”காங்கிரஸை சுத்திகரிப்பதற்கான நேரம் வந்துவிட்டது” - ராகுல் காந்தி ஆதங்கம்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, குஜராத் காங்கிரஸில் இரண்டு விதமான தலைவர்களும், நிர்வாகிகளும் உள்ளதாக அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
ஒரு பிரிவினர் மக்களுக்கு நேர்மையாக இருப்பவர்கள் என்றும், காங்கிரஸ் சித்தாந்தத்தை மனதில் வைத்திருப்பவர்கள் எனவும் கூறினார். மற்றொரு வகையினர் மக்களை மதிக்காமல் அவர்களிடமிருந்து விலகி இருப்பவர்கள் என்றும் அதில் பாதிக்கும் மேற்பட்டோர் பாஜகவுக்காக வேலை செய்பவர்கள் என்றும் குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, அதுபோன்ற தலைவர்கள், நிர்வாகிகளை முதலில் அடையாளம் கண்டு களையெடுக்கப்பட வேண்டும் என்று எச்சரித்தார்.
நமது பொறுப்புகளை நிறைவேற்றாத வரை காங்கிரஸை குஜராத் மக்கள் தேர்தலில் வெற்றிபெற செய்ய மாட்டார்கள் என்று கூறிய ராகுல், பொறுப்புகளை நிறைவேற்றாமல் வெற்றியை தாருங்கள் என்று மக்களிடம் கேட்கவும் முடியாது என்று குறிப்பிட்டார். மாநிலத்தில் துன்பத்தில் இருக்கும் விவசாயிகள் எதிர்பார்க்கும் புதிய தொலைநோக்குப் பார்வையை காங்கிரஸால் வழங்க முடியும் என்றும், ஆனால் அதற்கு முன்பாக கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றும் ராகுல் கேட்டுக் கொண்டார்.
குஜராத்தில் எதிர்க்கட்சிகளுக்கு 40 சதவிகித வாக்குகள் உள்ளதாகவும், வெற்றி பெறுவதற்கு இன்னும் 5 சதவிகிதம் மட்டுமே அதிகரிக்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார். தெலங்கானாவில் ஆட்சியைப் பிடித்தது போல், குஜராத்திலும் காங்கிரஸால் வெற்றி பெற முடியும் என்றும் கட்சியினருக்கு ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தார்.