்.. இரண்டு வீரர்களும் முன்பை விட தற்போது மிகவும் மேம்பட்ட ஸ்பின்னர்களாக இருப்பது இந்தியாவிற்கு கூடுதல் சிறப்பு, அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது தலைமை பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுவின் வேலை..
இந்த விசயங்களை எல்லாம் இந்திய அணியின் தேர்வுக்குழு சரிசெய்யுமா, 2027 உலகக்கோப்பைக்கு சரியான கலவையை எடுத்துச்செல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

