’துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக தமிழர்..’ சி.பி.ராதாகிருஷ்ணனை களமிறக்கும் பாஜக!
2022-ல் நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஜெகதீப் தன்கர் 75% வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட மார்கரெட் வெறும் ஆல்வா 25% வாக்குகளை மட்டுமே பெற்றார்.
அதாவது மொத்தம் 528 வாக்குகள் பெற்ற தன்கர், எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை 346 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த 30 ஆண்டுகளில் ஒருவர் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பெற்ற அதிகபட்ச வெற்றி வாக்குகள் அதுவாகவே இருந்தது.
இப்படி இந்திய அரசின் அதிகார படிநிலையில் 2ஆவது பெரிய பதவியான குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்ற ஜெகதீப் தன்கர், தனது உடல் நலனை கருத்தில் கொண்டு கடந்த மாதம் 21-ம் தேதி பதவி விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் தான் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் தொடங்கியுள்ளது.
பாஜக வேட்பாளராக தமிழர் தேர்வு..
ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துகொண்ட நிலையில், புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அட்டவணை கடந்த 7-ம் தேதி வெளியிடப்பட்டது.
அதன்படி புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்யவதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்புமனு தாக்கல் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. மனுதாக்கல் செய்ய வருகிற 21-ம் தேதியோடு கடைசி நாள் என சொல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக (NDA) கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச்சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா அறிவித்துள்ளார். இந்த முடிவு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மன்றக்குழுவில் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்துவரும் சி.பி. ராதாகிருஷ்ணன், முன்னாள் கோயம்பத்தூர் எம்பியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.