குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வெறும் சடங்கு சம்பிரதாயமாக இல்லாமல், இம்முறை தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் ஒரு சூடான விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஆளும் பாஜகவும், எதிரணியான காங்கிரசும், தென்னிந்தியாவை குறிவைத்து தமது அரசியல் சதுரங்க காய்களை கச்சிதமாக நகர்த்தியிருக்கின்றன. இதுகுறித்து பெருஞ்செய்தி பகுதியில் காணலாம்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தங்கள் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக தமிழகத்தின் சி.பி. ராதாகிருஷ்ணனை அறிவித்தது, வெறும் வேட்பாளர் தேர்வாக மட்டுமின்றி, நுட்பமான அரசியல் நகர்வாகப் பார்க்கப்பட்டது. தமிழக அரசியல் களத்தில் வலுவான கால்தடம் பதிக்கத் துடிக்கும் பாஜக, தமிழருக்கு பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையிலும், திமுகவுக்கு செக் என்ற வகையிலும் திறமையாக காய் நகர்த்தியிருப்பதாகச் சொன்னார்கள் அரசியல் பார்வையாளர்கள். கூடவே, அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்க ஆதரவு தெரிவிக்காமல் வரலாற்றுத் தவறு செய்த திமுக மீண்டும் அதே தவறைச் செய்யக்கூடாது என்றும் பாஜக தலைவர்கள் பேச ஆரம்பித்தனர். இதற்கு உரிய பதில் அளித்தாலும்கூட, தர்மசங்கடமான சூழலுக்கு ஆளானது திமுக.
அதே சமயம், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஆந்திராவின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டியைத் தேர்வு செய்ததன் மூலம், அரசியல் விளையாட்டு எங்களுக்கும் தெரியும் என்று காட்டியிருக்கிறார்கள் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள். இந்தத் தேர்வு, ஆந்திர அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும், பாஜக ஆதரவாளர்களாக இருக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும், ஜெகன் மோகன் ரெட்டிக்கும் ஒரு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
பாஜக கூட்டணியில் இருக்கும் பெரிய கட்சியான தெலுங்கு தேச கட்சிக்கு 18 எம்.பி.க்கள் உள்ள நிலையில், அதன் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது மாநிலத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதேபோல 11 எம்.பி- க்களை வைத்திருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும், ஆந்திராவின் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா, அல்லது மத்திய அரசின் விருப்பத்திற்கு வளைந்து கொடுக்கிறாரா என்ற கேள்விக்கு ஆளாகியுள்ளார். தங்கள் முடிவு அம்மாநிலத்தில் பெரும்பானமையாக இருக்கும் ரெட்டி சமூகத்தினரையும் அதிர்ப்தி அடையச் செய்துவிடக்கூடாது என்ற பதற்றமும் அவர்களுக்கு இருக்கிறது.
இந்தியா கூட்டணியின் வேட்பாளர் தேர்வு ஆந்திராவில் மட்டுமின்றி, தெலங்கானா மாநில அரசியலிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. காங்கிரஸை எதிர்த்து அரசியல் செய்துவரும், பிஆர்எஸ் கட்சிக்கு நான்கு மாநிலங்களவை எம்.பி.க்கள் இருக்கிறார்கள். அவர்கள் காங்கிரஸ் ஆதரவு பெற்ற தெலுங்கரான சுதர்சன் ரெட்டியை ஆதரிப்பார்களா... அல்லது பாஜக வேட்பாளரான தமிழரை ஆதரிப்பார்களா என்பதே தெலங்கானாவின் மில்லியன் டாலர் கேள்வியாகியிருக்கிறது.
எப்படி குடியரசு துணைத் தலைவர் தன்கரின் திடீர் பதவி விலகல் பெரும் விவாதமானதோ, அதைப்போலவே, அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலும் தேசிய அரசியலின் நகர்வுகளைத் தீர்மானிக்கும் புத்திசாலித்தனமான அரசியல் சதுரங்கமாக மாறியிருக்கிறது!