பிகார் மாநில மக்கள் தங்களுடைய முடிவை வெளிப்படுத்திவிட்டார்கள். மாநில சட்டப்பேரவை (2025) பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 202 இடங்களிலும், மகா கட்பந்தன் (எம்ஜிபி) 35 இடங்களிலும் வென்றுள்ளன. இந்தத் தேர்தல் முடிவை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். புதிய அரசுக்கு – முதலமைச்சர் யாராக இருந்தாலும், நம்முடைய நல்லாசிகள் உரித்தாகட்டும். காரணம் என்னவென்றால் நம்முடைய நல்லாசிகளுக்கு அதிகம் உரிமையுள்ளவர்கள் பிகார் மக்கள்தான்.
பிகார் தேர்தல் தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட விதம் அவற்றுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமையவில்லை. சில ஊடகங்கள், செய்தித்தாள்கள், செய்தி தொலைக்காட்சிகள் சற்றே வேறுபட்ட பாதையில் பயணிக்கத் தொடங்கி, பிறகு மற்றவர்களுடன் மந்தையில் சேர்ந்துவிட்டன. ஊடக நிருபர்கள் அனைவரும் ஒரே குரலில் பேசினர். மக்கள் சாதி அடிப்படையில்தான் வாக்களிக்கின்றனர்; முதல்வர் நிதீஷ் குமாரின் ஆட்சிக்கு எதிராக மக்களிடையே அதிருப்தி அலை எதுவுமில்லை; பிரச்சாரத்துக்கு புதிய உற்சாகத்தை தேஜஸ்வி யாதவ் சேர்த்திருக்கிறார். ஆனால், அவரால் அவர்களுக்கு பக்கபலமான சமூகங்களைத் தாண்டி ஆதரவைப் பெற முடியவில்லை. பிரசாந்த் கிஷோர் புதிய யோசனைகளை முன் வைக்கிறார். ஆனால், வாக்காளர்கள் அவரை கற்றுக்குட்டியாகவோ, இதுவரை சோதித்துப் பார்க்கப்படாத அரசியல்வாதி என்றோ கருதுகிறார்கள்.
நரேந்திர மோடி பேசத் தொடங்கியதுமே வாக்காளர்களுடைய எண்ண ஓட்டங்களில் இணைந்துவிடுகிறார்; ராகுல் காந்தி தன்னுடைய பிரச்சாரங்களில் வாக்குத் திருட்டுக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்; இவ்வாறாக பலவற்றையும் ஊடகர்கள் தெரிவித்தனர். ஆனால், இந்தத் தேர்தலில் புதிதாக அனைவரையும் கவர்ந்த ஓரம்சம், ‘ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண்ணுக்கு பத்தாயிரம் ரூபாய்’ என்பதுதான். இது தேர்தலுக்கு முன்பாகவும் – தேர்தலின்போதும் - தேர்தலுக்குப் பிறகும் வழங்கப்படுகிறது.
பிகார் மக்களுக்கு ‘நினைவாற்றல் நெடியது’. லாலு பிரசாத் (அவருடைய மனைவி ராப்ரி தேவியும் சேர்ந்து) நடத்திய 15 ஆண்டுக்கால (1990-2005) ஆட்சியை அவர்கள் மறக்கவில்லை. அப்போது 16 வயது பாலகனாக இருந்த தேஜஸ்வியை, அதற்காக இந்தத் தேர்தலில் தண்டித்துவிட்டார்கள். அவர்களால் நிதீஷ் குமார் தலைமையிலான கடந்த இருபதாண்டு கால ஆட்சியையும் அதில் தொடரும் பல்வேறுவிதமான தோல்விகளையும் மறக்க முடியவில்லை என்றாலும் அவருக்கே வாக்களித்திருக்கிறார்கள்!
பிகார் மாநிலம் வறியதா? அங்கே கோடிக்கணக்கானவர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்களா? பிழைப்புக்காக வேலை தேடி கோடிக்கணக்கானவர்கள் பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளுக்குச் செல்கிறார்களா? பிஹார் மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பும் கல்வியின் தரமும் வேதனையும் அதிர்ச்சியும் தரும் வகையில் தரமின்றி இருக்கின்றனவா? மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருக்கும் நிலையிலும் சாராயம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே விடை ‘ஆமாம்’. பிரபல பத்திரிகையாளர் சேகர் குப்தா தன்னுடைய அரசியல் விமர்சனக் கட்டுரையில் வாய்க் கொழுப்போடு எழுதினார், ‘பிகார் இன்றைக்கு எதை நினைக்கிறதோ; அதையே நேற்றைக்கு முந்தைய தினமும் நினைத்தது’. அவர் சொல்வது உண்மையாகக் கூட ஒருபுறமிருக்கட்டும், தேர்தலுக்குப் பிந்தைய தரவுகளும் ஆய்வுகளும் உண்மையைச் சொல்லப் போகின்றன.
சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்திஜியின் அறைகூவலுக்கு செவிமடுத்து, பிரிட்டிஷ் ஆட்சியின் அநியாயமான ‘அவுரி வரி’ விதிப்புக்கு எதிராக ஒற்றுமையாகத் திரண்டு, அதிகாரத்துக்கு அடிபணியாமல் துணிந்து நின்று போராடிய ‘சம்பரான் இயக்க’ உணர்வைத் திரும்பப் பெறுங்கள் என்று பிகாரிகளை வேண்டிக் கொள்கிறேன். தரமற்றவர்களை ஆசிரியர்களாக நியமித்தால் மாணவர்கள் அதை சகித்துக் கொள்ளக்கூடாது; கல்லூரிகள் மற்றும் பள்ளிக்கூடங்களில் பாடம் கற்றுத்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படாவிட்டால், நூலகம் இல்லாவிட்டால், ஆய்வுக்கூடங்களை அமைக்காவிட்டால், பொதுத் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசியவிடப்பட்டால், தேர்தல் கூடத்தில் எல்லா மாணவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்து எழுதினால், தேர்வு முடிவுகளை பணம் வாங்கிக் கொண்டோ அல்லது வேறு எதற்காகவோ திருத்தி வெளியிட்டால், வேலை தேட உதவாத பட்டங்களை வழங்கினால், அரசு வேலைக்கான ஆளெடுப்பை கண்துடைப்பாக மேற்கொண்டால் அவற்றையெல்லாம் எதிர்த்துப் போராட வேண்டும்.
தங்கள் மாநிலத்தில் வேலைவாய்ப்பு இல்லை என்றால் மௌனமாக அதை அப்படியே ஒப்புக்கொண்டு, மிகவும் தொலைவில் உள்ள மாநிலங்களுக்கெல்லாம் (அங்கே மொழி, உணவு, வாழ்க்கை முறை எல்லாமே அன்னியமானது) சென்று மேலும் துயரப்படக்கூடாது. ‘ஆணாகப் பிறந்தால் வீட்டோடு தங்கி வாழ முடியாது. இதுதான் எங்கள் தலைவிதி’ என்று பெற்றோர்களும் குடும்பங்களும் இருந்துவிடக்கூடாது. பிகாரிகள் தங்களுடைய தாத்தா – பாட்டி காலத்தில் வாழ்ந்ததைப் போல இப்போதும் வாழக்கூடாது.
வாக்காளர்களுக்கு வளர்ச்சிக்கான மாற்று திட்டங்களை முன்வைத்து, மாற்றம் அவசியம் என்ற ஆவலை அவர்களுக்கு ஏற்படுத்தி வெற்றிபெற அனைத்து எதிர்க்கட்சிகளுமே தவறிவிட்டன. பிரசாந்த் கிஷோர் ஓரளவுக்கு முயற்சி செய்தார். ஆனால், அதை பெரிய அளவில் சாதிக்க முடியாமல் அவருக்குப் பல்வேறு பிரச்சினைகள், பற்றாக்குறைகள். பிகார் தேர்தலில் ஆட்சி மாற்றம் நிகழாததற்கு முழு முதல் காரணம் முக்கிய எதிர்க்கட்சிகள்தான். தகுதியான தலைவர்களும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வசதிகளும் இருந்தால் மட்டும் பயனில்லை. லட்சக்கணக்கான தொண்டர்களைக் களத்தில் இறக்கி தேர்தல் பணியை ஒருங்கிணைத்து, தீவிரப்படுத்தியிருக்க வேண்டும்.
கட்சிகளின் தலைவர்களைவிட – வேட்பாளர்களைவிட, கட்சியின் நிர்வாக இயந்திரமும் களத்தில் இருக்கும் தொண்டர்களும்தான் வெற்றியை உறுதிப்படுத்த முடியும். வலிமையான கட்சி நிர்வாக அமைப்பும் லட்சக்கணக்கான தொண்டர்களும் உள்ள கட்சிகளாலும் கூட்டணிகளாலும்தான் (சில விதிவிலக்குகள் இருக்கலாம்) வெற்றிபெற முடியும். வாக்காளர்களைத் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க இவையிரண்டும் மிகவும் அவசியம். தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது பாரதிய ஜனதாவும் ஐக்கிய ஜனதா தளமும் இவ்விரண்டையும் பெற்றிருப்பது புரியும்.
பிகார் தேர்தலில் இந்தியத் தேர்தல் ஆணையம் கேள்விக்குரிய வகையில்தான் செயல்பட்டிருக்கிறது. பிகாரில் தேர்தல் தொடங்கப் போகிறது என்ற சமயத்தில் வாக்காளர் பட்டியலை திருத்த ‘சிறப்பு தீவிர திருத்தம்’ என்ற முடிவை எடுத்து, தேர்தல் கள விவாதத்தையே திசை திருப்பியது. கடந்த, தேர்தல்களைவிட வாக்குப் பதிவு சதவீதம் அதிகமாகிவிட்டதற்கு ஒரே காரணம் லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்கிவிட்டதுதான்; இருக்கும் வாக்காளர்களில் அதிகம் பேர் வாக்களித்துவிட்டதால் சதவீதம் கூடியது.
பிகார் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு பத்து நாள்களுக்கு முன்னதாக ‘முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம்’ என்ற புதிய திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்ததை இந்தியத் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவே இல்லை. பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்னதாகவே பிகார் குடும்பங்களில் மகளிர் பெயரில் வங்கிகளில் 10,000 ரூபாய் போடப்பட்டுவிட்டது. இது தேர்தலின்போதும் தொடர்ந்தது. தேர்தல் ஆணையம் இதைத் தடுக்கவேயில்லை. இது அப்பட்டமான லஞ்சமாகும்.
இதே தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் அதற்கும் முன்னால் எப்படி நடந்து கொண்டது? விவசாயிகளுக்கு ரொக்கமாக உதவி செய்யும் திட்டம் 2003-மார்ச்சில் தொடங்கியது. மக்களவை பொதுத் தேர்தலுக்கான தேதி 2004-இல் அறிவிக்கப்பட்டதால் அந்த திட்டத்தில் பணம் போடுவது நிறுத்தப்பட்டது. விலையில்லா (இலவச) வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டமும் 2006 முதல் அமலில் இருந்தது. பிறகு, சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அது உடனடியாக (2011) இறுதியாக நிறுத்தப்பட்டுவிட்டது. தேர்தல் ஆணையம் பிகாரில் ஒருபக்க சார்பாக நடந்திருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இப்படிப் பல முறைகேடுகள் நடந்திருந்தாலும் - தேசிய ஜனநாயக கூட்டணிக்குக் கிடைத்திருப்பது அமோக வெற்றிதான். தேர்தலுக்குப் பிந்தைய ஆய்வுகள் நம்முடைய பல கேள்விகளுக்கு விடை அளிக்கும்.
பிகார் சட்டப் பேரவைக்கு வலுவான எதிர்க்கட்சி அமைய மக்கள் வாக்களிக்கவில்லை; எனவே, ஆளுங்கூட்டணியைக் கேள்வி கேட்கும் பொறுப்பு இனி மக்களுடையதாகிவிட்டது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்று யார் இனி அடுத்த ஐந்தாண்டுகள் ஆளுங்கட்சியைக் கேட்பார்கள்? இதுவே என் கவலை. பிகார் சட்டப் பேரவைக்கு வலுவான எதிர்க்கட்சி அமைய மக்கள் வாக்களிக்கவில்லை; எனவே, ஆளுங்கூட்டணியைக் கேள்வி கேட்கும் பொறுப்பு இனி மக்களுடையதாகிவிட்டது. வாக்களித்து ஆளுங்கூட்டணியைத் தேர்ந்தெடுத்ததைவிட இது மிகப்பெரிய பொறுப்பு.