டென்னிஸில் இந்தியாவின் அடையாளம் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டால் விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில், சில வீரர்களின் பெயர்களே நம் கண்முன்னால் வந்துநிற்கும். 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற வியாண்டர் பயஸ், உலகத்தரவரிசையில் முதலிடம் பிடித்த சானியா மிர்சா, 12 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற மகேஷ் பூபதி, டென்னிஸ் வரலாற்றில் இந்தியாவிற்கென முதல் அடையாளத்தை உருவாக்கிய விஜய் அமிர்தராஜ், 43 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரோகன் போபண்ணா மற்றும் மகளிர் டென்னிஸ் வீரர்களின் முன்னோடி நிரூபமா சஞ்சீவ், ராமநாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன், சோம்தேவ் தேவ்வர்மன், அங்கிதா ரெய்னா போன்ற தலைசிறந்த வீரர்களை தொடர்ந்து, டென்னிஸ் வரலாற்றில் எல்லோருடைய கவனத்தையும் திருப்பியுள்ளார் பதினாறே வயதான மாயா ராஜேஷ்வரன் ரேவதி.
நம்ம தமிழ்நாட்டின் கோயம்புத்தூரை சேர்ந்த இந்த சிறுமி இந்த வருடம் முழுவதும் டென்னிஸ் உலகை கலக்கியுள்ளார். யு16 மற்றும் யு18 தரவரிசையில் தமிழகத்தில் முதலிடம் பிடித்திருக்கும் இவர், சர்வதேச தரவரிசை பெறாதவீரராக வைல்டு கார்ட் மூலம் மும்பை ஓபன் 2025 WTA125 போட்டியில் இடம்பிடித்தார். ஒரு 15 வயது சிறுமி அரையிறுதிப்போட்டிவரை முன்னேறுவார் என்ற எண்ணம் பல மூத்தவீரர்களுக்கும் இருக்கவில்லை. ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய மாயா, தன்னுடைய அபார திறமையால் பல மூத்த வீரர்களுக்கே ஷாக் கொடுத்தார். பல அனுபவம் மிக்க வீரர்களை வென்றிகண்ட மாயா, WTA ரேங்கிங் பெற்ற இளம் இந்தியராக வரலாறு படைத்தார்.
மேலும் இந்த ஆண்டு மதிப்புமிக்க ஆரஞ்சு பவுல் பெண்கள் U18 போட்டியில் இரட்டையர் பிரிவில் பட்டத்தையும் வென்று சாதனை படைத்தார். அதுமட்டுமில்லாமல் 2025ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் என மூன்று ஜூனியர் ஸ்லாம் போட்டிகளுக்கும் தகுதி பெற்று அசத்தினார்.
இந்தியாவின் டென்னிஸ் எதிர்காலம் பாதுகாப்பான கைகளில் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளார் 16 வயதேயான மாயா ராஜேஷ்வரன் ரேவதி! இந்த தமிழச்சியின் பெயர் விரைவில் உலக டென்னிஸ் அரங்கில் முத்திரை பதிக்கவருகிறது!
தமிழகத்திலிருந்து சென்று இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பது என்பது தமிழக வீரர்களுக்கு பெரிய கனவாகவே இருந்துவருகிறது. அதிலும் தமிழகத்திலிருந்து செல்லும் பெண் கிரிக்கெட்டர்கள் இந்திய அணியில் ஜொலிப்பது என்பது அரிதான ஒன்றாகவே இருந்துவருகிறது. ஆனால் மதுரையைச் சேர்ந்த 17 வயதேயான விக்கெட் கீப்பர் பேட்டர் கமலினி குணாளன், தன்னுடைய அதிரடியான பேட்டிங் திறமை காரணமாக இந்திய அணியின் தேர்வுக்குழு கதவை உடைத்துள்ளார். வரும் டிசம்பர் 21ஆம் தேதி தொடங்கவிருக்கும் இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள கமலினி, இந்திய அணிக்காக சர்வதேச அறிமுகத்தை பெறவிருக்கிறார்.
இடது கை பேட்டரான கமலினி தன்னுடைய அதிரடியான பேட்டிங்கிற்கு பெயர்போனவர். 2024ஆம் ஆண்டு யு19 இந்திய அணியில் இடம்பெற்ற அவர், தன்னுடைய 16 வயதில் 61 பந்தில் 80 ரன்கள், 62 பந்தில் 79 ரன்கள், 44 பந்தில் 63 ரன்கள் என மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அதன்காரணமாக 2025 மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் 1.60 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் விலைக்கு வாங்கப்பட்டார். 16 வயதில் இத்தகைய அதிகபட்ச தொகைக்கு ஏலம்போய் சாதனை படைத்திருந்தார் கமலினி குணாளன்.
சமீபத்தில் நடந்துமுடிந்த யு19 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்திருந்த கமலினி, தன்னுடைய அதிரடி பேட்டிங்கால் இந்திய அணி கோப்பை வெல்ல முக்கிய காரணியாக இருந்தார். 2 அரைசதங்களை விளாசிய அவர், 143 ரன்களுடன் இந்தியாவிற்காக அதிகரன்கள் அடித்த இரண்டாவது வீராங்கனையாக தடம்பதித்தார்.
மதுரையிலிருந்து கிரிக்கெட் கனவை கண்ட இளம் வீராங்கனை கமலினி, 17 வயதில் இந்திய அணிக்காக விளையாட தகுதிபெற்றிருப்பது, மிகப்பெரிய சாதனையாகும். இது தமிழ்நாட்டில் இருக்கும் பல்வேறு பெண் கிரிக்கெட்டர்களின் நம்பிக்கைக்கு புத்துயிர் கொடுத்துள்ளது.
இந்த 13 வயது சிறுவனின் திறமை நம்பமுடியாததாக இருக்கிறது, இவர்மீது பணத்தை இன்வெஸ்ட் செய்ய தகுதியானவர் என நெதர்லாந்தின் கிராண்ட் மாஸ்டர் அனிஸ் கிரி புகழ்ந்தபோது, செஸ் உலகமே திரும்பி பார்த்த சிறுவன் தான் தமிழகத்தைச் சேர்ந்த இளம்பரிதி.
2022ஆம் ஆண்டு நடைபெற்ற யு14 செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை 9.5/11 என்ற அற்புதமான புள்ளியுடன் வென்ற இளம்பரிதிக்கு டச் கிராண்ட் மாஸ்டர் வழங்கிய 2 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான கிராண்ட் மாஸ்டர் அனிஷ் கிரியின் புகழாரத்திற்கு பிறகு செஸ் உலகில் கவனம் பெற்ற இளம்பரிதி, தமிழக அரசின் ஆதரவை பெற்றார்.
சென்னையில் 2009ஆம் ஆண்டு பிறந்தவரான இளம்பரிதி சிறு வயதிலிருந்தே செஸ் விளையாட்டின் மீது தீராத ஆர்வம் கொண்டவராக இருந்தார். தன்னுடைய பயிற்சியாளர் ஷ்யாம் சுந்தரிடம் பயிற்சி பெற்ற இளம்பரிதி, தனது நுட்பங்களையும், வியூகங்களையும் நாளுக்கு நாள் மெருகேற்றிக்கொண்டார்.
தன்னுடைய அபார திறமையை போஸ்னியா மற்றும் ஹெர்ஸிகோவினாவில் நடைபெற்ற சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் வெளிப்படுத்திய இளம்பரிதி, கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்கு தேவையான கடைசி நார்மை பூர்த்தி செய்தார். அத்துடன் 2500 எலோ புள்ளிகளை கடந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று வரலாறு படைத்தார். இதன்மூலம் இந்தியாவின் 90வது கிராண்ட் மாஸ்டராகவும், தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டராகவும் மாறி சாதனை படைத்தார். தமிழகத்திலிருந்து மற்றொரு திறமையாளன் செஸ் உலகில் பிரகாசித்து உலகை ஆச்சரியப்படுத்த ஆயத்தமாகியுள்ளான்!
சென்னையில் இருக்கும் ஒரு சிறிய குடிசை பகுதியிலிருந்து, ஒரு ஆட்டோ ட்ரைவரின் மகள் இந்திய அணிக்கு உலக அரங்கில் கபடி போட்டியில் தங்கம்பெற்றுத்தருவார் என்று சொல்லியிருந்தால் பலபேர் நம்பியிருக்க மாட்டார்கள், உண்மையை சொல்லபோனால் நம்பவே மறுத்தார்கள். ஆனால் அத்தனை அவநம்பிக்கையையும் உடைத்தெறிந்து இந்தியாவிற்கே தங்கம் வென்றுகொடுத்து சென்னையின் அடையாளமாக, கண்ணகி நகரின் அடையாளமாக, இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ளார் ஒரு ஆட்டோ ட்ரைவரின் 17 வயது மகள் கார்த்திகா..
சென்னை கண்ணகி நகரின் 17 வயது கபடி வீராங்கனையான கார்த்திகா, தன்னுடைய அபாரமான திறமையினால் இந்திய யு18 கபடி அணிக்கான துணைக்கேப்டனாக உயர்ந்ததோடு இந்தியாவிற்காக தங்கத்தையும் வென்றுகொடுத்து வரலாறு படைத்துள்ளார்.
நடப்பாண்டு 2025-ல் பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி தங்கம் வென்று வரலாறு படைத்தது. இறுதிப்போட்டியில் ஈரான் அணியை 75-21 என்ற கணக்கில் தூசுத்தட்டிய இந்திய மகளிர் அணி, தங்கத்தை தட்டிச்சென்றது.
பெரிய கட்டமைப்பு இல்லாத சென்னையின் சிறிய இடத்திலிருந்து உலகையே திரும்பிபார்க்க வைத்த கார்த்திகா, முறையான இருப்பிட வசதி, விளையாட்டு பொருட்கள் வசதி, போட்டிகளுக்கு சென்றுவர பணவசதி என எதுவுமே இல்லாமல், மிகவும் கஷ்டமான பின்னணியிலிருந்து அயராது உழைத்து இந்திய அணியின் துணைக்கேப்டனாக உயர்ந்துள்ளார். சக வீரர்களால் எக்ஸ்பிரஸ் கார்த்திகா என அழைக்கப்படும் கண்ணகி நகர் கார்த்திகா, இந்தியாவின் அடையாளமாக விரைவில் உயர்ந்து சிகரம் தொடும்நாள் தொலைவில் இல்லை!
அதேபோல பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய ஆடவர் அணியும் தங்கம் வென்று சாதனை படைத்தது. அதில் ஒரு அங்கமாக இருந்த திருவாரூர் மாவட்டம் வடுவூரை சேர்ந்த 17 வயது இளம்வீரரான அபினேஷ் மோகன்தாஸ், இந்திய அணி தங்கம் வெல்வதில் முக்கிய பங்காற்றினார்.
சிறுவயதிலேயே தந்தை மோகன்தாஸை இழந்த அபினேஷ், தாயார் தனலட்சுமி மற்றும் 2 சகோதரிகள் உடன் கடினமான காலக்கட்டத்தை கடக்க வேண்டியிருந்தது. தன்னுடைய தாயாரால் 3 பேரையும் படிக்கவைக்க முடியாத சூழல் இருந்தது என அபினேஷ் ஒருமுறை குடும்பசூழலின் கஷ்டத்தை பகிர்ந்துள்ளார். 7ஆம் வகுப்புவரை அரசு உதவிபெறும்பள்ளியில் பயின்ற அபினேஷ், பின்னர் தேனியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டுப் பள்ளியில் படித்து தன் திறமையை மெருகேற்றிக்கொண்டார். 2 கோச்கள் உதவிசெய்ததன் மூலம் தன்னுடைய ஆட்டத்திறனை உயர்த்திக்கொண்ட அபினேஷ், தங்கம் வெல்வதற்கு முன்பாகவே ‘தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுணிய விடமாட்டேன்’ என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
சொன்னதைப்போலவே செய்துகாட்டியுள்ள அபினேஷ், அடுத்தடுத்த காலங்களில் இந்தியாவின் அடையாளமாக உருவெடுப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்திய அணிக்காக உலகக்கோப்பை வெல்லவேண்டும் என்பதே ஒவ்வொரு விளையாட்டு வீரனின் பெரிய கனவாக இருக்கும், அதிலும் ஒரு விளையாட்டுப்பிரிவுன் முதல் உலகக்கோப்பையை இந்தியாவிற்கு வென்றுகொடுத்தால் அது எப்படியான வெற்றியாக இருக்கும். அதையே ஒரு தமிழன் உலகக்கோப்பையை இந்தியாவிற்காக வென்றால் அது ஆனந்தத்திலும் பேரானந்தமாக இருக்கும் அல்லவா, அப்படி ஒரு சாதனையை தான் படைத்துள்ளார் தமிழகத்தின் கோ-கோ வீரர் சுப்பிரமணி.
சர்வதேச 'கோ கோ' கூட்டமைப்பு சார்பில் முதல் முறையாக 'கோ கோ' உலக கோப்பையானது 2025-ம் ஆண்டு நடத்தப்பட்டது. கோ கோ உலகக்கோப்பையின் முதல் சீசன் இந்தியாவில் உள்ள புதுடெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் ஜனவரி மாதம் நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் 20 அணிகளும், பெண்கள் பிரிவில் 19 அணிகளும் முதல் உலகக்கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின.
தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இந்தியா மற்றும் நேபாள அணிகள், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு இரண்டிலும் இறுதிப்போட்டியை எட்டி அசத்தினர். பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 78-40 என்ற புள்ளி கணக்கில் இந்திய பெண்கள் அணியும், 54-36 என்ற புள்ளி கணக்கில் இந்திய ஆண்கள் அணியும் நேபாளத்தை வீழ்த்தி கோப்பை வென்று வரலாறு படைத்தனர்.
அறிமுக சீசனிலேயே முதல் கோ-கோ உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது சுப்ரமணி கீ பிளேயராக உருவெடுத்தார். தமிழகத்திலிருந்து கோகோ போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் வீரர் சுப்பிரமணி ஆவார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த இவருடைய தந்தை ஒரு லாரி ஓட்டுநர் மற்றும் தாய் தினசரி கூலி தொழிலாளி தான். மிகவும் கடினமான சூழல் இருந்தபோதும் மகன் மீது நம்பிக்கை இழக்காத பெற்றோர்கள் இருவரும், மகன் படிப்பதற்காக லோன் எடுத்து கல்வியை தொடரச்செய்துள்ளனர். இரண்டு மகன்கள் மீது எப்போதும் அவர்களுக்கு நம்பிக்கை குறைந்ததே இல்லை..
தந்தை மற்றும் தாய் இருவரின் மன உறுதியை பிடிப்பாக பற்றிக்கொண்ட சுப்பிரமணி, பசி மற்றும் தொழில்முறை விளையாட்டை பின்தொடர பணமில்லாத சூழலில் துவண்டு போகும்போதெல்லாம் அவருடைய பாட்டி தான் அவரை முன்னேக்கி செல்ல உந்தினார் என கூறியுள்ளார்.
குடும்பம் பக்கபலமாகவும், மூத்தசகோதரர் சரவணன் முன்னோடியாகவும் இருக்க தமிழ்நாடு அளவில் பட்டையை கிளப்பிய சுப்ரமணி, கோகோ உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். உலகக்கோப்பை காலிறுதியில் இலங்கை அணிக்கு எதிராக தனியாளாக போட்டியை வென்றுகொடுத்த சுப்பிரமணி சிறந்த தாக்குதல்வீரருக்கான விருதை வென்றார். இந்த இளம் தமிழனின் பாதம் பல கோப்பைகளை இந்தியாவிற்காக வென்றுகொடுக்க தயாராக இருக்கிறது.
2025 உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 22 வயதேயான எல் கீர்த்தனா, ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு, குழுப்பிரிவு என மூன்றிலும் 3 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
மூட்டைத்துக்கும் கூலி தொழிலாளியான லோகநாதன் தான், தன்னுடைய மகள் கீர்த்தனாவின் 3 வயதில் அவருடைய கையை பிடித்து கேரம் விளையாட கற்றுத்தந்துள்ளார். ஆனால் அனைத்துமாக இருந்த தந்தையின் மறைவு கீர்த்தனாவின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்டது. 15 வயதில் பள்ளிப்படிப்பை நிறுத்திய கீர்த்தனா, தன்னுடைய கேரம் விளையாட்டையும் பாதியிலேயே நிறுத்தும் நிலை ஏற்பட்டது. குடிசை வீடு, பசி, நிதித்தேவை அனைத்தையும் கடந்துவந்து வெற்றி கண்டிருக்கும் கீர்த்தனா, வண்ணாரப்பேட்டையிலிருந்து கனவுகண்டு வெற்றிக்கண்டுள்ளார். தான் மட்டுமில்லாமல் அங்கு கஷ்டப்படும் அனைத்து இளம் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையையும் முன்னேற்ற வேண்டும் என்ற குறிக்கோளை கண்டுள்ளார் உலகக்கோப்பை சாம்பியன் எல் கீர்த்தனா.
அதேபோல சென்னை காசிமேட்டை சேர்ந்த காசிமாவும் கேரம் உலகக்கோப்பை ஒற்றையர் பிரிவில் வெண்கலமும், இரட்டையர் பிரிவில் வெள்ளி மற்றும் குழுவாக தங்கமும் வென்று அசத்தினார்.