குடியரசு துணைத் தலைவர் தேர்தல் : 15-வது குடியரசு துணைத் தலைவராகிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்!
குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் அதிகபட்சமாக 452 வாக்குகளைப் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத்தலைவராக தேர்வாகி இருக்கிறார்
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, புதிய குடியரசு துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி. ராதகிருஷ்ணனும் இண்டியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் குடியரசு துணைத்தலைவருக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. எம்.பி க்கள் வாக்களிக்க நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பிரதமர் மோடி தனது முதல் வாக்கை பதிவு செய்து தேர்தலை தொடங்கி வைத்தார். மாநிலங்களவை மற்றும் மக்களவை என இரு அவைகளிலும் 788 பேர் உள்ள நிலையில் காலி இடங்கள் நீங்கலாக இந்த தேர்தலில் 782 பேர் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தனர்.
சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி !
காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. தொடர்ந்து, மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, 452 வாக்குகளைப் பெற்று பாஜக கூட்டணியை சார்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். எதிர்த்து போட்டியிட்ட இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை பெற்றிருந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் 15-வது துணைக்குடியரசு தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்க உள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், "இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர், நமது அரசியலமைப்பு அமைப்பையும், ஜனநாயக சிறப்புமிக்க கோட்பாடுகளையும் உறுதியுடன் கடைபிடித்து தனது பொறுப்புகளை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், "பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் திறம்படப் பணியாற்றிய அவர்தம் பொதுவாழ்விற்கும், தொடர் அர்ப்பணிப்போடு அவராற்றிய மக்கள் சேவைக்கும், இப்பதவி மிகச் சிறந்த அங்கீகாரம் ஆகும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
குடியரசு துணைத் தலைவராக தேர்வாகி உள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் குறித்து அவரது சித்தப்பாவும், மூன்று முறை கோவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான சி கே குப்புசாமி நெகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், “நான் விட்டு வந்திருந்த அரசியல் பணிகளை எனக்குப் பின்னால் வந்து சிறப்பாக செயல்பட்டு சிறந்த நிலையை அடைந்துள்ளாார்" எனத் தெரிவித்திருக்கிறார். அவரது இளைய சகோதரர் சி.பி. குமரேசன், “40 ஆண்டுகால அரசியல் பொது வாழ்விலிருந்து இந்த நிலையை அவர் அடைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது... அவரது பணி சிறக்க வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருக்கிறார்.