சஞ்சய் ராய் pt web
இந்தியா

“குற்றவாளிக்கு மரண தண்டனைதான் வேண்டும்...” - விடாத மேற்கு வங்க அரசு... நீதிமன்றத்தில் மேல்முறையீடு

பெண் மருத்துவர் கொலை வழக்கில் மேற்கு வங்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

அங்கேஷ்வர்

சஞ்சய் ராய்க்கு தண்டனை அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம்தேதி மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர். ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது பெண் முதுகலை பயிற்சி மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் ராய் என்பவர் குற்றவாளி என கடந்த சனிக்கிழமை கொல்கத்தாவின் சியால்டா நீதிமன்ற நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பளித்திருந்தார்.

நேற்று குற்றவாளியின் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி குற்ற வாளி சஞ்சய் ராய்க்கு வாழ்நாள் ஆயுள் தண்டனையோடு, 50, 000 ரூபாய் அபாரதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். உயிரிழந்த பெண் மருத்துவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக 17 லட்சம் வழங்கவேண்டும் என மேற்கு வங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டார்.

சஞ்சய் ராய்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடந்த இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து, நாடுமுழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது. பின் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற சிபிஐ, விசாரணையில் முக்கிய குற்றவாளி சஞ்சய் ராய் என்று உறுதிப்படுத்தியது. ஆகஸ்ட் 13 ஆம் தேதி சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நாள்முதல், 120 க்கும் மேற்பட்ட சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து 66 நாள் ரகசிய விசாரணையை மேற்கொள்ளப்பட்டது. குற்றத்தில் சஞ்சய் ராயின் தொடர்பை உறுதிப்படுத்த, டிஎன்ஏ போன்ற மாதிரிகள் எடுக்கப்பட்டன. பல்வேறு சோதனை முடிவுகள் சிபிஐயால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

தீர்ப்புக்கு பெற்றோர் அதிருப்தி

வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் போது இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்திருந்தது. அரசியல் ரீதியாகவும் இந்த விவகாரத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு கடுமையான விமர்சனங்களையும் நெருக்கடியையும் எதிர்கொண்டது.

போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர மம்தா மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. தொடர் போராட்டங்கள் காரணமாக கொல்கத்தா காவல் ஆணையர் உட்பட பல மூத்த அதிகாரிகளை மாற்ற வழிவகுத்தது.

சஞ்சய் ராய்

2023 நவம்பரில் தொடங்கிய விசாரணை, பாதிக்கப்பட்டவரின் பெற்றோர், தடயவியல் நிபுணர்கள் மற்றும் சக ஊழியர்கள் உட்பட சாட்சிகளின் அடையாளங்களைப் பாதுகாக்க ரகசியமாக தனி நீதிமன்ற அறையில் நடத்தப்பட்டது. விசாரணையின் போது மொத்தம் 50 சாட்சிகள் வாக்குமூலங்களை வழங்கினர். வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பின் நீதிபதி, இது அரிதிலும் அரிதான வழக்கு அல்ல என கூறி ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார் . இந்த தீர்ப்பிற்கு பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

மம்தா பானர்ஜி அதிருப்தி

இந்தத் தீர்ப்பில் திருப்தி இல்லை எனக்கூறியிருந்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மரண தண்டனை கோரிய நிலையில், நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது என அதிருப்தி தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த அவர், “இது மரண தண்டனைக்கு தகுதியான ஒரு கொடூரமான குற்றம் என்று நான் உறுதியாக உணர்கிறேன். குற்றவாளிக்கு மரணதண்டனை வ்திக்க வேண்டும் என்று நாங்கள் உயர்நீதிமன்றத்தில் வாதிடுவோம்” எனத் தெரிவித்திருந்தார்.

kolkataDoctor

மேலும், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியிருந்த அவர், “முதல்நாளில் இருந்தே நாங்கள் மரண தண்டனையை கோரி வந்தோம். ஆனால், நீதிமன்றம் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்துள்ளது. நாங்கள் இன்னும் எங்களது கோரிக்கையில் உறுதியாக இருக்கிறோம். வழக்கு எங்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டது. வழக்கு கொல்கத்தா காவல்துறையிடம் இருந்திருந்தால் அவருக்கு மரண தண்டனையை உறுதி செய்திருப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.

ஆயுள்தண்டனைதான் வேண்டும்

இந்நிலையில்தான் கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேற்குவங்க அரசு மேல்முறையீடு செய்துள்ளது. வழக்கறிஞர் கிஷோர் தத்தா என்பவர் சீல்டா நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து, நீதிபதி தேபாங்ஷு பாசக் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார்.

குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்ததற்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மேல்முறையீட்டு மனுவில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.