நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகம் திங்கட்கிழமை தொடங்கும் நிலையில், மணிப்பூரில் மீண்டும் வெடித்துள்ள வன்முறை, நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரை, "ஒரு நாடு, ஒரே தேர்தல்" திட்டம் மற்றும் வக்ஃப் மசோதா உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கடுமையாக எதிர்க்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் அரசின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் அலுவல் பட்டியலில் முக்கிய இடம் பெற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டுடன் அரசை எதிர்க்க பல்வேறு ஆலோசனைகள் நடத்த திட்டமிட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகை என்பதால் வட மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதால், மார்ச் 18 ஆம் தேதி முதல் நாடாளுமன்றத்தில் தீவிர விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மணிப்பூர் மாநிலத்திற்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசின் கூடுதல் செலவீனங்களுக்கும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனுமதி கோரி, கணக்கு வழக்குகளை தாக்கல் செய்வார் என அவர்கள் தெரிவித்தனர். பட்ஜெட் தொடர்பான விவாதங்களுக்கு இரண்டு அவைகளிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசு தரப்பு வலியுறுத்த உள்ளது.
மணிப்பூர் முதல்வராக இருந்த பிரென் சிங் ராஜினாமா செய்த நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட அந்த மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆளுநர் அஜய் பல்லாவின் நிர்வாகத்தில் வன்முறை படிப்படியாக அடங்கும் என கருதப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளனர்.
"ஒரு நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தை எதிர்க்கும் பல்வேறு கட்சிகள், மாநிலங்களின் உரிமைகள் இதனால் பாதிக்கப்படும் என கருதுகின்றன. கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்தை சிதைக்கும் வகையிலும் இந்தத் திட்டம் அமையும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்த உள்ளன. இந்த மசோதாவை பரிசீலிக்க அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற குழு அவசரமாக தனது அறிக்கையை சமர்ப்பிக்க கூடாது எனவும், விரிவான ஆலோசனை தேவை எனவும் வலியுறுத்த எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை மற்றும் சட்ட ஆணையம் இது தொடர்பாக அளித்துள்ள அறிக்கை ஆகியவற்றை சுட்டிக்காட்டி மத்திய அரசு விரைவாக இந்தத் திட்டம் தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதாவுக்கு ஒப்புதல் பெற்ற பிறகும், "ஒரு நாடு, ஒரு தேர்தல்" திட்டத்தை அமல்படுத்த பல வருடங்கள் தேவைப்படும் என்பதை அரசு தரப்பு சுட்டிக்காட்ட உள்ளது.
நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரத்தில், தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் திமுக, கேரளாவில் ஆட்சியில் உள்ள கம்யூனிஸ்ட் கூட்டணி, மற்றும் தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் தங்களுடைய கடும் எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளனர். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகம் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னர் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், திங்கட்கிழமை முதல் எதிர்க்கட்சித் தலைவர்கள் பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தொகுதிகள் மேலும் 30 வருடங்களுக்கு தற்போதைய அளவிலேயே தொடர வேண்டும் என இந்த கட்சிகள் கருதுகின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தெளிவான நிலைப்பாட்டை இந்த விவகாரத்தில் வெளிப்படுத்த வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வக்ஃப் மசோதா விவகாரத்தில், நாடாளுமன்ற குழுஅளவிலேயே அறிக்கையை எதிர்த்ததுபோல், மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடுமையாக எதிர்க்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த மசோதாவில் சிறுபான்மையினர் உரிமைகளை பாதிக்கும் பல்வேறு அம்சங்கள் உள்ளன என எதிர்கட்சிகள் கருதுகின்றன. ஆகவே சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வக்ஃப் மசோதாவை கைவிட வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்த உள்ளன.
பஞ்சாபில் நடைபெறும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் போராட்டம், மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு அரசியல் விவகாரங்கள், உத்தரகாண்ட் வண்டி டைம் மாநிலங்களில் இயற்கை பேரிடர் பாதிப்புகள், கும்பமேளா மரணங்கள் மற்றும் டெல்லி ரயில் நிலையத்தில் கூட்டத்தில் சிக்கி 18 நபர்கள் உயிரிழந்த சம்பவம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களையும் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளன. இதைத் தவிர இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சிக்கு ஏற்பட்டுள்ள புதிய சவால்கள் மற்றும் புதிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொள்கைகளால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப உள்ளன. உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஓய்வு எடுக்க வேண்டிய தேவை இருப்பதால், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மேலவையை வழி நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.