மனோஜ் ஜராங்கே
மனோஜ் ஜராங்கே ட்விட்டர்
இந்தியா

”தாமதம் ஏன்? இனி தண்ணீர்கூட அருந்த மாட்டேன்” - மராத்தா சமூகத் தலைவர் உறுதி! தீவிரமாகிறதா போராட்டம்!

Prakash J

மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மகாராஷ்டிர அரசுக்கு எதற்காக கால அவகாசம் வேண்டும். நாங்கள் பொறுமையைக் கடைப்பிடிப்போம். ஆனால் எதற்காக உங்களுக்கு கால அவகாசம் தேவை என்பதை தெளிவாகக் கூறுங்கள். அதன்பிறகு நீங்கள் கேட்டதுபோல கால அவகாசம் கொடுக்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்கிறோம்.

இடஒதுக்கீடு பெறும்வரை நாங்கள் போராட்டத்தைத் திரும்பப் பெறப் போவதில்லை. இனிமேல் நான் தண்ணீர்கூட அருந்தமாட்டேன். மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு விஷயத்தில் அனைத்துக் கட்சியும் ஒன்றுபோலச் செயல்படுகின்றன. அவர்களுக்குள் எந்த வித்தியாசமும் இல்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: ‘தேர்தல் பத்திர திட்டம்’ என்றால் என்ன? இதிலுள்ள பிரச்னைகள் என்னென்ன? விரிவான அலசல்!

மராத்தா சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி நடத்திவரும் போராட்டம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மராத்தா இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவித்து எம்.பி.க்களும் எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்திருப்பது அம்மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க தலைநகர் மும்பையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து, நேற்று (நவ.1) நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பேசிய அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இதுதொடர்பாக சட்டம் இயற்றுவதற்கு கால அவகாசம் தரப்பட வேண்டும்; மனோஜ் ஜராங்கே போராட்டத்தைக் கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில்தான் மராத்தா சமூகத் தலைவர் மனோஜ் ஜராங்கே, கால அவகாசம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரின் படங்களுக்கு கருப்பு மை பூசி மராத்தா சமூகப் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையும் படிக்க: ”இதுமட்டும் நடந்தால் உடனே ஸ்டார்ட் பண்ணிடலாம்..” - லியோ 2 குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த லோகேஷ்!

இதற்கிடையே மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவும், மராத்தா இடஒதுக்கீட்டுப் பிரச்னைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “ஏக்நாத் ஷிண்டே அரசு, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கும் தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர், "மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும். இந்த கோரிக்கையை முதலில் வைத்தது நாங்கள்தான். தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. ராஜஸ்தானிலும் 62 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. அதேவழியில் மகாராஷ்டிரா அரசும் இடஒதுக்கீட்டை 50 சதவீதத்திற்கு மேல் உயர்த்தி, மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மராத்தா சமூகத்தினரை சமூக, கல்விரீதியாக பின்தங்கிய வகுப்பினராக அறிவித்து அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு தர கடந்த 2018இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அது நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. இதனையடுத்து, மகாராஷ்டிராவின் மராத்தா சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அம்மாநிலத்தில் மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் சூடுபிடித்துள்ளது.