sugar pt web
இந்தியா

PT EXPLAINER : சர்க்கரைக்கு எங்கே போவது?

சர்க்கரை விலை கி. ரூ.45-ல் இருந்து ரூ.65 ஆக உயர்ந்த, மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. விலையேற்றத்திற்கு எத்தனால் தயாரிப்பு காரணம் எனக் கூறினாலும், உண்மை அதைவிட சிக்கலானது. என்னென்ன விஷயங்கள் இருக்கிறது.. விரிவாகப் பார்க்கலாம்.

Angeshwar G

சர்க்கரை விலை உயர்வால் ஶ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விலை உயர்வு.. நெல்லையில் அல்வா விலை உயர்வு..ரூ. 320க்கு விற்கப்பட்ட அல்வா கிலோவுக்கு 20 ரூபாய் உயர்ந்து 340க்கும், கிலோ ரூ.320க்கு விற்கப்பட்ட பால்கோவா 80 ரூபாய் அதிகரித்து கி. ரூ.400க்கு விற்பனை.. தேநீர் விலையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்பு... இந்த உயர்வுக்கு என்ன காரணம்; எல் நினோவால் கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டதா? எத்தனால் தயாரிப்புக்காக கரும்பு பயன்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட பற்றாக்குறையா? பெரும் முதலாளிகளின் பதுக்கல் நடவடிக்கை காரணமாகவா?

இந்தியாவின் சர்க்கரைத் தொழில் சர்க்கரை உற்பத்தியை மட்டுமே சார்ந்ததல்ல; கரும்பு விவசாயம், விவசாயத்தோடு தொடர்புடைய கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் எரிசக்தி கொள்கை என பல விஷயங்களுடன் நேரடித் தொடர்புடையது. இச்சங்கிலியில் எந்த ஒரு இடத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் மொத்த துறையும் பலத்த அடிவாங்கும். இத்தகைய சூழலில் சர்க்கரையின் விலை 40% முதல் 50% வரை அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

white sugar

ஒரு கிலோ சர்க்கரையின் சில்லறை விலை முன்பு சுமார் ₹45 முதல் ₹48 வரை இருந்த நிலையில், தற்போது ₹58 முதல் ₹70 வரை உயர்ந்துள்ளது. இதற்கு நாட்டில் சர்க்கரை உற்பத்தியும் விநியோகமும் குறையப்போகிறது என்பதை மத்திய அரசு முன்கூட்டியே கணிக்கத் தவறியதும், அதற்கேற்ப உரிய நடவடிக்கைகளை சரியான நேரத்தில் எடுக்கவில்லை என்பதையும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

சர்க்கரையை மிக அதிக அளவில் பயன்படுத்தும் நாடாக இருக்கும் இந்தியா, சர்க்கரையை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலிலும் இரண்டாம் இடத்தில் உள்ளது. சர்க்கரை உற்பத்தியை மட்டுமே நம்பி 5 கோடி கரும்பு விவசாயிகளும், 5 லட்சம் சர்க்கரை ஆலை தொழிலாளர்களும் அது சார்ந்த பணியாளர்களும் இருக்கின்றனர். ஏனெனில், சர்க்கரை உற்பத்தியோடு மட்டுமே அத்தொழில் முடிந்துவிடுவதில்லை. சர்க்கரை, எத்தனால், மொலாசஸ் என பல்வேறு பொருட்கள் கரும்பு உற்பத்தியை சார்ந்து இருக்கின்றன.

விலை உயர்வுக்கு காரணம் என்ன?

சர்க்கரை உற்பத்தியில் உபரியை ஏற்றுமதி செய்து கொண்டிருந்த இந்தியாவில் சர்க்கரையின் விலை ஏன் இவ்வளவு அதிகரித்தது. என்னதான் காரணம்? உள்நாட்டில் கரும்பு உற்பத்தி சரிவு; அதனால் குறைந்த சர்க்கரையின் உற்பத்தி.

நடப்பு பருவத்தின் ஆரம்பத்தில் இந்தியாவில் சுமார் 34.3 மில்லியன் டன் சர்க்கரை உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதோ விளைச்சல் குறைவாகவே இருக்கும் என கணிக்கப்பட்டு 30.6 மில்லியன் டன் என மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் உற்பத்தியே சுமார் 11 சதவீதம் குறைந்திருக்கிறது. பருவநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என பலரும் சொல்கின்றனர். குறிப்பாக, கரும்பு விளைச்சலில் முக்கிய மாநிலமான மகாராஷ்டிராவில் கடும் மழையால் கரும்பு விளைச்சலில் ஏற்பட்ட கடும் பாதிப்பு; மற்றொரு மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், பூச்சித் தாக்குதல் மற்றும் பூஞ்சை நோய் காரணமாக கரும்பின் விளைச்சல் குறைந்தது. இந்த உற்பத்தி குறைவு முன்னதாகவே உணரப்பட்டு குறைந்த பட்சம் பிப்ரவரி மாதத்திலாவது மத்திய அரசு அதை சரி செய்திருக்க வேண்டும். ஏனெனில், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு கிடைக்காமல் சில ஆலைகள் கரும்பு அரவைப் பணிகளையே நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தன. ஆனால், மே மாதத்தின் நடுப்பகுதியில்தான் அரசு சர்க்கரை ஏற்றுமதிக்குத் தடை விதித்தது.

‘Cobweb’ சுழற்சி

Sugarcane crop field

வேறொரு முக்கிய காரணத்தையும் சுட்டுகின்றனர் வல்லுநர்கள். அதுதான் ‘Cobweb’ சுழற்சி.. இந்தியாவின் சர்க்கரைத் தொழில்துறை ஒரு வகையான ‘Cobweb’ சுழற்சியில் இயங்கி வருகிறது என்கின்றனர் வல்லுநர்கள். அதாவது, விவசாயப் பொருள் ஒன்றுக்கு கடந்த ஆண்டு மிக அதிக விலை கிடைத்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதனால், அடுத்த ஆண்டும் அந்தப் பொருளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்ப்பார்கள். உதாரணமாக, சர்க்கரை விலை உயரும்போது விவசாயிகள் கரும்பில் அதிக லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து சாகுபடியை அதிகரிக்கின்றனர். ஆனால், கரும்பு உடனடியாக சந்தைக்கு வரக்கூடிய பயிர் அல்ல. 12 முதல் 18 மாதங்கள் கழித்தே அதன் முழுமையான விளைச்சல் தெரியும். அந்த நேரத்தில் உற்பத்தி அதிகரித்து சந்தையில் சர்க்கரை குவிந்தால், சர்க்கரையின் விலை சரிவைச் சந்திக்கும்; இது கரும்பு விலையையும் பாதிக்கும். விலை குறைந்ததால் அடுத்த பருவத்தில் விவசாயிகள் கரும்பை குறைவாகப் பயிரிடத் தொடங்குவார்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே உற்பத்திப் பற்றாக்குறையாக மாறி, சர்க்கரை விலையை மீண்டும் உயர்த்தும். இந்தத் தொடர்ச்சியான ஏற்ற இறக்கம்தான் ‘Cobweb’ சுழற்சி எனப்படுகிறது. இதன் விளைவாக சர்க்கரையின் சில்லறை விலை மீண்டும் வேகமாக உயரும். இந்தப் பிரச்சினையை உறுதிப்படுத்தும் வகையில், இந்தியாவின் கரும்பு உற்பத்தியும் குறைந்துள்ளது. 2022-23-ல் 491 மில்லியன் டன்னாக (491 mt) இருந்த கரும்பு உற்பத்தி, 2024-25-ல் 456 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது.

மேலும் சில

கரும்பு விளைச்சல் குறைந்தது மட்டும்தான் சர்க்கரை விலை உயர்வுக்கு காரணமா என்றால் இல்லை. ஏனெனில், 2024 -2025ல் சர்க்கரை உற்பத்தி 34.1 மில்லியன் டன்னிலிருந்து 29.6 மில்லியன் டன்னாக குறைந்திருந்தது.. அப்போதும் பருவநிலையில் கடும் மாற்றங்கள் இருந்தது. ஆனால், அப்போது இவ்வளவு அதிகமாக விலை உயர்வு இல்லை. அப்படியானால் பண்டிகைக் காலம் என்பதால் அதிகரித்ததா? ஏனெனில் பண்டிகைக் காலத்தில் இனிப்பு உற்பத்திக்காக சர்க்கரையின் தேவை வழக்கமாகவே அதிகரிக்கும். இவைதான் சர்க்கரை விலை உயர்வுக்கு காரணமா? வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

தற்போதோ எத்தனால் உற்பத்திக்கு கரும்பு பயன்படுத்தப்படுகிறது என்பதை மேற்கோள் காட்டுகின்றனர் விமர்சகர்கள். E20 பெட்ரோலுக்காக அரசின் எரிபொருள் கொள்கையில் ஏற்பட்ட முக்கிய மாற்றம் சர்க்கரை விலை உயர்வுக்கு காரணமாக அமைந்ததா என்று பலரும் சந்தேகம் எழுப்புகின்றனர். ஏனெனில், கரும்பை சர்க்கரை தயாரிப்புக்குப் பயன்படுத்துவதற்குப் பதிலாக எத்தனால் தயாரிப்புக்கு திருப்பிவிட்டால், சர்க்கரையை உற்பத்தி செய்யக் கிடைக்கும் கரும்பின் அளவு குறையும் என்பது உண்மை.

சர்க்கரையின் தேவை அதிகரிக்கும் நேரத்தில் கரும்பு உற்பத்தியும் குறைந்திருப்பது, அதிலும் எத்தனால் உற்பத்திக்காக கரும்பு திசை திருப்பப்பட்டதும் சர்க்கரையின் விலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது. ஆனால், மத்திய அரசு இதை மறுத்திருக்கிறது. முந்தைய ஆண்டை விட கடந்த ஆண்டில் எத்தனால் உற்பத்திக்காக குறைந்த அளவு கரும்பே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், கரும்பிலிருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனாலின் பங்கும் குறைந்துள்ளது. 2020-21-ல் மொத்த எத்தனால் உற்பத்தியில் கரும்பின் பங்கு 86.2 சதவீதமாக இருந்தது. 2024-25-ல் அது 31.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. பதிலாக மக்காச்சோளம் போன்ற தானியங்கள் எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன என மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

சரி, வேறு என்ன காரணமென்றால்... சர்வதேச சந்தையிலும் சர்க்கரையின் விலை 16%க்கும் அதிகமாக உயர்ந்திருக்கிறது. இதுவும் இந்திய சந்தையில் விலை உயர்வுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. அதோடு, சர்க்கரையின் விலை மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பில் சந்தையில் செயற்கையான பற்றாக்குறையை உருவாக்குவதும் விலை உயர்வை மேலும் அதிகப்படுத்தியிருக்கலாம் என்றும் அரசு கருதுகிறது. இதைத் தடுக்க சர்க்கரை இருப்புக்கு வரம்பு விதிக்கப்பட்டிருக்கிறது; ஆலைகளில் அரசு அதிகாரிகள் நேரடியாகவே சோதனை மேற்கொள்கின்றனர். ஆன்லைனில் கூட 2 முதல் 3 கிலோவுக்கு மேலாக சர்க்கரையை வாங்க முடிவதில்லை. அதோடு நேரடி சில்லரை விற்பனையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவின் சர்க்கரை கொள்கை

மிக முக்கியமாக சர்க்கரை இறக்குமதி கொள்கையை மத்திய அரசு சற்று தளர்த்தியிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சர்க்கரை இறக்குமதிக்கு 100% வரி விதிக்கப்பட்ட நிலையில், விலை உயர்வை சமாளிக்க 10 லட்சம் டன் சுத்திகரிக்கப்படாத சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இந்த தளர்வை மேலும் சில மாதங்களுக்கு நீடித்து வைத்திருக்க வேண்டுமென நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதிலும் என்ன சிக்கல் என்றால், இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரை உடனடியாக சந்தைக்கு வர சில காலமாகும். சர்க்கரையை வெளிநாடுகளில் இருந்து வாங்கி இந்தியாவுக்கு கொண்டு வந்து, சுத்திகரித்து சந்தையில் விநியோகிப்பது என பல்வேறு கட்டங்கள் உள்ளன.

இந்த இடத்தில்தான் இந்தியாவின் சர்க்கரைக் கொள்கை விமர்சனத்திற்கு உள்ளாகிறது. கரும்பு உற்பத்திக்கு விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் விலை முதல், ஒவ்வொரு சர்க்கரை ஆலையும் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் சந்தையில் எவ்வளவு சர்க்கரையை விற்பனை செய்ய வேண்டும் என்பது வரை அரசு முடிவு செய்கிறது. இத்தகைய கட்டுப்பாடுகளும் சர்க்கரை நெருக்கடிக்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது. கரும்பு விளைச்சல் குறைவு, பருவ நிலை மாற்றம், சர்வதேச அளவில் ஏற்பட்ட சிக்கல், அரசின் சர்க்கரைக் கொள்கை என பல்வேறு விஷயங்களும் சர்க்கரை விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளன.

சர்க்கரை விலையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரும் அழுத்தத்தில் மத்திய அரசு இருக்கிறது. ஏனெனில், சர்க்கரையின் விலை அன்றாட வாழ்க்கையில் சர்க்கரையின் விலை நேரடித் தாக்கத்தை செலுத்தக்கூடியது. அதோடு சர்க்கரை விவகாரத்தில் இந்தியா முழுமையான மற்றும் நீண்ட காலத்திற்கு தேவையான வகையில் கொள்கையை உருவாக்க வேண்டுமென்றும் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். ஒருபுறம் மக்களுக்குத் தேவையான சர்க்கரை கிடைக்க வேண்டும். மறுபுறம், நாட்டின் எரிபொருள் தேவைக்காக எத்தனால் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அதாவது, உணவுப் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் தேவைகள் இரண்டையும் சமநிலைப்படுத்தும் வகையில் இந்தியாவின் சர்க்கரை மற்றும் எத்தனால் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.