மும்பையில் கனமழை pt web
இந்தியா

“அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமானது” மும்பையை புரட்டிப்போட்ட கனமழை

வரலாறு காணாத தொடர் கனமழை மும்பையை புரட்டிப்போட்டுள்ள நிலையில், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

PT digital Desk

வரலாறு காணாத தொடர் கனமழை மும்பையை புரட்டிப்போட்டுள்ள நிலையில், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பைக்கு அடுத்த 48 மணி நேரம் முக்கியமானது என மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

காணும் இடம் எங்கும் தண்ணீர்... இது மட்டுமே மும்பையின் தற்போதைய நிலை... வரலாறு காணாத வகையில் கொட்டித்தீர்க்கும் அதிகனமழையால் மும்பைவாசிகள் கண்ணீரில் தத்தளிக்கிறார்கள்.

மும்பையில் தொடர்ந்து நான்காவது நாளாக கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பிற்பகல் 3 மணிவரை மட்டும் 300 மிமீ மழையை மும்பை நகரம் பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு பகுதிகளில் 10 செ.மீட்டரை கடந்து மழை பதிவாகியுள்ளது. 8 மணி நேரத்தில் மட்டும் சுமார் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு என்கிறார்கள் நிபுணர்கள்.. இடைவிடாமல் பெய்யும் மழையால் பள்ளி, கல்லூரிகள், மட்டுமல்ல தனியார் நிறுவனங்கள் பலவும் விடுமுறை அளித்துள்ளன.

கனமழை காரணமாக தரைவழிப் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் மற்றும் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. போக்குவரத்து நடைபெற்ற சில இடங்களிலும் கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு பிரஹன் மும்பை மாநகராட்சி அறிவுறுத்தியிருக்கிறது.

கனமழையின் காரணமாக, மும்பையின் செம்பூரில் உள்ள மைசூர் காலனி அருகே ஒரு உயரமான பாதையில் மோனோரயில் ஒன்று நின்றுவிட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கிக் கொண்டனர். மகாராஷ்டிராவின் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இதுதொடர்பாகக் கூறுகையில், பயணிகள் அதிகம் கூடியதால் ரயிலின் ஒரு பகுதி சாய்ந்துவிட்டது. “ஹார்பர்லைன் (மும்பையின் புறநகர் ரயில்வேயின் கிளைப்பாதை) மூடப்பட்டதால், பல பயணிகள் மோனோரெயில் வழியாக செல்ல முற்பட்டனர். அதிகப்படியான கூட்டத்தால் ரயில் சாய்ந்தது; அதே சமயம் மின் தடையும் ஏற்பட்டது” எனத் தெரிவித்திருக்கிறார். மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தாதர் நகரம், கிங் சர்க்கிள் மேம்பாலங்கள் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவிக்கின்றன. அந்தேரி சுரங்கப்பாதை முற்றிலுமாக மூழ்கி விட்டது. விமானம் மட்டுமல்ல ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையிலுள்ள இந்தியாவின் நுழைவுவாயில் பகுதியில், கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. தடுப்புகளை எகிறும் அலைகளால், கரைப்பகுதியில் தண்ணீர் தேங்கி வருகிறது.

இதனிடையே, மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்படுவதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களும் பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால், இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மும்பை, தானே, ரத்னகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அடுத்த 48 மணி நேரம் முக்கியமானது எனவும், தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.