கர்நாடகா | திரைத் துறையினரை எச்சரித்த துணை முதல்வர் டி.கே.சிவகுமார்.. புதிய சர்ச்சையில் ராஷ்மிகா?
பெங்களூருவில் 16ஆவது திரைப்பட விழாவை துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேற்று தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னணி நடிகர், நடிககைள் வராதது குறித்தும் துணை முதல்வர் விமர்சித்த நிலையில் அவர்களை எப்படி வரவைக்க வேண்டும் என்பது தங்களுக்கு தெரியும் என்று எச்சரிக்கும் ரீதியிலும் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, நடிகர், நடிகைகளை துணை முதல்வர் மிரட்டுகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் அசோகா கண்டனம் தெரிவித்திருந்தார்.
நடிகர், நடிகைகள் யாருடையே சொத்தும் இல்லை என்றும் அவர்களுக்கும் கருத்துரிமையும் சுதந்திரமும் உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் துணை முதல்வரின் பேச்சை நடிகை ரம்யா ஆதரித்துள்ளார். கலாசாரத்தையும் மொழியையும் காக்கும் கடமை திரைத்துறையில் உள்ள நடிகர், நடிகைகளுக்கும் உண்டு என்றும் இவ்விவகாரத்தில் துணை முதல்வர் பேசியது சரியே என்றும் ரம்யா கூறியுள்ளார்.
இதற்கிடையே இவ்விழாவிற்கு பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா வராததும் சர்ச்சையாகியுள்ளது. கர்நாடகாவில் பிறந்த ராஷ்மிகா மந்தனாவை பல முறை அழைத்தும் விழாவிற்கு வரவில்லை என காங்கிரஸ் எம்எல்ஏ ரவிகுமார் கவுடா விமர்சித்துள்ளார். கன்னட மண்ணில் பிறந்து ஹைதராபாத்தில் இருந்து கொண்டு விழாவுக்கு வராத நடிகைக்கு பாடம் புகட்ட வேண்டியது அவசியம் என்றும் அவர் பேசியிருந்தார்.
கன்னட படங்களுக்கு அரசு அளிக்கும் மானியத்தை நிறுத்த முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் கடிதம் எழுதவிருப்பதாகவும் அவர் பேசினார். ராஷ்மிகா மந்தனாவை பிற கன்னட அமைப்புகளும் கண்டித்துள்ளன. இதற்கிடையே ராஷ்மிகா மந்தனாவுக்கு பிரபல பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கவா ரணாவத் ஆதரவு தெரிவித்துள்ளார். திரைப்படத் துறையினருக்கு சிலர் நெருக்கடி தர முயல்வதாகவும் ஆனால் கடவுள் எங்கள் பக்கம்தான் இருப்பார் என்றும் ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.