Congress rebels from Himachal join BJP
Congress rebels from Himachal join BJP twitter
இந்தியா

இமாச்சல்: தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 காங். எம்எல்ஏக்கள்.. பாஜகவில் ஐக்கியம்.. தேர்தலில் போட்டி?

Prakash J

மாநிலங்களவை தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வாக்கு செலுத்திய காங். எம்.எல்.ஏக்கள்!

மக்களின் உரிமையைப் பறைசாற்றும் மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. முதற்கட்டமாக தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 எம்.எல்.ஏக்கள் இன்று (மார்ச் 23) பாஜகவில் ஐக்கியமாகி உள்ளனர்.

இமாச்சல் பிரதேசத்தில், கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அம்மாநிலத்துக்கான 1 மாநிலங்களவைத் தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மான்வி சிங்கியும், பாஜக சார்பில் ஹர்ஷ் மகாஜன் ஆகியோரும் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேரும், சுயேட்சை எம்எல்ஏக்கள் 3 பேரும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்ததால், ஹர்ஷ் வெற்றிபெற்றதுடன், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியடைந்தார். இது இமாச்சல் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.

இதையும் படிக்க: குஜராத்: காங்கிரஸைத் தொடர்ந்து அடுத்தடுத்து விலகும் பாஜக வேட்பாளர்கள்.. காரணம் என்ன?

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 காங். எம்.எல்.ஏக்கள் பாஜகவில் ஐக்கியம்

இதைத் தொடர்ந்து, ராஜீந்தர் ராணா, சுதீர் சர்மா, இந்தர் தத் லக்கன்பா, தெய்வேந்தர் குமார் பூட்டோ, ரவி தாக்கூர், சேத்தன்ய சர்மா ஆகிய காங்கிரஸைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்த குற்றத்துக்காக (மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு) அம்மாநில சபாநாயகரால் கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த 6 பேரும், இன்று (மார்ச் 23) டெல்லியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இமாச்சல பிரதேச பாஜக தலைவர் ராஜீவ் பிண்டல் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

அதுபோல், மாநிலங்களவை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த சுயேட்சை எம்எல்ஏக்களான ஆஷீஷ் சர்மா, ஹோஷியார் சிங் மற்றும் கே.எல்.தாகூர் ஆகிய 3 பேரும் நேற்று (மார்ச் 22) தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவர்களும் இன்று பாஜகவில் இணைந்துள்ளனர்.

இதையும் படிக்க: மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ சோதனை.. லோக்பால் ஆணைய உத்தரவால் நடவடிக்கை!

மக்களவைத் தேர்தலுடன் சட்டபேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்

இமாச்சல பிரதேச சட்டமன்றத்தில் மொத்தம் 68 இடங்கள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில், 6 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் தற்போது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 34 ஆக குறைந்துள்ளது. அத்துடன் சுயேட்சை 3 வேட்பாளர்களும் ஆதரவு அளித்திருந்தனர். தற்போது சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு இது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அதேசமயம், பாஜகவுக்கு 25 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

காங்கிரஸ் - பாஜக

இந்த நிலையில் அம்மாநிலத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் வரும் ஜூன் 1ஆம் தேதி கடைசிகட்டமாக நான்கு மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. அப்போதே, காலியாக உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் (தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், ராஜினாமா செய்த இடங்கள்) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதையும் படிக்க: கல்லூரியில் பாஜக மீட்டிங்.. கலந்துகொள்ள மாணவர்கள் எதிர்ப்பு.. ஐடி கார்டுகளைப் பறித்து கண்டிப்பு!