‘அதெப்படி திமிங்கலம்..’ - யாசகம் பெறுபவரிடம் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்.. வைரலாகும் வீடியோ
ஐ போன் என்பது ஒவ்வொரு இளைஞர்களின் விருப்ப பட்டியல் எனப்படும் பக்கெட் லிஸ்ட் கனவுகளில் ஒன்று. கிட்டதட்ட ஒரு இருசக்கர வாகனத்தை விட கூடுதல் விலை கொண்ட ஐ போனை வாங்க, வேலைக்கு செல்வோருக்கு கூட மாத தவணை தேவைப்படுகிறது. ஆனால், ராஜஸ்தானில் யாசகம் பெறுபவர் ஒருவர் லேட்டஸ்ட் மாடலான ஐ போன் 16 ப்ரோ மேக்ஸை வைத்திருக்கிறார். அதுவும் மொத்த விலையில் அவர் அதனை வாங்கினாராம்.
ராஜஸ்தான் அஜ்மீரில் யாசகம் செய்து வாழும் மாற்றுத்திறனாளி ஒருவர் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் உபயோகிப்பது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த ஐபோன் 16 ப்ரோ மேக்ஸின் விலை கிட்டத்தட்ட ரூ.1 லட்சத்து 45 ஆயிரம். எப்படி ஐ போன் வாங்கினீர்கள் என இளைஞர் ஒருவர் கேட்க, யாசகம் எடுத்த பணத்தில் வாங்கியதாகவும், மாத தவணை இன்றி மொத்த தொகை கொடுத்து ஐ போன் வாங்கியதாகவும் அந்நபர் தெரிவித்துள்ளார்.
இந்த ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில்தான் சந்தையில் வெளியிடப்பட்டது. சமீபத்தில் வெளியான விலை உயர்ந்த போன் ஒன்றை முழுத் தொகையையும் செலுத்தி யாசகம் பெறுபவர் வாங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையாக பதிலளித்து வருகின்றனர். அதேநேரம் சில பயனர்கள் இந்த வீடியோவின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தினர். இந்த வீடியோ உண்மையாக நிகழ்ந்ததா அல்லது வீடியோவிற்காக படமாக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால், 3 நாட்களுக்கு முன்னால் பதிவிடப்பட்ட இந்த வீடியோ தற்போதுவரை 47,500+ லைக்குகளை வாங்கியுள்ளது. 400+ கமெண்ட்களைப் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 20 லட்சம்+ பார்வையாளர்கள் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர்.