
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டதை எதிர்த்து வங்கதேசம் முழுவதும் கடும் பதற்றம் எழுந்துள்ளது. பல இடங்களில் ஹசீனா ஆதரவாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் கலைந்து செல்ல வைத்தனர். தலைநகர் டாக்காவில் அசம்பாவிதங்களை தடுக்க காவல் துறையினரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில், LPG டேங்கரில் (எரிபொருள் ஏற்றிச்செல்லும் கப்பல்) தீ விபத்து ஏற்பட்டதால், உக்ரைன் எல்லையை ஒட்டியுள்ள ருமேனிய கிராம மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். உக்ரைனின் இஸ்மாயில் பகுதியில், துருக்கி நாட்டுக் கொடியுடன் சென்ற 'ORINDA' என்ற LPG டேங்கர் மீது, ரஷ்யா ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டது. அந்த கப்பலில் அதிகளவிலான திரவ எரிவாயு இருந்ததால், ருமேனிய எல்லையில் வசிக்கும் கிராம மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
பாதுகாப்புப் படையினரின் எல்லைக் கோடு குறித்து வட கொரியாவோடு பேச்சு நடத்த தென் கொரியா அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக பேசிய தென் கொரிய தேசிய பாதுகாப்புக் கொள்கையைக் கவனிக்கும் துணை பாதுகாப்புத் துறை அமைச்சர் கிம் ஹோங் சோல்(KIM HONG CHEOL), எல்லைப் பகுதியில் தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்க இந்தப் பேச்சுவார்த்தை உதவும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்காவிலிருந்து எல்பிஜி எரிவாயு இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஓராண்டுக்கு 22 லட்சம் டன் எரிவாயுவை அடுத்தாண்டு இறக்குமதி செய்யும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அமெரிக்காவுடன் முறையான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு எரிவாயு இறக்குமதி செய்வது இதுவே முதல் முறை என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இதையடுத்து, இந்தியா தனது எல்பிஜி எரிவாயு இறக்குமதியில் 10 சதவீதத்தை அமெரிக்காவிடமிருந்து வாங்க உள்ளது.
அமெரிக்காவில் அதிக ஊதியத்தை வலியுறுத்தி ஸ்டார்பக்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டார்பக்ஸ் நிர்வாகம் நியாயமற்ற தொழிலாளர் நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதாகவும், தொழிற்சங்கங்களை முடக்க முயற்சிப்பதாகவும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ள நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி, ஸ்டார்பக்ஸைப் புறக்கணிக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
காங்கோவில், சுரங்கத்துறை அமைச்சரின் குழு சென்ற விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில், அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். காங்கோ ஜனநாயகக் குடியரசின் லுவாலாபா மாவட்டத் தலைநகரான கோல்வேசி விமான நிலையத்தில், இந்த விபத்து நடந்துள்ளது. விமானம் தரையிறங்கும் போது விபத்து நிகழ்ந்ததால், அதில் பயணித்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டனர்
அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள கிலாவேயா எரிமலை மீண்டும் வெடித்து, உருகிய லாவா, வானத்தை நோக்கி பீறிட்டது. வெடிப்பின் போது லாவா நீரூற்றுகள் 1,500 அடி உயரம் வரை எழும்பியது. இந்த வெடிப்பு தனித்துவமான சிறகு வடிவில் காட்சியளித்ததாகவும், வெடிப்பின் தீவிரத்தால் உருகிய பாறை துகள்கள் வானத்தை நோக்கி பிரமாண்டமாகச் சென்றதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, லாவா பீறிட்ட காட்சி சுற்றுப்பகுதிகளில் இருந்து தெளிவாகக் காணப்பட்ட நிலையில், அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தனர்.
நார்வே கால்பந்து அணி, நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட்டின் அபார ஆட்டத்தால், 28 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஃபிஃபா உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது. தகுதிச் சுற்றின் இறுதிப் போட்டியில் நார்வே, நான்கு முறை சாம்பியனான இத்தாலியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஹாலண்ட் இந்தப் போட்டியில் இரண்டு கோல்கள் உட்பட, தகுதிச் சுற்றில் மட்டும் மொத்தம் 16 கோல்கள் அடித்து ஐரோப்பிய அளவில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.