ஆர்.எஸ்.எஸ். பாடலைப் பாடிய விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மன்னிப்பு கோரியுள்ளார்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த அரசாங்கத்தில் துணை முதல்வராக டி.கே.சிவகுமார் உள்ளார். இவர், சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டசபையின் கூட்டத்தொடரின்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீதம் எனப்படும் ‘நமஸ்தே சத வத்சலே மாத்ருபூமே....’ என தொடங்கும் பாடல் வரிகளைப் பாடினார். இதனால், எதிர்க்கட்சிகள் வரிசையில் சலசலப்பு ஏற்பட்டது. அவர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து, டி.கே.சிவக்குமார் ஆர்.எஸ்.எஸ் பாடல் பாடியது கர்நாடகாவில் அரசியல் ரீதியாக விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஆர்.எஸ்.எஸ். இயக்க பாடலை துணை முதல்வர் பாடியதால், அவர், பா.ஜ.வில் சேருகிறாரா என்று விவாதங்கள் எழுந்தன.
துணை முதல்வரின் இந்தச் செயலுக்கு குனிகல் காங்கிரஸ் எம்.எல்.ஏ எச்.டி.ரங்கநாத் ஆதரவு தெரிவித்திருந்தார். அவர், “நமஸ்தே சதா வத்சலே, அந்தப் பாடல் மிகவும் இனிமையானது. டி.கே.சிவகுமார் சாஹேப் அதைப் பாடிய பிறகு, நான் அதைப் படித்தேன். ’நீங்கள் பிறந்த மண்ணுக்கு தலைவணங்குங்கள். அதில் எனக்கு எந்தத் தவறும் தெரியவில்லை’ என அதில் கூறப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும் அவர், ’’காங்கிரஸ் ஒரு மதச்சார்பற்ற கட்சியாகவே உள்ளது என்றும், அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல் நல்ல கருத்துக்கள் பாராட்டப்பட வேண்டும்’’ என்றும் அவர் வாதிட்டார்.
சிவகுமாரின் செயல் தவறு என்று உயர்மட்டக் குழு உணர்ந்தால், அவர்கள் அவரிடம் பதில் கோருவார்கள்ஜி.பரமேஸ்வரா, கர்நாடக அமைச்சர்
ஆனால், இதுகுறித்து உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ”தலைவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை காங்கிரஸ் கட்சி அறிந்த ஒரு உயர்மட்டக் குழுவைக் கொண்டுள்ளது. சிவகுமாரின் செயல் தவறு என்று உயர்மட்டக் குழு உணர்ந்தால், அவர்கள் அவரிடம் பதில் கோருவார்கள்” என அவர் தெரிவித்தார்.
பின்னர் இதற்குப் பதிலளித்த அவர், ”ஆர்.எஸ்.எஸ். பாடலை பாடியதால், நான் பா.ஜ.வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நான் யாருடனும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சேரும் எண்ணம் இல்லை. நான் உண்மையான காங்கிரஸ்காரன். நான் பிறந்தது முதல் காங்கிரசில் இருக்கிறேன். சாகும் வரை காங்கிரசில் இருப்பேன். என் வாழ்க்கை, ரத்தம் அனைத்திலும் காங்கிரஸ்தான் உள்ளது. இப்போது கட்சியை வழி நடத்தி வருகிறேன். பா.ஜ - ம.ஜ.த. உட்பட ஒவ்வொரு கட்சி குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகிறேன். அது போன்று, ஆர்.எஸ்.எஸ்., குறித்தும் எனக்கு தெரியும். சில அமைப்புகளில் நல்ல குணங்களும் உள்ளன; அவற்றையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நேரடியாகவும், தைரியமாகவும் பேசுவது நம் இயல்பு. மற்றவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களை கவனிக்க வேண்டும். அரசியல்ரீதியாக எங்களுக்கு கொள்கை வேறுபாடு இருக்கலாம். அரசியல்வாதியாக, என் அரசியலில் யார் நண்பர், யார் எதிரி என்பதை நான் தெரிந்துகொள்ள வேண்டாமா? அதனால்தான், ஆர்.எஸ்.எஸ். வரலாறை தெரிந்துகொண்டேன்” எனப் பதிலளித்தார்.
துணை முதல்வர் சிவகுமார் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்பி.கே.ஹரிபிரசாத், காங். எம்.எல்.சி.
எனினும், அவர் ஆர்.எஸ்.எஸ். பாடலைப் பாடியது ஆளும் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசாங்கத்திற்குள் பிளவை ஏற்படுத்தியது. இதையடுத்து, மூத்த தலைவரும் காங்கிரஸ் எம்.எல்.சி.யுமான பி.கே.ஹரிபிரசாத், ”துணை முதல்வர் சிவகுமார் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”துணை முதல்வராக ஆர்.எஸ்.எஸ் கீதத்தைப் பாடுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றாலும், அவர் மாநில காங்கிரஸ் தலைவராக அவ்வாறு செய்வது பொருத்தமற்றது" என்றார்.
தொடர்ந்து அவர், “இதுபோன்ற நிகழ்வுகளை பாஜக இயல்பாகவே வரவேற்கும். நாட்டில் ஆர்.எஸ்.எஸ் மூன்று முறை தடை செய்யப்பட்டுள்ளது. அவர் (டி.கே. சிவகுமார்) துணை முதல்வராக இந்தப் பாடலை வாசித்தால், எந்த ஆட்சேபனையும் இருக்காது. அரசாங்கம் நல்லவர்கள், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் மற்றும் தாலிபானிகள் உட்பட அனைவருக்கும் சொந்தமானது. ஆனால் மாநில காங்கிரஸ் தலைவராக அவர் (சிவகுமார்) ஆர்.எஸ்.எஸ் கீதத்தை வாசிக்க முடியாது. அப்படியானால், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். மகாத்மா காந்தியின் படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் பொறுப்பு. அந்தப் பின்னணியில், சிவகுமார் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். கீதத்தைப் பாடுவதன் செய்தி யாருக்கு என்று எனக்குத் தெரியவில்லை. சிவகுமார் பல தொப்பிகளை அணிந்துள்ளார் - விவசாயி, தொழிலதிபர், அரசியல்வாதி - ஆனால் மகாத்மா காந்தியைக் கொன்ற ஓர் அமைப்பின் கீதத்தைப் பாடுவதன் மூலம், செய்தி யாரையும் சென்றடையக்கூடும்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனது செயல் யாரையேனும் புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன். அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.டி.கே.சிவகுமார், கர்நாடக துணை முதல்வர்
இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் பாடல் சர்ச்சை தொடர்பான விமர்சனத்துக்கு டி.கே.சிவகுமார் மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்துள்ளார். அவர், “எனது நண்பர்கள் சிலர் இதை வைத்து அரசியல் ஆதாயம் பெறவும், பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தவும் முயற்சிக்கின்றனர். நான் காங்கிரஸ் கட்சிக்காரனாக பிறந்தேன். அப்படியே தான் உயிர் பிரிவேன். எனது செயல் யாரையேனும் புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன். அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன். ஆனால், இதை அரசியல் அழுத்தம் காரணமாக செய்யவில்லை. எனது கட்சியின் சகாக்கள் சிலர் இதுதொடர்பாக வெளிப்படுத்திய கருத்தினை நான் விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.