தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோரின் பட்டங்களை வெளியிடுவதற்கு மத்திய தகவல் ஆணையம் (CIC) பிறப்பித்த உத்தரவுகளை, டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பிரதமர் மோடிக்கு 1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், 1983ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் வழங்கப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சி தெரிவித்திருந்தது. எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி, இந்தப் பட்டங்கள் ஜோடிக்கப்பட்டவை என்று குற்றம்சாட்டியிருந்தன.
இதையடுத்து, தகவல் அறியும் உரிமை ஆர்வலரான நீரஜ் குமார், 1978ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தின் பி.ஏ. படிப்பில் சேர்ந்த மாணவர்களின் பட்டியல் எண்கள், மதிப்பெண்கள் மற்றும் அவர்கள் படிப்பில் தேர்ச்சி பெற்றார்களா அல்லது தோல்வியடைந்தார்களா என்பது உள்ளிட்ட விவரங்களைக் கோரியிருந்தார். பல்கலைக்கழகத்தின் மத்திய பொது தகவல் அதிகாரி, அது மூன்றாம் தரப்பு தகவல் என்று கூறி கோரிக்கையை மறுத்தார். இதையடுத்து, நீரஜ் குமார் மத்திய தகவல் ஆணையத்தை அணுகினார். 2016ஆம் ஆண்டு, அந்த தகவல்களை வழங்குமாறு மத்திய தகவல் ஆணையம், டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, 2017ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, தனி நீதிபதி சச்சின் தத்தாவின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ’பிரதமர் நரேந்திர மோடி தொடர்புடைய பட்டப் படிப்பு ஆவணங்களை நீதிமன்றத்திடம் காண்பிக்க தயார் என்றும், ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தொடர்பு இல்லாத ஒரு நபரின் ஆய்வுக்காக ஆவணங்களை வழங்க முடியாது’ எனவும் பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ‘எந்தவொரு தனிநபரின் மதிப்பெண் பட்டியல்கள், முடிவுகள் அல்லது பட்டச் சான்றிதழ் அல்லது கல்விப் பதிவுகள், அந்த நபர் பொதுப் பதவியில் இருந்தாலும்கூட, தனிப்பட்ட தகவல்களின் தன்மையில் உள்ளன. அவை RTI சட்டத்தின் கீழ் வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன’ எனத் தெரிவித்த நீதிபதி, பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிடுமாறு டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்ட மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தார்.
பிரதமர் மோடியின் இளங்கலைப் பட்ட விவகாரம் தொடர்பான தீர்ப்பை விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ், தனது சமூக வலைதளத்தில் 'கல்வி ஏன் ரகசியமாக இருக்க வேண்டும்? அல்லது #DegreeChori என்பதும் சரியா? சும்மா கேட்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல், மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்மிருதி இராணியின் கல்வி ஆவணங்களைக் கேட்ட மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. ஸ்மிருதி இராணியின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு சான்றிதழ்களைக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவர் விண்ணப்பித்திருந்தார். அதனடிப்படையில் அவர் தேர்ச்சி பெற்றாரா என்பதை உறுதிசெய்யும் வகையில் கல்விச் சான்றிதழ்களை வழங்க சி.பி.எஸ்.இ நிர்வாகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து சி.பி.எஸ்.இ தொடர்ந்த வழக்கில், டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், மத்திய தகவல் ஆணையத்தின் அணுகுமுறை முற்றிலும் தவறானது என கருத்து தெரிவித்தார். ஒருவரின் பட்டம், மதிப்பெண்கள், தேர்வுமுடிவுகள் போன்ற பொது தகவல் உள்ளிட்டவற்றை நேரடியாக வழங்க முடியாது என்று நீதிபதி கூறினார். அவ்வாறான நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை மீறக்கூடிய வகையில் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.