சி.பி.ராதாகிருஷ்ணன் எக்ஸ் தளம்
இந்தியா

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சிபிஆர் வெற்றி.. தலைவர்கள் வாழ்த்து.. காங்கிரஸ் விமர்சனம்!

நாட்டின் 15ஆவது குடியரசு துணைத் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Prakash J

நாட்டின் 15ஆவது குடியரசு துணைத் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அரசியல் கட்சியினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற சிபிஆர்

நாட்டின், 14வது துணைக் குடியரசுத் தலைவராக 2022 ஆகஸ்டில் பதவியேற்ற ஜக்தீப் தன்கர், கடந்த ஜூலை இறுதியில், உடல்நிலையை காரணம் காட்டி அப்பதவியை ராஜினாமா செய்தார். பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே அவர் ராஜினாமா செய்தது, தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. எனினும் ஜெகதீப் தன்கர் ராஜிநாமா செய்ததால், குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும், i-n-d-i-a கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர். 788 பேரில் 781 எம்.பி.க்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 14 பேர் வாக்களிக்காத நிலையில், 98.2 சதவீத வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் நடத்தும் அதிகாரி பிசி மோடி தெரிவித்தார். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளும், சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளும் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதன்மூலம், 152 வாக்குகள் வித்தியாசத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். வரும் 12ஆம் தேதி அவர் பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

14 ஓட்டுகள் கூடுதலாகப் பெற்ற சிபிஆர்

பாஜக தலைமையிலான தே.ஜ. கூட்டணிக்கு, இரு அவைகளிலும் 427 எம்.பிக்கள் உள்ளனர். அந்த வகையில் இத்தேர்தலில், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பாஜவுக்கு ஆதரவு வழங்கியது. இக்கட்சிக்கு, 11 எம்.பிக்கள் உள்ளனர். இதன்படி பார்த்தால், தே.ஜ. கூட்டணியின் மொத்த பலம், 438. ஆனால், 14 ஓட்டுகள் கூடுதலாக, அதாவது, 452 ஓட்டுகள் பெற்று, சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அதே சமயம், 315 எம்.பிக்களின் ஆதரவு இருப்பதாக சொன்ன i-n-d-i-a கூட்டணி, 300 ஓட்டுகளையே பெற்றது. இதனால், அக்கூட்டணியின் 15 எம்.பிக்கள் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்தனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், செல்லாத ஓட்டுகளைப் போட்ட 15 எம்.பிக்கள் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மோடி, சிபிஆர்

புறக்கணித்த கட்சிகள் எவை?

இந்தத் தேர்தலை நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் (7 எம்பிக்கள் ராஜ்ய சபா), தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி (4 எம்பிக்கள், ராஜ்ய சபா), பஞ்சாபில் செயல்படும் சிரோண்மணி அகாலி தளம் (1 எம்பி லோக்சபா) ஆகியன புறக்கணித்தன.

இதற்கிடையே குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தமிழக முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நன்றி தெரிவித்த பாஜக.. விமர்சித்த காங்கிரஸ்

இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனசாட்சியுடன் வாக்களித்ததாக பாஜக பாராட்டியுள்ளது. சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த பாஜகவின் மக்களவை தலைமை கொறடா சஞ்சய் ஜெய்ஸ்வால், அவரது வெற்றிக்குச் சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் காரணம் என குறிப்பிட்டார்.

அதேநேரத்தில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றி ஆளும் கட்சியின் தார்மீக மற்றும் அரசியல்ரீதியான தோல்வி என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு, இந்தத் தேர்தலில் 40 சதவீத வாக்குகளைப் பெற்று, தங்களது வலுவான நிலைப்பாட்டை நிரூபித்துள்ளதாகக் காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த வெற்றிக்குப் பிறகு, புதிய குடியரசு துணைத் தலைவர் நடுநிலையாகச் செயல்படுவார் என்று நம்புவதாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

"ஜனநாயகத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் முக்கியம். அவை இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை.
சி.பி.ராதாகிருஷ்ணன்
மல்லிகார்ஜுன கார்கே

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன், "ஜனநாயகத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் முக்கியம். அவை இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை. நாட்டின் வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒன்றாக பணியாற்ற வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.

யார் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன்?

குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன், கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1957ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி பிறந்தவர். 16 வயதிலேயே அரசியலுக்குள் நுழைந்த அவர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஜனசங்கத்தில் பணியாற்றினார். எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தியின் அவசரநிலை பிரகடனத்துக்கு எதிராக மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தியுள்ளார்.1974இல் ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட அவர், அது பாரதிய ஜனதா கட்சியாக மாறியபோது, அதில் பணியாற்றினார்.1998இல் நடந்த கோவை குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு, கோவையில் பாஜகவின் வளர்ச்சியில் அவர் முக்கியப் பங்காற்றினார். அதன் பலனாக 1998 மற்றும் 1999 மக்களவைத் தேர்தல்களில் கோவை தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி. ஆனார். 2004-2007 காலக்கட்டத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.

சிபிஆர்

அப்போது கன்னியாகுமரி முதல் சென்னை வரை அவர் மேற்கொண்ட யாத்திரை பேசுபொருளானது. அதன் பின்னர் போட்டியிட்ட மூன்று தேர்தல்களில் அவரால் வெற்றிபெற முடியாவிட்டாலும், இரண்டாம் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். குறிப்பாக 2014 பொதுத் தேர்தலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆதரவு இன்றி 3.8 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார். இது அவருக்கு கோவையில் உள்ள செல்வாக்கை வெளிப்படுத்தியது. மத்தியில் 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்தபின் சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய கயிறு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் பாஜக தேசிய செயலாளர், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், கேரள மாநில பொறுப்பாளர் உள்ளிட்ட பதவிகளிலும் இருந்துள்ளார். மோடி தலைமையிலான மத்திய அரசு, சீனியரான சி.பி.ராதாகிருஷ்ணனின் உழைப்புக்குப் பரிசாக, 2023 பிப்ரவரியில் அவரை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமித்தது. ஓராண்டுக்குப் பின் இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார மாநிலமான மகாராஷ்டிரத்தின் ஆளுநராக மாற்றப்பட்டார்.