ஜாம்பாவால் முடிந்தால் குல்தீப்பால் முடியாதா..? ஹர்சித் ராணா தேர்வு குறித்து அஸ்வின் கேள்வி!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் ஏன் இடம்பெறவில்லை என்ற கேள்வியை அஸ்வின் எழுப்பியுள்ளார்..
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இழந்துள்ளது. நடந்து முடிந்துள்ள 2 போட்டியிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா பரிதாபமாக தோற்றுள்ளது.
ஒருநாள் அணிக்கான தேர்வின் போதே சஞ்சு சாம்சன், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி போன்ற வீரர்கள் தேர்வு செய்யப்படாததற்கும், ஹர்சித் ராணா தேர்வுசெய்யப்பட்டதற்கும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது ஆடும் லெவனில் ஏன் குல்தீப் யாதவை எடுத்துவரவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது..
குல்தீப் யாதவ் ஏன் இடம்பெறவில்லை..
நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடைசியாக வந்து பேட்டிங்கில் 18 பந்தில் 24 ரன்கள் அடித்த ஹர்சித் ராணா, பவுலிங்கிலும் டிராவிஸ் ஹெட் மற்றும் மேத்யூ ஷார்ட் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். ஆனால் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு மோசமான பந்துகளை வீசிய ஹர்சித் நிறைய ரன்களை விட்டுக்கொடுத்தார். ஒரு கட்டத்தில் 6 ரன்களுக்கு மேல் தேவையான ரன்ரேட் இருந்தநிலையில், அடுத்தடுத்த ஓவர்களில் 12, 13 என விட்டுக்கொடுத்த ராணா ஆஸ்திரேலியாவின் சேஸிங்கை எளிதாக்கினார்..
போதாக்குறைக்கு பேட்டிங்கில் பங்களிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிதிஷ்குமார் ரெட்டி 8 ரன்னில் அவுட்டானதுடன், 3 ஓவரில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட்டையும் வீழ்த்தவில்லை.. இந்நிலையில் ஹர்சித் ராணா மற்றும் நிதிஷ்குமார் இருவருக்கு பதிலாக குல்தீப் மற்றும் பிரசித் கிருஷ்ணா விளையாடியிருக்க வேண்டும் என அஸ்வின் பேசியுள்ளார்.
அவருடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அஸ்வின், "ஹர்சித் ராணா மிகவும் ஆரம்ப நிலையில் இருக்கிறார், ஆரம்பத்தில் நன்றாக பந்துவீசி சிறப்பாக செயல்பட்ட அவர், பின்னர் கண்ணாபிண்ணாவென பந்துகளை வீசி அதிகப்படியான ரன்களை விட்டுக்கொடுக்கிறார். வேறொரு மேனேஜ்மெண்டாக இருந்தால் ஹர்சித் ராணா அணிக்குள் வந்திருக்கவே முடியாது, அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா தான் விளையாடியிருப்பார். பிரசித் கிருஷ்ணா பலமுறை இதுபோன்ற ஆடுகளங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் ஆடம் ஜாம்பவால் 4 விக்கெட்டுகளை வீழ்த்த முடிகிறது என்றால் குல்தீப் யாதவால் முடியாதா. ஏன் அவரை களமிறக்கவில்லை என்ற காரணம் புரியவே இல்லை. ஹர்சித் ராணாவிற்கு பதில் குல்தீப் யாதவும், முகமது சிராஜ் அல்லது நிதிஷ்குமார் ரெட்டிக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவும் விளையாட வேண்டும்" என்று அஸ்வின் பேசியுள்ளார்.

