அரசியலுக்கு முடிவு? மீண்டும் கலைத்துறையில் கால்பதிக்க திட்டம் போடும் ஸ்மிருதி இரானி!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில், பாஜகவால் 2014இல் களமிறக்கப்பட்டவர் ஸ்மிருதி இரானி. ஒரு காலத்தில், இந்தி நாடக நடிகையாக அறியப்பட்ட இவர் ஹிந்தி மாநிலங்கள் அனைத்திலும் பிரபலம் என்பதால், ராகுலுக்கு எதிராக பாஜக நிறுத்தியது. 2014 தேர்தலில் ராகுலிடம் தோல்வியை தழுவினாலும், ஸ்மிருதி இரானியை அமைச்சராகிய பாஜக அமேதி தொகுதியில் தொடர்ந்து அவரை பணியாற்ற செய்தது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக நாடு முழுவதும் பயணப்பட்ட ராகுலுக்கு இதன் மூலம் நெருக்கடி கொடுத்தது. "தோற்றாலும் தொடர்ந்து தொகுதிக்கு வரும் ஸ்மிருதி இரானி எங்கே? வென்றாலும் அமேதிக்கு எப்போதாவது வரும் ராகுல் எங்கே?" என்று கேள்வி கேட்டது.
ஒரு கட்டத்தில் அமைதி தொகுதியிலேயே வீடு எடுத்து தங்கினார் ஸ்மிருதி இரானி. அடுத்து வந்த 2019 தேர்தலில், ராகுல் காந்திக்கு அதிர்ச்சி அளிக்கும் தோல்வியை ஸ்மிருதி இரானி கொடுத்தார். அமேதியில் சொந்த வீடு வாங்கி, ஊரைக் கூட்டி அவர் கொடுத்த விருந்து வெறும் பேசுபொருளாக அப்போது இருந்தது. "அமேதிக்காரராகவே ஆகிவிட்டார் ஸ்மிருதி இரானி" என்றெல்லாம் பேசப்பட்டது. 2024 தேர்தலில் ஸ்மிருதி இரானி தோல்வியைத் தழுவினார். இதற்குப் பின் ஆட்சியிலும் அவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. கட்சித் தலைவருக்கான போட்டியில் அவர் பெயர் அடிபட்டாலும் அது பலிப்பதற்கான சாத்தியம் குறைவு என்கின்றனர் அவருடைய போட்டியாளர்கள்.
இந்தச் சூழலில், மீண்டும் மும்பையிலேயே தங்கிவிட்ட ஸ்மிருதி இரானி அடுத்து பழையபடி நடிக்கவும் தயார் ஆகிவிட்டார் என்கிறார்கள். "ராகுலை வீழ்த்துவதற்காக பாஜக சொல்லி கொஞ்ச காலம் உள்ளூர் வேஷம் போட்டார் ஸ்மிருதி இரானி. இப்போது பழையபடி தொலைக்காட்சிகளுக்கே வேஷம் கட்ட போய்விட்டார். ஆனால் ராகுல் எப்போதும் அமேதி மக்களோடு இருக்கிறார்" என்கிறார்கள் உத்தர பிரதேச காங்கிரஸார்.