செய்தியாளர் பால வெற்றிவேல்
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா கடந்த மாதம் 26 ஆம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆக்சியம் 4 திட்டத்தின் கீழ் டிராகன் விண்கலம் மூலம் சென்றார். அவர் தனக்கு கொடுக்கப்பட்ட ஏழு அறிவியல் ஆய்வுகளையும் வெற்றிகரமாக முடித்து விட்டார் என ஏற்கனவே இஸ்ரோ தெரிவித்திருந்தது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 14 நாட்கள் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் தங்குவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூலை 10ஆம் தேதியுடன் அவருக்கான பணிக்காலம் நிறைவடைந்தது. இப்படியான நிலையில், சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களையும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வரும் திட்டத்தை நாசா செயல்படுத்தியுள்ளது. வீரர்கள் பூமிக்கு திரும்ப உள்ள டிராகன் விண்கலத்தின் செயல்பாடுகளை கணினி வாயிலாக நாசா விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர்.
ஜூலை 14ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4:35 மணிக்கு சுபான்ஷூ சுக்லா மற்றும் சக வீரர்களும் பூமி திரும்ப உள்ளதாக நாசா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஜூலை14ஆம் தேதி மாலை கிளம்பும் வீரர்கள் சுமார் 17 மணி நேரம் பூமியை சுற்றி பயணிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15ஆம் தேதி காலை 9 மணி தொடங்கி 10 மணிக்குள் டிராகன் விண்கலம் கலிபோர்னியா மாகாணத்தை ஒட்டியுள்ள பசிபிக் பெருங்கடலில் இறங்கும் என கூறப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பூமிக்கு மீண்டும் திரும்புவதற்கு நான்கு முக்கிய கட்டங்களை விண்வெளி வீரர்கள் கடக்க வேண்டும். அதில் முக்கியமானது பூமியின் வளிமண்டலத்தில் விண்கலம் நுழைந்து, பாராசூட் வழியாக புவி ஈர்ப்பு விசையை தாண்டி பத்திரமாக கடலில் விழுவது தான்.
ஏற்கனவே இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பும் போது ஏற்பட்ட சிக்கல்கள், இம்முறை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் நாசா விஞ்ஞானிகள் திட்டவட்டமாக உள்ளனர். தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் டிராகன் விண்கலத்தின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாகவும், இதனால் சுக்லா பூமிக்கு திரும்புவதில் எந்த சிக்கலும் இருக்காது என நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சர்வதேச விண்வெளி நிலையத்தில் சக வீரர்களுடன் சுபான்ஷூ சுக்லா உணவு அருந்தும் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. சுபான்ஷூ சுக்லா தான் கொண்டு வந்த இந்திய உணவுகளை சகவீரர்களுக்கு கொடுத்து தனது விருந்தோம்பலை விண்வெளியில் சாத்தியப்படுத்தியுள்ளார். பூமிக்கு மேலே விண்வெளிக்கு சென்றால் நாடு, இனம், மொழி கடந்து மனித இனம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை பறைசாற்றும் விதமாக இந்த புகைப்படம் அமைந்துள்ளது.