நாட்டிலேயே வெறிநாய்க்கடியால் அதிகம் பேர் கொல்லப்படும் மாநிலமாகியிருக்கிறது தமிழ்நாடு. இந்த விவகாரத்தை தொடர்ந்து புதிய தலைமுறை கவனப்படுத்தி வருவதை நேயர்கள் அறிவீர்கள். தெருநாய்க்கடி பிரச்சனை நாளுக்கு நாள் மேலும் தீவிரமாவதை இன்றைய பெருஞ்செய்தியில் பார்ப்போம்!
தமிழ்நாட்டில் இப்போதெல்லாம் அச்சத்துடனும், பதற்றத்துடனும்தான் வீட்டுக்கு வெளியே நடந்துசெல்ல வேண்டியிருக்கிறது. காரணம், அதிகரித்துக் கொண்டே இருக்கும் வெறிநாய்க்கடி! தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் பல லட்சம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில், முதல் 7 மாதங்களிலேயே மாநிலம் முழுவதும் 3 லட்சத்து 67 ஆயிரம் பேர், வெறிநாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர். நாய்க்கடி என்றாலே, கடும் பாதிப்பு என்றாலும், அதிலும் வெறிநாய்க்கடிக்கு ஆளாகும் குழந்தைகளின் துயரத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.
மாநில சுகாதாரத் துறை அளித்த புள்ளிவிவரங்களின்படி, 2023இல் 4 லட்சத்து 41 ஆயிரத்து 804 பேர் பாதிக்கப்பட்டு 18 உயிரிழப்புகள் பதிவாக, 2024இல் 4 லட்சத்து 80 ஆயிரத்து 483 பேர் பாதிக்கப்பட்டு 43 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 2025 ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 3 லட்சத்து 67 ஆயிரத்து 604 பேர் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர். இதில் 20 பேர் ரேபீஸ் நோயால் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டவாரியாக எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டிலேயே மோசமான பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் மாவட்டம் சேலம். இங்கே 25,182 பேர் வெறிநாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர். அடுத்ததாக, திருச்சியில் 15,664 பேரும், கோவையில் 11,282 பேரும் வெறிநாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர். பெருநகரம் என்று கணக்கெடுத்தால், சென்னைக்குத்தான் பெரும் பாதிப்பு! ஆண்டுக்கு கிட்டத்தட்ட 14,000 பேர் வெறிநாய்க்கடிக்கு ஆளாகின்றனர்.
விருத்தாசலம் நகராட்சி பகுதியில், கடந்த திங்கட்கிழமை ஒரே நாளில் மட்டும் 10 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெறிநாய்க்கு பயந்து வீட்டுக்குள் பதுங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நாய்க்கடியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரிக்கும் நிலையில், மற்றொருபுறம் இருசக்கர வாகனங்களில் செல்வோரை தெருநாய்கள் துரத்தும்போது அச்சத்தில் கீழே விழுந்து காயமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.
தெரு நாய் விவகாரத்தை கையாள அரசுகளிடம் சரியான திட்டம் இல்லை. நாய்களின் எண்ணிக்கையை கருத்தடை மூலம் கட்டுப்படுத்துவது சரியான தீர்வு அல்ல என்பது பொதுமக்களின் பார்வையாக இருக்கிறது. ஆனால், அரசுகளோ அதில்தான் கவனம் செலுத்துகின்றன. பெருகும் நாய்களின் எண்ணிக்கை அளவுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் இல்லை என்பதில் தொடங்கி, அறுவை சிகிச்சை செய்யப்படும் நாய்களுக்கு வழங்கப்படும் உரிய பராமரிப்பின்மை அவற்றுக்கு மேலும் வரியை கூட்டுவதில் கொண்டுபோய் முடிகிறது என்பது வரை ஏராளமான சிக்கல்களை பொது சமூகம் குறிப்பிடுகிறது.
“ஒரு புலி மனிதர்களைக் கொன்றால் அந்த புலியைக் கொன்றுவிடுவதே மனிதர் - விலங்கு இணக்க வாழ்க்கைச் சூழலுக்கான வழியாக பார்க்கப்படுகிறது. அப்படி இருக்க பெருகும் வெறிநாய்கள் விஷயத்தில் காருண்யம் பேச என்ன நியாயம் அரசுக்கு இருக்கிறது” என்ற கேள்வியையும் பாதிக்கப்படும் மக்கள் கேட்கின்றனர்.
மத்திய மாநில அரசுகள் இதுகுறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளாத சூழலில், இப்போது நீதித் துறை இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.
தலைநகர் டெல்லியிலுள்ள தெருநாய்கள் அனைத்தையும் 8 வாரங்களுக்குள் தலைநகரிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டதோடு தெருநாய் விவகாரத்தை தீவிரமாக கையாள வேண்டியதன் அவசியத்தைப் பேசிவருகிறது உச்ச நீதிமன்றம். இந்தச் சூழலை தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் எழுந்துள்ளது.
தேசத்தின் பார்வை முன்னே எப்போதும் இல்லாத அளவுக்கு வெறிநாய்க்கடி விவகாரத்தில் குவிந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் இது குறித்து தமிழக எம்பிக்கள் பேச வேண்டும். தமிழகத்தின் பாதிப்புகளை விரிவாக எடுத்துரைக்க வேண்டும். விலங்குகள் உரிமைகளைப் போன்ற மனித உரிமையும் முக்கியம் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். "காரில் சென்றபடி விலங்குகள் நலன் பேசுவோர் வீட்டு குழந்தைகள் அல்ல; தெருவில் நடந்து செல்லும் சாமானிய மக்களும், அவர்தம் குழந்தைகளுமே வெறிநாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர். நாய்கள் பல ஆயிரம் ஆண்டுகளில் மனித சமூகத்துக்கு உற்ற துணையாக இருந்துள்ளன. இந்த நல்லுறவு நீடிக்க வெறி நாய்களை பிரித்து அழித்தொழிப்பதன் வழியாகவே இந்த நாய்கள் மீதான வெறுப்பு, சமூகத்தில் பரவுவதை தடுக்க முடியும் என்பதை தமிழக எம்பிக்கள் பேச வேண்டும்" என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் எழுந்துள்ளது.
வெறிநாய்க்கடி விவகாரத்தில் நிரந்தர தீர்வு உருவாக வேண்டும் என்றால், இந்த விஷயத்தில் தேவை புதிய பார்வையும் புதிய சட்டமும்! தமிழகம் அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமா?