இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50% வரி.. Tariff Vs Tax : இரண்டுக்குமான வேறுபாடு என்ன?
அமெரிக்கா இந்தியாவுக்கு 50% டாரிஃப் விதித்ததால், ஜவுளி, தோல் பொருட்கள் உள்ளிட்ட ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டாரிஃப் என்பது வர்த்தகப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி, இது உள்நாட்டு தொழிலைப் பாதுகாக்கும். இந்தியா பதிலடி நடவடிக்கையில் ஈடுபடாமல், மாற்று ஏற்றுமதி வாய்ப்புகளை தேடுகிறது.
டாரிஃப் (TARIFF) என்ற வார்த்தையை நாம் சமீபகாலமாக அதிகம் கேட்டு வருகிறோம். இந்தியா மீது அமெரிக்கா 50% டாரிஃப் விதித்திருப்பதால், ஜவுளி, தோல் பொருட்கள், ரசாயனங்கள், இயந்திரங்கள் என இந்தியாவின் பல்வேறு துறைகளின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், டாரிஃப் என்றால் என்ன, அது டாக்ஸிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்பதைப் பார்ப்போம்.
பொதுவாக TAX என்று அழைக்கப்படும் `வரி’ விதிப்பானது, ஒரு நாட்டின் அரசாங்கம் தனது வருவாயை பெருக்குவதற்காக தனது மக்கள்மீது அதாவது தனிநபர்கள் பயன்படுத்தும் பொருட்கள்மீது, வணிக நிறுவனங்கள் மீது, உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து குறிப்பிட்ட தொகையை வரியாக வசூலிக்கும். ஆனால், டாரிஃப் என்பது ஒரு நாடு இன்னொரு நாட்டிலிருந்து ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யப்படும் வர்த்தகப் பொருட்களுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச வரி அல்லது வர்த்தக தடையை குறிப்பதாக உள்ளது. அதாவது, தங்கள் உள்நாட்டுத் தொழிலைப் பாதுகாக்கவும், பிற நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களால் தனது நாட்டில் ஏற்படும் போட்டித்தன்மை, வர்த்தக ஆதிக்கத்தை குறைப்பதற்காகவும் இந்த வரி விதிக்கப்படுகிறது.
பெரும்பாலும் தனக்கு கட்டுப்படாத பிற நாடுகளை மிரட்டிப் பணிய வைக்கவே இந்த முயற்சியை வல்லரசு நாடுகள் எடுக்கின்றன. எனவேதான் இதை ’கட்டணப் போர்’ என்றும் அழைக்கிறார்கள். தற்போது, இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% டாரிஃப் விதித்திருப்பதால், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக இறக்குமதி கட்டணத்தை நாம் செலுத்தவேண்டும். இதனால், பொருட்களின் விற்பனை விலை பன்மடங்கு உயரும். அதை வாங்கும் மக்களுக்கு சுமை அதிகரித்து, வாங்குவதை குறைத்துக்கொண்டால், பொருட்களின் விற்பனையும் குறைந்து வர்த்தகத்தில் நஷ்டத்தையே இந்திய ஏற்றுமதியாளர்கள் சந்திப்பார்கள்.
தொடக்கத்தில் அமெரிக்கா மீது டாரிஃப் விதித்தபோது, பதிலடியாக சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கு டாரிஃப் விதித்தது. ஆனால், இந்தியா இதுபோன்ற பலப்பரீட்சையில் ஈடுபடவில்லை. காரணம், இந்தியாவும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய், மின்னணு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்கிறது. அமெரிக்காவை பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தியாவும் பதில் வரி விதித்தால், ஏற்றுமதி இறக்குமதி இரண்டிலும் இந்தியா பெரும் சேதாரத்தை சந்திக்கும். எனவே தான், இந்தியா மாற்று ஏற்பாடாக அமெரிக்காவுக்கு பதில் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளை தேடிவருகிறது.