முழு வீச்சில் செயல்படாத மலர் ஏல மையம்: விவசாயிகள் அவதி
கண்களை கொள்ளை கொள்ளும் இந்த கொய்மலர்களை ஆண்டுக்கு 45 ஆயிரம் மெட்ரிக் டன் என்ற அளவில் சாகுபடி செய்யும் இடம் ஒசூர். கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற நாட்களில் மலர்கள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக காதலர் தின கொண்டாட்டங்களுக்காக ஒரு கோடி ரூபாய் அளவுக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காதலர்களுக்கு பிடித்த சிவப்பு ரோஜா உட்பட 30 வகையான ரோஜா மலர்கள் ஓசூரில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒசூரில் உற்பத்தி செய்யப்படும் ரோஜா மலா்கள் 2 நாள்கள் குளிா்சாதன அறைகளில் வைத்து பதப்படுத்தி, இடைத்தரகர்களால் குளிா்சாதன லாரிகள் மூலம் பெங்களூரு கொண்டு செல்லப்படுகின்றன. பின்னர் விமானத்தில் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நியூசிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜொ்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. நாட்டின் பிற பகுதிகளுக்கும் இந்த மலர்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் மலர் விவசாயிகள் பெரும் தொகை செலவிட வேண்டிய சூழல் இருக்கிறது.
இதன்காரணமாகவே அதிமுக ஆட்சிக்காலத்தில் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையோரம், 20.2 கோடி ரூபாய் செலவில் சர்வதேச ஏல மையம் கட்டும் பணி நடைபெற்றது. இதில் 2,000 டன் சேமிப்பு கிடங்கு, குளிர்பதன கிடங்கு, ஏல மையம், தரம் பிரிப்பு கூடம், 16 கடைகள், கூட்டரங்கம், பயிற்சி அரங்கம் ஆகிய நவீன வசதிகளுடன் 7.63 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு 2021-ஆம் ஆண்டு பணிகள் நிறைவுபெற்றன. முதலமைச்சர் ஸ்டாலின் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஏல மையத்தை திறந்து வைத்தார்.
இந்த மலர் ஏல மையம் மூலம், விவசாயிகள் தங்களது கொய்மலர்களை குளிர்பதன கிடங்குகளில் சேமித்து, வெளிநாடுகளுக்கு ஆன்லைன் மூலம் விற்பனை செய்து, லாபம் ஈட்டும் சூழல் உருவாகும் என விவசாயிகள் நினைத்தனர். மகிழ்ச்சி அவர்களுக்கு நிலைக்கவில்லை, 3 ஆண்டுகளை கடந்தும், சர்வதேச மலர் ஏல மையம் முழு வீச்சில் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் விவசாயிகள் இடைத்தரகர்களிடம் தங்களது லாபத்தை இழக்கின்றனர்.
ஏல மையம் முழுமையான பயன்பாட்டுக்கு வந்தால் தாங்கள் உரிய லாபத்தை பெற முடியும் எனத் தெரிவிக்கின்றனர் விவசாயிகள். இதுகுறித்து தோட்டக்கலை துறை உதவி இயக்குநரை பலமுறை தொடர்பு கொண்ட போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. மாவட்ட ஆட்சியர் சரயு வை தொடர்பு கொண்டு கேட்டபோது கடந்த மாதம் கூட 4 ஆயிரம் மலர்கள் ஏலம் விடப்பட்டதாகவும் தெரிவித்தார், அது ஏல மையம் எனவும், ஏற்றுமதி மையம் இல்லை எனவும் குறிப்பிட்டார்.