அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா மீது 500% வரி விதிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவின் ஏற்றுமதிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சம் எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதும் வரிவிதிப்பில் தலைகீழ் மாற்றத்தை கொண்டுவந்தார். இந்தியா அமெரிக்காவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது என்று கூறி, இந்தியா மீது 50 சதவீத வரிகளை விதித்துள்ளார் டிரம்ப். இதற்கு ரஷ்ய கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்வதையும் முக்கிய காரணமாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும், விரைவில் அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்துக்கு வரவில்லை என்றால் இந்தியா மீதான வரி அதிகரிக்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மீதான வரியை 500% வரை உயர்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க எம்.பி லிண்ட்சே கிரஹாம் கூறியுள்ளார்.
இது குறித்து சமூகவலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், புதினின் போர் இயந்திரத்திற்கு எரிபொருள் அளிக்கும் நாடுகளைத் தண்டிப்பதை முன்மொழியப்பட்ட புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் இதற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இந்த சட்டத்துக்கு ரஷ்யா மீதான தடைகள் சட்டம் 2026 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பிரேசில், சீனா, இந்தியா ஆகிய நாடுகள் மீது குறைந்தபட்சம் 500% வரை வரி விதிக்கமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில், அமெரிக்கா அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்ந்து வருகிறது. இந்தியாவின் மொத்தஏற்றுமதியில் சுமார் 17.5 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அமெரிக்க வரிவிதிப்பின் காரணமாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஆடை, இறால், ஆபரண நகைகள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுவது கடுமையாக பாதிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் அமெரிக்காவின் இந்த சட்டம் அமலுக்கு வந்து இந்தியா மீது கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டால், அது இந்திய ஏற்றுமதிக்கு மிகப்பெரிய அடியாக மாறும் என்ற அச்சம் எழுந்துள்ளது.