வாக்குத் திருட்டு காரசார விவாதம் | நேரு, இந்திராவை விமர்சித்த அமித் ஷா.. சவால்விட்ட ராகுல்!
வாக்குத் திருட்டு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மறைந்த பிரதமர்களான நேரு மற்றும் இந்திரா மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார். அதற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.
மக்களவையில் அமித் ஷா - ராகுல் காரசார விவாதம்
நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத்தொடர் கடந்த டிசம்பா் 1ஆம் தேதி தொடங்கியது. இக்கூட்டத் தொடரில் இன்று, மக்களவையில் தேர்தல் சீர்த்திருத்தம்தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”1952 முதல் எஸ்.ஐ.ஆர் நடைபெற்றுவருகிறது. 2004ஆம் ஆண்டு வரை எந்தக் கட்சியும் எஸ்.ஐ.ஆரை எதிர்க்கவில்லை. சுதந்திரத்திற்குப் பிறகு நேரு பிரதமராக 2 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். சர்தார் வல்லபபாய் படேல் பிரதமராக 28 பேர் ஆதரவு தெரிவித்தனர். இருப்பினும், நேருவே பிரதமர் ஆனார். இதுவே வாக்குத்திருட்டு. தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகும், இந்திரா காந்தி பிரதமராக தொடர்ந்தது 2ஆவது வாக்குத்திருட்டு. சோனியாகாந்தி 3ஆவது வாக்குத் திருட்டில் ஈடுபட்டார்” எனக் குற்றஞ்சாட்டினார்.
அதேநேரத்தில், வாக்குத் திருட்டு தொடர்பாக விவாதத்திற்கு வருமாறு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்தார். தேர்தல் சீர்த்திருத்தம் தொடர்பான விவாதத்தில் இடைமறித்த ராகுல் காந்தி, வாக்குத் திருட்டு தொடர்பான தன்னுடைய குற்றச்சாட்டுகள் குறித்து விவாதத்திற்கு அழைப்பு விடுத்தார். ”என்னோடு விவாதத்திற்கு வாருங்கள். இங்கு உங்களால் பதில் சொல்ல முடியவில்லை என்றால், தனியாக விவாதத்திற்கு வாருங்கள்.. அமித் ஷா உங்களுக்கு சவால் விடுக்கிறேன். ஊடங்களுக்கு முன்னால் விவாதம் நடத்தலாம். அமித் ஷா என்னோடு விவாதத்திற்கு வாருங்கள்” எனச் சவால் விட்டார்.
தொடர்ந்து நடைபெற்ற காரசார விவாதத்தின்போது, மீண்டும் அமித் ஷா பேச்சில் ராகுல் காந்தி குறுக்கிட்டார். அப்போது அமித் ஷா, ”நான் என்ன பேச வேண்டுமென்று ராகுல் காந்தி தீர்மானிக்க முடியாது எனவும், அவர் பொறுமையாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்” எனவும் கூறினார். உடனடியாக ராகுல் காந்தி, அமித் ஷாவின் பதில் பயத்தை காட்டுவதாக கூறினார். இருப்பினும், அதற்கு பதிலளிக்காமல் அமித் ஷா பேச்சை தொடர்ந்தார்.
மன்னிப்பு கேட்ட கங்கனா ரனாவத்
அதேபோல், ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வாக்குத் திருட்டு கூற்றில் இடம்பெற்ற பிரேசில் பெண் குறித்து நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், ராகுலை கடுமையாகச் சாடினார். அதேநேரத்தில் அந்தப் பெண்ணின் புகைப்படம் இடம்பெற்றதறாக மன்னிப்பு கோரினார். "ஒவ்வொரு பெண்ணும் அவளுடைய கண்ணியத்திற்கு உரிமையுடையவர்கள். அவர் (பிரேசில் பெண்) இந்தியாவுக்கு ஒருபோதும் வரவில்லை. ஹரியானா தேர்தலுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் பலமுறை கூறியுள்ளார். இந்த நாடாளுமன்றத்தின் சார்பாக, நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆளுமை உரிமைகளை மீறுவது ஒரு பெரிய குற்றம். அவரது புகைப்படம் இங்கே பயன்படுத்தப்பட்டதற்கு நான் வருந்துகிறேன்" என்று ரனாவத் கூறினார்.
முன்னதாக, அவர் பிரியங்கா காந்தியையும் கடுமையாகச் சாடினார். அவர், “பழைய விஷயங்களை விடுங்கள் எனக் கூறும் பிரியங்கா காந்தியிடம் நான் ஒன்றைக் கேட்கிறேன். உங்கள் தாயாரான சோனியா காந்தி, 1983ஆம் ஆண்டுதான் இந்தியக் குடியுரிமை பெற்றார். ஆனால், அதற்கு முன்பே வாக்களித்தார். பிரியங்கா காந்தி இதனை நினைவில் கொள்ள வேண்டும். முன்பும் சரி, இப்போதும் சரி.. உங்கள் குடும்பம் நாட்டின் சட்ட ஒழுங்கை மதிப்பதில்லை” என்றார்.

