ஜார்கண்ட் மாநில ஆளுநராக உள்ள சிபி ராதாகிருஷ்ணனுக்கு கோவை சிட்டிசன் பார்ம் அமைப்பு சார்பில் கொடிசியா வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய சிபி ராதாகிருஷ்ணன், “வானதி சீனிவாசன் திறமையான பெண்மணி என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் திடீரென்று கோவையில் கமல்ஹாசன் நிற்கிறார் என்ற செய்தி வந்தது. நம் மக்கள் கமல்ஹாசன் கட்சிக்கு அவ்வளவு வாக்குகளை அளித்துவிட மாட்டார்கள் என நினைத்தேன். கமல்ஹாசன் கட்சி இரண்டு இடங்களில் தான் லட்சத்திற்கு மேல் வாக்குகளை வாங்கியுள்ளது. ஒன்று தென் சென்னையில் அடுத்தது கோவையில். வானதிக்கு அருமையான வாய்ப்பு வந்துள்ளதே.
இந்த நேரத்தில் இப்படியான சூழல் வந்துள்ளதே என்று கமல்ஹாசன் வந்து நின்ற போது நானே ஒரு நிமிடம் திகைத்து தான் போனேன். ஆனாலும் அடுத்த நிமிடமே சுதாரித்து வானதி எதையும் சமாளிக்கும் என நினைத்து, வானதியை அழைத்து, “கவலைப் படாதேம்மா... நீ வெற்றி பெறப்போகிறாய் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். அப்படி கடினமாக உழைக்கும் போது நீ மிகப்பெரிய எதிராளியை தோற்கடிக்கிறாய்.” என சொன்னேன்.
நான் ஏற்கனவே வேலுமணியைப் பற்றி சொல்லியுள்ளேன். ஜெயலலிதாவுக்கு பிறகு யார் என்று பார்த்த போது, அவருக்கு பின் யாரையும் தேடவேண்டியதில்லை, ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியை சிறப்பாக செய்தார். எனக்கு ஒரு நாள் போன் செய்தார். அப்போது, நாம் இருவரும் ஒரு தவறு செய்துவிட்டோம். அதை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்கிறார். ஊட்டியை எங்களுக்கு கொடுத்துவிட்டு குன்னூரை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார். அகில இந்திய அளவில் அனைத்தும் அறிவித்தாயிற்று. நீங்கள் இதை மாற்றிக் கொடுங்கள். அப்படி நடந்தால் நாம் குன்னூரிலும் வெற்றி பெற்றுவிடுவோம். ஊட்டியிலும் வெற்றி பெற்றுவிடுவோம்” என்கிறார்.
அப்போது முருகன் தலைவனாக இருந்தார். அவரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். காலம் கடந்து விட்டது. அதனால் அது மாற்ற முடியாமல் போய்விட்டது. சட்டமன்ற பொறுப்பாளராக வேலுமணி இருந்த தொகுதிகளில் மட்டுமே தோல்வி. அந்த அளவிற்கு கடுமையான உழைப்பாளி.
வானதி போன்ற தலைவர்கள் எல்லாம் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றுவதால் மட்டும் சாதனைகளை நிறைவேற்றுவதால் மட்டும் தேர்தலில் வெற்றி வந்துவிடாது. வேலுமணி போல் அனைத்து வித்தைகளையும் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். நான் ப்ராக்டிகலாக இல்லாததால் தான் இரண்டு முறை வெற்றி பெற்ற ஆள் மூன்று முறை தொடர்ந்து தோற்றேன்.
நான் பாரதிய ஜனதா கட்சிப் பணிகளை ராஜினாமா செய்யும் போது அண்ணாமலையிடம், “தலைவரே இன்னைக்காவது நான் சொல்றத ஒரு தடவ கேளுங்க தலைவரே” என்றேன். நல்லவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் எதிர் முகாம் எத்தகைய வியூகங்களை வகுக்கிறதோ அதற்கு மாற்று வியூகங்களை வகுத்தால் மட்டும் தான் வெற்றி பெற வேண்டும் என்று சொன்னேன்.
நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது கோவைக்கு 7 புதிய ரயில்களைக் கொண்டு வந்தோம். அடுத்த தேர்தலில் தோல்வியை தழுவினோம். வெற்றி பெறுவதற்கும் சாதனைகளை செய்வதற்கும் சம்பந்தம் இல்லை. சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துச் செல்லும் போது தான் வெற்றி சாத்தியமாகும். வேலுமணியோடு நீ பயணிக்கும் வரை உனக்கு பிரச்சனை இல்லை. எதிரணி ஆனால் அதன் பின் நீ காணாமல் போய்விடுவாய்” என்றார்.