கர்நாடக துணை முதல்வர்
கர்நாடக துணை முதல்வர்புதிய தலைமுறை

"மக்களின் நலனுக்காக குரல் கொடுப்போம்" - அண்ணாமலை விமர்சனத்துக்கு பதில் கொடுத்த டி.கே. சிவகுமார்!

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூட்டு குழுவில், கலந்து கொள்வதற்கு முன்பாக, செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கர்நாடகாவின் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார். அவர் பேசியது என்ன?.. பார்க்கலாம்.
Published on

சென்னையில் இன்று தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டமானது, தனியார் ஹோட்டல் ஒன்றில் காலை பத்தரை மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட 7 மாநிலங்களின் தலைவர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்காக, கேரளா முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் உள்ளிட்டோர் நேற்று சென்னை வருகை புரிந்தனர்.

முன்னதாக, கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் இன்று சென்னை வந்தடைந்தார். கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக, செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கர்நாடகாவின் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார்.

அதில், ” தொகுதி மறு வரையறை விவகாரத்தில், முதல் அடியை எடுத்து வைத்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறேன். இன்று கூடும் அனைவரும் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்க உள்ளோம். நமது தொகுதிகள் குறைக்கப்படுவதை என்ன விலை கொடுத்தேனும் தடுப்போம். ஒற்றுமையாய் இருந்து நமது தொகுதிகள் எதுவும் குறைக்கப்படாமல் பாதுகாப்போம். நாங்கள் அனைவரும் நாட்டின் நலனுக்காக ஒன்றிணைகிறோம். எங்கள் சுயலாபத்துக்காக அல்ல.

எங்கள் மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை செலுத்துகின்றன. அப்படியிருக்க மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து கல்வி வளர்ச்சி, மக்கள் தொகை கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி என பங்களிப்பு செய்யும் மாநிலங்களைப் பழிவாங்கும் நடவடிக்கையை மத்திய அரசு கட்டவிழ்க்க முயற்சிக்கிறது. நாங்கள் ஒருபோதும் மாநில உரிமைகளை விட்டுத்தர மாட்டோம். எங்கள் மாநிலங்களின் தொகுதிகளையும் விட்டுத்தர மாட்டோம்.” என்றார்.

கர்நாடக துணை முதல்வர்
’திருப்பதி கோயிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும்’ - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

தொடர்ந்து அவரிடம் தமிழகத்தை வஞ்சித்து வரும் கர்நாடகா, கேரளா மாநில தலைவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும், முதல்வர் ஸ்டாலினை கண்டித்து தமிழக பாஜக சார்பில் இன்று கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சிவகுமார், “அவர் எங்கள் மாநிலத்தில் அரசு அதிகாரியாக செயல்பட்டவர். இன்று அவர் வேறு ஒரு பாதையில் பணி செய்கிறார். அவர் பணியை அவர் செய்யட்டும். நாங்கள் எங்கள் வேலையைச் செய்கிறோம். பாஜகவின் கருப்புக் கொடிகளை நான் வரவேற்கிறேன். அவர்கள் என்னை திஹார் சிறைக்கு அனுப்பினால் கூட நான் அஞ்சமாட்டேன்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com