புனே | பொது இடத்தில் சிறுநீர் கழித்த நபர்.. சரணடைவதற்கு முன்பு மன்னிப்பு!
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இளைஞர் ஒருவர் நடுரோட்டில் காரை நிறுத்தி சிறுநீர் கழித்த வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவியது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் புனேயைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் மனோஜ் அகுஜாவின் மகன் கெளரவ் அகுஜா என்பது தெரியவந்தது. மேலும், அவர் மதுபோதையில் இருந்ததும் தெரிய வந்தது. காரில் புனே ஏரவாடா சாஸ்திரிநகர் சிக்னல் அருகே சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் கெளரவ் அகுஜா மற்றும் அவருடன் காரில் இருந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், கௌரவ் அஹுஜா போலீசார் முன் சரணடைந்தார். புனே போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக, தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு கெளரவ் அகுஜா காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் கௌரவ் அஹுஜா, நான் பொதுவில் செய்தது மிகவும் தவறு. பொதுமக்களிடமும், காவல் துறையிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், மன்னிக்கவும். என் குடும்ப உறுப்பினர்கள் யாரையும் தொந்தரவு செய்யாதீர்கள். அடுத்த எட்டு மணி நேரத்தில் நான் எரவாடா காவல் நிலையத்தில் சரணடைவேன்” என அதில் தெரிவித்திருந்தார்.