Double engine sarkar.. இருந்தும் சமூக - பொருளாதார அளவுகோல்களில் பின்தங்கும் பீகார்!
பீகாரில் மத்திய மற்றும் மாநில அரசின் நலத்திட்டங்கள் மூலம் உட்கட்டமைப்பு வசதிகள் முன்னேற்றம் அடைந்தாலும், கல்வி, வேலைவாய்ப்பு, மக்கள்தொகைக் கட்டுப்பாடு, வறுமைக் குறைப்பு போன்ற சமூக - பொருளாதார அளவுகோல்களில் மாநிலம் பின்தங்கியுள்ளது. அங்கு, எழுத்தறிவு, தனிநபர் வருமானம், வறுமை விகிதம் போன்றவை தேசிய சராசரியைவிட குறைவாக உள்ளன.
பீகாரில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மற்றும் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான மாநில அரசின் நலத் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, தொடர்ச்சியான கவனக் குவிப்பு ஆகியவற்றால் சாலை, மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் முன்னேற்றம் அடைந்துள்ளன. ஆனால், கல்வி, வேலைவாய்ப்பு, மக்கள்தொகைக் கட்டுப்பாடு, வறுமைக் குறைப்பு ஆகியவற்றில் மாநிலம் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.
கல்வியை எடுத்துக்கொண்டால், பீகாரில் எழுத்தறிவு விகிதம் 74.7% மட்டுமே. இந்திய அளவில் எழுத்தறிவு விகிதம் 80.9% ஆக உள்ளது. பள்ளிக் கல்வியை நிறைவு செய்து உயர் கல்வியில் சேரும் மாணாக்கர் விகிதம் 17.1 விழுக்காடு மட்டுமே. இந்திய அளவில் இது 28.4% ஆக உள்ளது. அதேபோல், பள்ளிகளில் இடைநிலை வகுப்புகளை முடித்து அடுத்தக்கட்டத்திற்கு செல்லாமல் இடைநிற்பவர்களின் விகிதம் 25.9 விழுக்காடு ஆகவும், உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் 20.9 விழுக்காடாகவும் உள்ளது.
இந்திய அளவில் சராசரி தனிநபர் வருமானம் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 892 ரூபாயாக இருக்கையில், பீகாரின் தனிநபர் வருமானம் 60 ஆயிரத்து 337 ரூபாய் மட்டுமே. நிதி ஆயோக் தரவுகளின்படி வறுமையின் விகிதம் பீகாரில் 33.8 விழுக்காடாக உள்ளது. தேசிய அலவிலான வறுமை விகிதமான 15 விழுக்காட்டை ஐ விட இது இரு மடங்கு அதிகம். 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே வேலையின்மை தேசிய அளவில் 14.6 விழுக்காடு என்றால், பீகாரிலோ அது 16.7 விழுக்காடு.
மக்கள்தொகை கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பான மகப்பேறு ஆகிய அளவுகோல்களை எடுத்தூக்கொண்டாலும் பீகாரின் நிலை மோசமாகவே உள்ளது. 1000 குழந்தைகள் பிறந்தால் 23 குழந்தைகள் இறந்துவிடுகின்றன. அதேபோல், கருவுறும் ஒரு லட்சம் பெண்களில் 104 பெண்கள் மகப்பேறின் போது இறந்துவிடுகின்றனர். கருவுறுதல் விகிதம் அதாவது, ஒரு பெண் தன் வாழ்நாளில் பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கை பிகாரில் 2.8 ஆக உள்ளது. இது நாட்டிலேயே மிக அதிகமாகும். தேசிய அளவிலான கருவுறுதல் விகிதம், 1.9 ஆக உள்ளது.
இவ்வாறு, கல்வி, வேலைவாய்ப்பு, மக்கள்தொகைக் கட்டுப்பாடு, வறுமைக் குறைப்பு போன்ற அனைத்திலும் இந்தியாவிலேயே பின் தங்கிய மாநிலமாகவே பீகார் இருந்து வருகிறது. நடந்து முடிந்த பிகார் தேர்தலில், இதுவரை இல்லாத அளவில் வேலைவாய்ப்பு, தொழில் முதலீடு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை பீகார் அரசியல் கட்சிகள் பேச ஆரம்பித்திருக்கின்றன. பீகாரின் முன்னேற்றம் இனி நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

