'2 மாதம் தான்.. எங்களுக்கு கிரீன்லாந்து வேண்டும்..' மீண்டும் மிரட்டல்விடுத்த ட்ரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்தை வாங்க முயற்சிக்கிறார். டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ட்ரம்பின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. கிரீன்லாந்து பாதுகாப்பு முக்கியத்துவம் கொண்டது என்பதால், ட்ரம்ப் தொடர்ந்து இதை வலியுறுத்துகிறார். டென்மார்க் பிரதமர் இதை அர்த்தமற்றது என கூறியுள்ளார்.
க்ரீன்லாந்து என்பது டென்மார்க்கின் காலணி நாடாக இருந்தது. ஆனால், 2009ஆம் ஆண்டு க்ரீன்லாந்து சுயாட்சி பெற்றது. முழு சுதந்திர நாடாக தன்னை அறிவித்துக்கொள்ளவும் க்ரீன்லாந்துக்கு உரிமை இருக்கும் நிலையில், டென்மார்க் வழங்கும் மானிய உதவிகளுக்காக அந்நாட்டை க்ரீன்லாந்து சார்ந்திருக்கிறது. சுருக்கமாக, டென்மார்க் அரசின் கீழ் கிரீன்லாந்த் சுயாட்சியுடன் செயல்படுகிறது. ஆனால், பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை தொடர்பான அதிகாரங்கள் டென்மார்க் வசமே உள்ளன. இங்கு சுமார் 57000 மக்கள் வசிக்கின்றனர்.
அத்தகைய க்ரீன்லாந்துதான் அமெரிக்காவுக்கு மிகவும் தேவையாக இருக்கிறது. ஏனெனில், க்ரீன்லாந்து வட அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் அமைந்திருக்கிறது. எனவே, க்ரீன்லாந்தை பிராந்திய ரீதியிலான பாதுகாப்புக்கு முக்கியமான இடமாக அமெரிக்கா கருதுகிறது. எனவேதான், க்ரீன்லாந்து குறித்து தொடர்ச்சியாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசி வருகிறார். கிரீன்லாந்தை வாங்க முயற்சிப்பதாகவும், அதன் மூலோபாய முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தி வருகிறார். ஆனால், டென்மார்க்கும் க்ரீன்லாந்தும் தொடர்ந்து இதற்கு மறுப்பு தெரிவித்தும், விருப்பமில்லை என்றும் கூறி வருகின்றன.
அந்த வகையில் சமீபத்தில்கூட ட்ரம்ப் அதேபோன்ற வழக்கமான கருத்தைத் தெரிவித்திருந்தார்.
“தேசிய பாதுகாப்பு கோணத்தில் பார்த்தால் கிரீன்லாந்து நமக்கு அவசியம். இப்போதே அது மிக முக்கியமான, மூலோபாயத் தளம். கிரீன்லாந்தைச் சுற்றி ரஷ்ய மற்றும் சீன கப்பல்கள் நிறைந்துள்ளன” எனத் தெரிவித்திருந்தார். அதேபோல் The Atlantic இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இதே கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். “நமக்கு கிரீன்லாந்து தேவை, நிச்சயமாக தேவை. பாதுகாப்புக்காகவே அது அவசியம்” என அவர் கூறியிருந்தது அப்போதே கடும் எதிர்வினைகளைச் சந்தித்தது.
இந்நிலையில் ட்ரம்பின் இத்தகைய கருத்துகளுக்கு டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சன், “அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்று பேசுவது முற்றிலும் அர்த்தமற்றது. டென்மார்க் அரச குடும்பத்திற்குள் உள்ள மூன்று நாடுகளில் எதையும் அமெரிக்கா இணைத்துக் கொள்ள எந்த உரிமையும் இல்லை” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் வெனிசுலாவைக் கைப்பற்றிய அமெரிக்கப் படைகள், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் கைது செய்திருந்தது. அந்த நாட்டை அமெரிக்காவே நிர்வகிக்கும் என்றும் ட்ரம்ப் கூறியிருக்கிறார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இத்தகைய போக்கு க்ரீன்லாந்து வரை நீளுமா என்ற அச்சம் டென்மார்க்கிற்கு எழுந்திருக்கிறது.
இத்தகைய சூழலில்தான் அமெரிக்கா தனது அணுகுமுறையை மாற்ற வேண்டும் என ஃப்ரெடெரிக்சன் வலியுறுத்தியிருக்கிறார். “வரலாற்று ரீதியாக நெருக்கமான கூட்டாளி நாட்டுக்கும், விற்பனைக்கு இல்லை என்று தெளிவாக கூறியுள்ள மற்றொரு நாட்டுக்கும் எதிராக மிரட்டும் போக்கை அமெரிக்கா நிறுத்த வேண்டும்” என அவர் கூறினார்.
இதற்கிடையில், டிரம்பின் நிர்வாகத்தில் முக்கிய நிர்வாகியாக இருக்கும் ஸ்டீபன் மில்லர் என்பவரின் மனைவி கேட்டி மில்லர், கிரீன்லாந்தை அமெரிக்கக் கொடியின் நிறங்களில் காட்டும் படத்துடன், ‘SOON’ என்ற வார்த்தையையும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாகப் பேசிய க்ரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃப்ரெடெரிக் நீல்சன், “இது மரியாதை அற்ற செயல்” எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், “பீதி கொள்ள தேவையில்லை. எங்கள் நாடு விற்பனைக்கல்ல. எங்கள் எதிர்காலம் சமூக ஊடக பதிவுகளால் தீர்மானிக்கப்படாது” எனவும் தெரிவித்திருக்கிறார்.
டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து ஆகியவை வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (NATO) உறுப்பினர்கள். நேட்டோ கூட்டமைப்பின் முக்கிய நோக்கமே ஒரு உறுப்பு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எல்லா உறுப்புநாடுகளின் மீதான தாக்குதலாக கருதி ஒன்றாக நிற்க வேண்டுமென்பதுதான். இதில் அமெரிக்காவும் இருக்கிறது; டென்மார்க்கும் இருக்கிறது. இத்தகைய சூழலில் அமெரிக்காவே தனது கூட்டாளியின் பகுதியை தனதாக்கிக்கொள்ளப் பார்ப்பது எப்படி சரியாக இருக்கும் என கேள்வி எழுப்புகின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.
இப்படியான பரபரப்பான சூழலில் மீண்டும் க்ரீன்லாந்து குறித்து கருத்து தெரிவித்திருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்து எங்களுக்கு தேவை என்றும், அதற்கான பேச்சுவார்த்தைகளை நாங்கள் நடத்தவிருக்கிறோம், இரண்டு மாதத்தில் இதற்கான டீல் முடிவுக்கு வரும் என்றும், இது சர்வதேச சட்டத்தை மதித்தே நடக்கும் என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

