தமிழ்நாடு அரசியல் களம் இன்று| விஜயின் மதுரை வருகை முதல் இண்டியா கூட்டணியின் வேட்பாளர் வரை !
1) தவெக கொடிக்கு இனி தடையில்லை... உயர்நீதிமன்றம் உத்தரவு!
தவெக கொடியில் சிவப்பு, மஞ்சள் நிறத்திற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தவெக கொடி தங்களது சபை கொடி போன்று உள்ளதாகவும், இதனால் அதில் சிவப்பு, மஞ்சள் நிறத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், இரு கொடிகளை ஒப்பிட்டால், தவெக கொடி மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் எனக் கூற முடியாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.
2) குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் INDIA கூட்டணி சார்பில் சுதர்சன ரெட்டி அறிவிப்பு !
துணைக் குடியரசுத்தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த மகாராஷ்டிரா ஆளுநராக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இண்டியா கூட்டணி வேட்பாளராக முன்னாள் நீதிபதி சுதர்சன ரெட்டியை அறிவித்துள்ளது.
3) மகளிர் உரிமைத்தொகை குறித்து கேள்வி எழுப்பிய மக்களை ‘மெண்டல்கள் போல் பேசுகின்றனர்” என திமுக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு !
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்காக மக்களை அழைப்பதற்கு ஆர்.கே.நகர் பகுதி எம்.எல்.ஏ எபினேசர் தொண்டர்களுடன் சென்றார். அப்போது அங்கிருந்த பெண்கள் மகளிர் உரிமைத்தொகை குறித்து முறையிட்டனர். இதற்கு எம்.எல்.ஏ எபினேசர் பதிலளித்தார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரம் அடைந்த எம்.எல்.ஏ எபினேசர், அந்த பகுதி மக்கள் மெண்டல்கள் போல பேசுவதாக தெரிவித்தார். இவ்வாறு எம்.எல்.ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
4) திமுக மூத்த தலைவர்கள் மீதான வழக்குகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை.,
திமுக மூத்த தலைவர்கள் ஜெகத்ரட்சகன் மற்றும் ஐ.பெரியசாமி மீதுள்ள வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஜெகத்ரட்சகன் மீது சிங்கப்பூர் நிறுவன பங்குகளை அனுமதி இல்லாமல் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஐ.பெரியசாமி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த இரண்டு முக்கியத் தலைவர்கள் தொடர்பான வழக்குகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது
5) “பொதுக்கூட்டத்தில் நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநரே பேஷண்டாக மாறிவிடுவார்” என எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை..!
`மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’என்ற பிரச்சார பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று இரவு எடப்பாடி பழனிசாமி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் ஒன்று பொதுக்கூட்டத்திற்கு இடையே வந்தது. இதனால் கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, நோயாளியே போகல. வேறு வழியும் இருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு வெறும் ஆம்புலன்ஸை விட்டு மக்களை கஷ்ட படுத்துகிறார்கள். அடுத்த முறை ஆம்புலன்ஸ் வெறும் வண்டி வந்தால், பொதுக்கூட்டத்தில் நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநரே பேஷண்டாக மாறிவிடுவார் என்று எச்சரித்தார்.
6) தவெக மாநில மாநாடு வருகிற 21 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் வருகை !
ஆகஸ்ட் 21 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் 2- வது மாநில மாநாடு நடைபெறவுள்ள நிலையில் தவெக தலைவர் இன்று மதுரை சென்றடைந்தார். அங்கு மாநாட்டுப் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
7) சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க பாஜக கேட்டுள்ள நிலையில் அதற்கு கனிமொழி பதிலளித்துள்ளார் !
துணைக்குடியரசுத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்கமாறு திமுக-வை பாஜக கேட்டுக்கொண்ட நிலையில் அதற்கு கனிமொழி விளக்கம் அளித்துள்ளார். அதில், தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் மட்டும் அவர்களுக்கு தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மொழியின் மீதும் அக்கறை உள்ளதென அர்த்தமாகிவிடாது. என்று தெரிவித்துள்ளார்.
8) முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சொல்படியே செயல்படுவேன் - எம்.பி கமல்ஹாசன்
துணை ஜனாதிபதி பற்றி கமல்ஹாசனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியா கூட்டணியில் தமிழர்களுக்கு மிக நெருக்கமான ஆளுமையாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளார். எனவே, அவரது சொல்படியே செயல்படுவேன் என்று தெரிவித்தார்.