”எந்த உலக தலைவரும் சொல்லி பாகிஸ்தான் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை” - பிரதமர் மோடி பேச்சு
நாடாளுமன்றத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதுதொடர்பாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மக்களவை உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில், இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இன்று உரையாற்றினார். அப்போது அவர், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க துணை அதிபர் தன்னை அழைத்து மிகப்பெரிய தாக்குதலை பாகிஸ்தான் நடத்த உள்ளதாக கூறியதாக குறிப்பிட்டார். பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், அதற்கு மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுக்கப்படும் என அப்போது துணை அதிபரிடம் தெரிவித்ததாக பிரதமர் மோடி கூறினார்.
பல ஆண்டுகள் நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பதிலடியை இந்திய ராணுவத்தினர் கொடுத்ததாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், 100 சதவீத இலக்குகளை இந்திய ராணுவம் தகர்த்ததாக தெரிவித்தார். தொடர்ந்து தாக்குதலை தயவுசெய்து நிறுத்திக்கொள்ளும்படி பாகிஸ்தான் கெஞ்சியதாக குறிப்பிட்ட அவர், ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை மண்டியிட வைத்துவிட்டதாக தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறிய அவர், பாகிஸ்தான் ராணுவம் இனி என்ன செய்தாலும் அதற்கு தக்க பதிலடி தரப்படும் என சூளுரைத்தார். அரசியலுக்காக பாகிஸ்தானை நம்பி இருக்கும் காங்கிரஸ் கட்சியால் மக்கள் மனங்களை வெல்ல முடியாது என விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கருத்து, இந்திய எல்லைக்கு வெளியில் இருந்து வருவது போலவே இருப்பதாக சாடியுள்ள பிரதமர் மோடி, இந்தியா மீதும் ராணுவ வலிமை மீதும் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை என விமர்சித்துள்ளார்.
இந்தியாவுக்கு உலகின் ஆதரவு கிடைத்தது என்றும் காங்கிரஸின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை என்றும் பிரதமர் மோடி கூறினார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகமே இந்தியாவின் வலிமையை உணர்ந்துள்ளது என்று கூறிய பிரதமர் மோடி, பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல் இனி எடுபடாது என்று கூறி உள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை தானே நிறுத்தியதாக ட்ரம்ப் கூறிவரும் நிலையில், ட்ரம்பின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் மீதான தாக்குதலை நிறுத்தவேண்டும் என இந்தியாவுக்கு உலக தலைவர்கள் யாரும் அறிவுறுத்தவில்லை என கூறினார்.