"விசா என்பது உரிமை அல்ல..” | இந்திய மாணவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அமெரிக்கத் தூதரகம்!
அமெரிக்காவில் தங்கியிருக்கும்போது அந்நாட்டின் சட்டதிட்டங்களை மீறுவது மாணவர் விசாவைப் பாதிக்கும் என அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது.
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்ந்து படிக்கும் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால், கடந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவின் அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், பல அதிரடி கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். அதில், விசா கட்டுப்பாடும் ஒன்று. குறிப்பாக, H1B விசா, செப்டம்பர் 2025 முதல் $100,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தவிர, அதில் நிறைய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமெரிக்காவில் தங்கியிருக்கும்போது அந்நாட்டின் சட்டதிட்டங்களை மீறுவது மாணவர் விசாவைப் பாதிக்கும் என அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது. இதுகுறித்த அது வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்காவில் கல்வி பயிலும் மாணவர்கள் ஏதேனும் ஒரு குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டாலோ அல்லது அந்நாட்டுச் சட்டங்களை மீறினாலோ, அவர்களின் விசா உடனடியாக ரத்து செய்யப்படலாம். சட்ட விதிகளை மீறும் மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படவும் வாய்ப்புள்ளது.
ஒருமுறை விசா ரத்து செய்யப்பட்டாலோ அல்லது நாடு கடத்தப்பட்டாலோ, வருங்காலத்தில் மீண்டும் அமெரிக்க விசா பெறுவதற்கு அவர்கள் தகுதியற்றவர்களாகக் கருதப்படலாம். அமெரிக்க விசா என்பது ஒவ்வொருவரின் உரிமை அல்ல, அது வழங்கப்பட்ட ஒரு சலுகை’ என்பதைத் தூதரகம் அழுத்திச் சொல்லியுள்ளது. மாணவர்கள் தங்களது பயணத்தையோ அல்லது எதிர்காலத்தையோ பாதிக்கும் வகையில் எந்தச் செயலிலும் ஈடுபட வேண்டாம் என்றும், அமெரிக்க சட்டங்களை முறையாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக, கடந்த ஆண்டு மே மாதம், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம், ”உங்கள் பல்கலைக்குத் தெரிவிக்காமல் வகுப்புகளைத் தவிர்த்தாலோ அல்லது படிப்பை பாதியில் நிறுத்தினால் மாணவர் விசா ரத்து செய்யப்படும்” எனத் தெரிவித்திருந்தது. அமெரிக்காவில் நிலவும் சமீபத்திய சூழல்கள் மற்றும் விசா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

