voting machine pt desk
இந்தியா

83.61% EVMகளை நம்பும் கர்நாடக மக்கள்.. ஆய்வில் தகவல்.. ராகுலுக்கு பாஜக பதிலடி!

”கர்நாடகாவில் பெரும்பாலான வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்புகிறார்கள்” என ஓர் ஆய்வின் மூலம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்துள்ளது.

Prakash J

”கர்நாடகாவில் பெரும்பாலான வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்புகிறார்கள்” என ஓர் ஆய்வின் மூலம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்துள்ளது.

வாக்குத் திருட்டு தொடர்பாக ராகுல் குற்றச்சாட்டு

வாக்குத் திருட்டு நடைபெறுவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்திலேயே வாக்குத் திருட்டு நடைபெற்றதாக ராகுல் குற்றஞ்சாட்டியிருந்தார். குறிப்பாக, மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியில் அடங்கிய, மகாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதியில் மிகப்பெரிய வாக்கு திருட்டு நடைபெற்றிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். அந்த தொகுதியில் மொத்தம் 6.5 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் நிலையில், அதில் சுமார் 1 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாகவும், ஒரே முகவரியில் பல பேர் என அதில் மட்டும் 10, 452 வாக்காளர்கள் இருந்தனர் (குறிப்பாக, ஒரேவீட்டில் 80 வாக்காளர்கள் இருந்தனர்) எனவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்திருந்தது. இதுதொடர்பாக அவர் வைக்கும் குற்றச்சாட்டுகளையும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

voter list

இந்த நிலையில், ”கர்நாடகாவில் பெரும்பாலான வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்புகிறார்கள்” என ஓர் ஆய்வின் மூலம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு மூலம் தெரிய வந்துள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பும் கர்நாடக மக்கள்

காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு நியமித்த ’மக்களவைத் தேர்தல்கள் 2024 - குடிமக்களின் அறிவு, அணுகுமுறை மற்றும் நடைமுறை (KAP) பற்றிய இறுதிக் கோட்டு கணக்கெடுப்பின் மதிப்பீடு’ என்ற தலைப்பிலான ஆய்வின் ஒரு பகுதியாக இந்தக் கணக்கெடுப்பு வந்துள்ளது. ஆகஸ்ட் 2025 தேதியிட்ட கணக்கெடுப்பு அறிக்கை, சமீபத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தால் செயல்படுத்தப்படும் முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு (SVEEP) திட்டத்தின் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கர்நாடகாவில் உள்ள 34 மாவட்டங்களை உள்ளடக்கிய 102 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 5,100 பேரிடம், இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இது மாநிலத்தின் நான்கு பிரிவுகளான பெங்களூரு, பெலகாவி, கல்புர்கி மற்றும் மைசூரு முழுவதும் கிராமப்புற, நகர்ப்புற மற்றும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

evm machine

ஆய்வில் வெளியான தகவல்!

அந்த ஆய்வின்படி, பதிலளித்தவர்களில் 83.61% பேர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகமானவை என்று நம்புவதாகக் கூறினர். ஒட்டுமொத்தமாக, பதிலளித்தவர்களில் 69.39% பேர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் துல்லியமான முடிவுகளை வழங்குவதாக ஒப்புக்கொண்டனர், அதே நேரத்தில் 14.22% பேர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் துல்லியமான முடிவுகளை வழங்குகின்றன என்பதை உறுதியாக ஒப்புக்கொள்கிறார்கள் என அது தெரிவித்துள்ளது. இதில் கல்புர்கி மக்கள் அதிகம் நம்பிக்கை கொண்டுள்ளனர். அங்கு 83.24% பேர் EVMகள் நம்பகமானவை என்று ஒப்புக்கொண்டதாகவும், 11.24% பேர் உறுதியாக ஒப்புக்கொண்டதாகவும் அது தெரிவிக்கிறது. இதுவே மைசூருவில் 70.67% - 17.92% ஆகவும், பெலகாவியில், 63.90% - 21.43% ஆகவும், பெங்களூருவில் 63.67% - 9.28% ஆகவும் இருப்பதாக அறிக்கைகள் காட்டுகின்றன. தேர்தல்களில் பணத்தின் செல்வாக்கு குறித்த கவலைகளையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டியது. பதிலளித்தவர்களில் 44.90 சதவீதம் பேர் இது அதிகரித்து வருவதாகவும், 4.65 சதவீதம் பேர் ஒட்டுமொத்தமாக வலுவாக உடன்படுவதாகவும் தெரிவித்தனர்.

ஆய்வு தொடர்பாக ராகுலை விமர்சித்த பாஜக

இந்த ஆய்வு வெளியாகி இருக்கும் நிலையில், பாஜக ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்துள்ளது. கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக், “பல ஆண்டுகளாக, ராகுல் காந்தி நாடு முழுவதும் பயணம் செய்து, இந்தியாவின் ஜனநாயகம் 'ஆபத்தில்' உள்ளது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 'நம்பகமற்றவை', நமது நிறுவனங்களை நம்ப முடியாது என்ற ஒரு கதையைச் சொல்லி வருகிறார். ஆனால் கர்நாடகா மிகவும் வித்தியாசமான கதையைச் சொல்லியுள்ளது. மக்கள் தேர்தல்களை நம்புகிறார்கள், மக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்புகிறார்கள், இந்தியாவின் ஜனநாயக செயல்முறையை மக்கள் நம்புகிறார்கள். இந்த கண்டுபிடிப்பு, காங்கிரஸ் முகத்துக்கு விழுந்த ஓர் அறை" என விமர்சித்துள்ளது.

ராகுல் காந்தி

ஆனால், பாஜகவின் இந்தக் கூற்று தொடர்பாக பதிலளித்த கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, ”இந்த கணக்கெடுப்பு கர்நாடக அரசால் நடத்தப்படவில்லை. இது கர்நாடக தேர்தல் ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு. அரசு நிறுவனத்தால் மட்டுமே வெளியிடப்பட்டது” என தெளிவுபடுத்தியுள்ளார்.