டெல்லி ஏஐ மாநாட்டில் சீனா ரோபோட்டை இந்திய தயாரிப்பாக காட்சிப்படுத்திய பல்கலைக்கழகம் மன்னிப்பு web
இந்தியா

சீன ரோபோ சர்ச்சை| உலக நாடுகள் சிரிக்கிறது என விமர்சனம்.. மன்னிப்பு கேட்ட உ.பி பல்கலைக்கழகம்!

டெல்லி ஏஐ மாநாட்டில் சீன ரோபோட்டை நம்முடையது போல் காட்டியது நாட்டின் நற்பெயருக்கு இழுக்கு எனவும், சீன ரோபோட்டுகளை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பாராட்டி பேசியது வெட்கக்கேடு என்றும் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

Rishan Vengai

டெல்லி ஏஐ மாநாட்டில் சீன ரோபோ நாயை இந்திய தயாரிப்பாக காட்சிப்படுத்திய கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் பெரும் சர்ச்சையை சந்தித்தது. ராகுல் காந்தி இதை இந்தியாவின் நற்பெயருக்கு இழுக்கு என விமர்சித்தார். பல்கலைக்கழகம் மன்னிப்பு கேட்டது, ஆனால் இது மோடி அரசின் நகைச்சுவை என ராகுல் கூறினார்.

டெல்லியில் நடைபெற்ற India AI Impact Summit 2026 என்ற AI மாநாட்டில் பிரதமர் மோடி உட்பட பலர் பங்கேற்றிருந்தனர். இதில் சீன தயாரிப்பு ரோபோட் நாயை இந்திய தயாரிப்பு என GALGOTIAS பல்கலைக்கழகத்தால் காட்சிப்படுத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சீனா ரோபோ

இந்த உண்மையை வெளிச்சம் காட்டி மக்கள் பார்வைக்கு கொண்டு வந்த நெட்டிசன்கள், ரோபோட் நாயை இந்தியா தயாரிப்பாக காட்சிப்படுத்திய GALGOTIAS பல்கலைக்கழகத்தை கடுமையாக விமரசித்தனர்.

இந்தசூழலில் இவ்விவகாரம் நாட்டிற்கே பெரிய இழுக்கு என்று விமர்சித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சீன ரோபோட்டுகளை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பாராட்டி பேசியது வெட்கக்கேடு என்றும் சாடியுள்ளார்.

ராகுல் காந்தி விமர்சனம்..

டெல்லி ஏஐ மாநாட்டில் சீன பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது இந்தியாவின் நற்பெயருக்கு இழுக்கு என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார். இதன் மூலம் மோடி அரசை பார்த்து உலக நாடுகள் நகைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். இம்மாநாட்டில் சீன ரோபோட்டுகளை பாராட்டி நமது அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பேசியது வெட்கக்கேடானது என்றம் ராகுல் சாடியுள்ளார்.

ஏஐ துறையில் உலகிலேயே நாம் முன்னிலையில் திகழவேண்டிய நிலையில் அதை ஒரு நகைச்சுவையாக மோடி அரசு மாற்றிவிட்டது என்றும் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ராகுல் காந்தியை தொடர்ந்து பொதுவெளியிலும் கடுமையான விமர்சனங்கள் ஏற்பட்ட நிலையில், இந்த ரோபோட் நாயை வைத்த பல்கலைக்கழகம் மாநாட்டிலிருந்து உடனே வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

மன்னிப்பு கேட்ட பல்கலைக்கழகம்..

டெல்லி ஏஐ மாநாட்டில், சீனா நிறுவனம் தயாரித்த ரோபோ நாயைத் தங்கள் பல்கலைக்கழகக் கண்டுபிடிப்பு என முன்னிறுத்திய நொய்டாவைச் சேர்ந்த கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.

கேமரா முன்னால் நின்ற உற்சாகத்தில் தங்கள் பிரதிநிதி தவறான தகவலைக்கூறிவிட்டதாகப் பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது. மேலும் மற்றொருவரின் கண்டுபிடிப்பை எங்களுடையது என தவறாக சித்தரிக்கும் எந்த நிறுவன நோக்கமும் இல்லை என்பதால், உங்கள் அன்பான புரிதலை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.