ஒரே முகவரியில் 80 பேர் ; ராகுலின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டை கள ஆய்வில் நிரூபித்த இந்தியா டுடே!
வாக்கு திருட்டு தொடர்பாக ஆதாரங்களுடன் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியில் அடங்கிய, மகாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதியில் மிகப்பெரிய வாக்கு திருட்டு நடைபெற்றிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். அந்த தொகுதியில் மொத்தம் 6.5 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் நிலையில், அதில் சுமார் 1 லட்சம் போலி வாக்காளர்கள் இருக்கின்றனர். மேலும், ஒரு முகவரியில் பல பேர் என அதில் மட்டும் 10 ஆயிரத்து 452 வாக்காளர்கள் இருந்தனர் (குறிப்பாக, ஒரேவீட்டில் 80 வாக்காளர்கள் இருந்தனர்). முறையான புகைப்படம் இல்லாமல் 4 ஆயிரத்து 132 வாக்காளர்கள் இருந்தனர். Form 6 படிவத்தை சுமார் 33 ஆயிரத்து 692 வாக்காளர்கள் தவறாக பயன்படுத்தியுள்ளனர்” எனக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டுகள் தவறாக வழிநடத்துவதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியது. மேலும், அவர் தனது புகாரை கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியிடம் எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் குற்றசாட்டுகள் குறித்து இந்தியாவின் பிரபல ஊடகமான ‘இந்தியா டுடே’ களப் பணியில் இறங்கியது. பெங்களூரு சென்ட்ரல் தொகுதியில் ஒரே முகவரியில் 80 பேர் இருப்பதாக ராகுல் குற்றஞ்சாட்டி இருந்தார். அதை ஆய்வுசெய்யும் பணியில் இந்தியா டுடே களமிறங்கியது.
அதன்படி, முனி ரெட்டி கார்டனில் உள்ள எண் 35இல் உள்ள 10-15 சதுர அடி வீட்டில் 80 வாக்காளர்கள் போலியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறிந்துள்ளது. மேற்கண்ட அந்த முகவரியில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உணவு விநியோக ஊழியரான திபங்கர் என்பவர் தற்போது வசித்து வருவதாகவும், அவர் ஒரு மாதத்திற்கு முன்புதான் இங்கு குடிபெயர்ந்ததாகவும், மேலும், பெங்களூருவில் அவருக்கு வாக்காளர் பதிவு இல்லை எனவும், அந்த முகவரியுடன் இணைக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை அவர் அடையாளம் காணவில்லை எனவும் அது கண்டறிந்துள்ளது.
தொடர்ந்து, இந்த வீடு ஜெயராம் ரெட்டிக்குச் சொந்தமானது என்றும், அவர் பாஜகவில் இணைந்தவர் என்றும் திபங்கர் விவரித்தார் என இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவரிடம் இந்தியா டுடே தொடர்புகொண்டபோது, அவர், தனது பாஜக தொடர்பை ஒப்புக்கொண்டார். மேலும் அவர், அந்த வீட்டில் பல குத்தகைதாரர்கள் அங்கு பல ஆண்டுகளாக வசித்து வந்ததாகவும், அவர்கள் தங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்ததாகவும், ஆனால் பெரும்பாலானோர் பின்னர் வெளியேறிவிட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தேர்தல் அதிகாரிகளுக்கு முரண்பாடுகள் குறித்துத் தெரிவிக்கவில்லை என்றும், இப்போது அவ்வாறு செய்வதாக உறுதியளித்ததாகவும் ஜெயராம் ரெட்டி ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தியா டுடேவிடம் பேசிய அவர், ”வாக்காளர் பட்டியலில் 80 பேர் இதே முகவரியில் இருக்கின்றனர். இருப்பினும் வீட்டில் அவர்களை நிரந்தரமாகத் தங்கவைக்க முடியவில்லை. பலர் ஒடிசா, பீகார் மற்றும் மண்டியா உள்ளிட்ட பிற மாநிலங்கள் அல்லது மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால், அவர்களில் சிலர் இன்னும் தேர்தலின்போது வாக்களிக்க வருகின்றனர்.
இந்தியா டுடே அறிக்கையை உறுதிப்படுத்திய பூத் நிலை அதிகாரி (BLO) முனிரத்னா, ஐடி வழித்தடத்தில் சிறிய வீடுகளில் வசிக்கும் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற வாடகை ஒப்பந்தங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று விளக்கினார். இந்த குடியிருப்பாளர்கள் பொதுவாக பாதுகாப்புக் காவலர்களாகவோ, வீட்டுப் பணியாளர்களாகவோ அல்லது வீட்டு உதவியாளர்களாகவோ பணிபுரியும் வேலை தேடுபவர்கள். வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்ற பிறகு, பலர் வளாகத்தை காலி செய்கிறார்கள். ஆனால் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளன. மாற்றப்பட்ட வாக்காளர்களின் பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆனால் நடைமுறை நெறிமுறைகள் காரணமாக அவர்களின் பெயர்களை நீக்குவது நிலுவையில் உள்ளதாகவும் முனிரத்னா கூறினார்.