கேரளா | ஆசியர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை... அடிமைத்தனமா... கலாசாரமா..?
ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பள்ளி மாணவர்கள் பாத பூஜை செய்த விவகாரம் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குரு பூர்ணிமா தினத்தை ஒட்டி கேரளாவில் உள்ள காசர்கோடு மற்றும் மாவேலிக்கரா ஆகிய ஊர்களில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் மூத்த ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பாத பூஜை செய்யும் நிகழ்வு நடைபெற்றிருந்தது.
இந்த செயலுக்கு கல்வித்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அதுதான் நமது கலாச்சாரம் என ஆளுநர் தெரிவித்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.
அமைச்சர் எதிர்ப்பும்.. ஆளுநர்ஆதரவும்!
அடிமைத்தனத்தை குறிக்கும் இச்செயலை ஒருபோதும் ஏற்க முடியாது என மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்துள்ளார். இது நம் கல்வி முறையின் அடிப்படை நோக்கத்திற்கே எதிரானது என்றும், குறிப்பிட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இளம் தலைமுறையினரிடம் மீண்டும் சாதிப்பாகுபாடு நடைமுறையை கொண்டு வரும் இலக்கின் ஒரு பகுதியே இந்நிகழ்ச்சி என்றும், ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களால் இப்பள்ளி நடத்தப்படுவதாகவும் இடதுசாரி மாணவர் அமைப்பான SFI கூறியுள்ளது.
இதற்கிடையே ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மரியாதை செய்வது நமது கலாசாரத்தின் ஒரு பகுதி என மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் கூறியுள்ளார். இதை விமர்சிப்பவர்கள் எந்த கலாசாரத்தை சேர்ந்தவர்கள் என்ற கேள்வி தனக்கு எழுவதாகவும் தெரிவித்தார்.