கர்நாடகாவின் அடுத்த முதல்வராகும் டி.கே.சிவகுமார்? விட்டுக்கொடுக்க தயாரான சித்தராமையா?
கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக தற்போதைய துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பதவியேற்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல் சமயத்தில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஏற்பாடுகளை கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2023 மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும் சிவக்குமார் இடையே யார் முதல்வராவது என்பது தொடர்பாக கடுமையான போட்டி நிலவியது. இத்தேர்தலில் காங்கிரஸ் 136 இடங்களை கைப்பற்றிய நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வகிக்கும் டி.கே. சிவகுமார் தனது செல்வாக்கை பயன்படுத்தி எப்படியும் முதல்வராகிவிட வேண்டும் என்பதற்காக மேலிட தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதே சமயம் போன முறை முதல்வராக இருந்த சித்தராமையா, இது தனது கடைசி தேர்தல் என மேலிட தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதனால் தனக்கு முதல்வர் பதவி வேண்டும் என வலியுறுத்தினார். இதனை அடுத்து காங்கிரஸ் மேலிட தலைவர்கள் சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, முதல்வர் பதவி சித்தராமையாவுக்கும் துணை முதல்வர் பதவியை டி.கே.சிவகுமாருக்கும் வழங்க முடிவெடுத்தனர்.
அப்போது, சுழற்சி அடிப்படையில் முதல்வர் பதவி என்ற பேச்சுவார்த்தைக்கு சமரசம் எட்டப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது சித்தராமையா முதலமைச்சர் பதவியை டி.கே.சிவகுமாருக்கு கொடுக்க முடிவெடுத்து இருப்பதகவும் கூறப்படுகிறது.
சுழற்சி முறையில் முதல்வர் மாறுவது குறித்து அம்மாநில கூட்டுறவு துறை அமைச்சர் கே.என். ராஜண்ணாவிடம் கேட்கப்பட்டதற்கு, “தற்போது முதல்வர் பதவியில் சித்தராமையா இருக்கிறார். முதல்வர் பதவி தற்போது காலியாக இல்லை என்பதால் அது குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. இனி சட்டமன்ற தேர்தலில் சித்தராமையா போட்டியிடமாட்டேன் என கூறியுள்ளார். எனவே 2028-ல் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று டி.கே.சிவகுமார் முதல்வராக பதவியேற்கட்டும். அப்போது யாரும் அதனை தடுக்கப்போவதில்லை” என பதிலளித்தார்.
முன்னதாக இரண்டரை ஆண்டுகள் அதாவது 30 மாதங்கள் மட்டுமே சித்தராமையா முதல்வராக இருப்பார் என முடிவெடுக்கப்பட்டது. இருப்பினும் கே.என். ராஜண்ணா அதுபற்றி பேசத்தேவையில்லை என சொல்லி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம் இந்த ஆண்டின் இறுதியில், சித்தராமையாவே தன் முதல்வர் பதவியை சிவக்குமாருக்கே கொடுக்க முடிவெடுத்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.