பாஜகவுக்கு வாக்களித்த காங். MLAs.. இமாச்சல் அரசியலில் கிளம்பிய புயல்..காப்பான் ஆக டி.கே.சிவக்குமார்!

இமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் ஆட்சியை காப்பாற்ற பல்வேறு அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டு உள்ளது.
டி.கே.சிவகுமார்
டி.கே.சிவகுமார்ட்விட்டர்

இமாச்சல்: மாநிலங்களவை தேர்தலில் வெடித்த பிரச்னை!

இமாச்சல் பிரதேசத்தில், கடந்த 2022ஆம் ஆண்டு 68 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 40 இடங்களையும், பாஜக 25 இடங்களையும் பெற்றது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களில் வெற்றிபெற்றிருந்தனர். இதையடுத்து, பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி காங்கிரஸ் அரியணை ஏறியது. காங்கிரஸ் ஆட்சிக்கு, அந்த 3 சுயேட்சை வேட்பாளர்களும் ஆதரவு தந்தனர். அம்மாநில முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு உள்ளார். இருப்பினும் அம்மாநில காங்கிரஸில் கடந்த சில மாதங்களாகவே, உட்கட்சி பூசல் நடைபெற்று வரும் நிலையில், கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி மாநிலங்களவை தேர்தலின்போது அது பூதாகரமாக வெடித்தது.

சுக்விந்தர் சிங் சுகு
சுக்விந்தர் சிங் சுகு

காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் வெற்றிபெற்ற பாஜக!

அதாவது, அம்மாநிலத்துக்கு என ஒரு மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அந்த 1 இடத்துக்கு காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மான்வி சிங்கியும், பாஜக சார்பில் ஹர்ஷ் மகாஜன் ஆகியோரும் போட்டியிட்டனர். இம்மாநிலத்தில், 35 எம்எல்ஏக்களின் ஆதரவு பெறும் வேட்பாளர் மாநிலங்களவை எம்.பியாகத் தேர்வுசெய்யப்படுவார். அந்த வகையில், காங்கிரஸ் கட்சிக்கு தங்களது கட்சியின் 40 எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேட்சைகளின் ஆதரவு என மொத்தம் 43 எம்எல்ஏக்கள் இருப்பதால் அபிஷேக் மான்விதான் நிச்சயம் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேரும், சுயேட்சை எம்எல்ஏக்கள் 3 பேரும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்ததால், ஹர்ஷ் வெற்றிபெற்றதுடன், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியடைந்தார்.

பாஜக வெற்றிபெற்றது எப்படி?

அதாவது, 40 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 34 பேர் மட்டுமே சிங்விக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதுபோல், பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜனுக்கும் 34 வாக்குகள் கிடைக்கப் பெற்றன. 25 பாஜக எம்எல்ஏக்கள் தவிர, 3 சுயேட்சை மற்றும் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்தனர். காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் இருவரும் 34-34 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். அத்தகைய சூழ்நிலையில், குலுக்கல் முறையில் முடிவு தீர்மானிக்கப்பட்டு பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றார். இது, அம்மாநிலத்தில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் பேசுபொருளானது.

இதையும் படிக்க: நேரத்திற்கு வராத மணமகன்; ரூ35,000 பெற மணப்பெண் எடுத்த முடிவு! உ.பி திருமண திட்டத்தில் மீண்டும் மோசடி

பாஜக மீது குற்றஞ்சாட்டிய இமாச்சல் முதல்வர்!

இதையடுத்து வாக்குப்பதிவுக்கு பிறகு 6 சட்டமன்ற உறுப்பினர்களும், பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்திற்கு மாநிலத்தின் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கான்வாய் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டதாக முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு குற்றம்சாட்டியிருந்தார். பின்னர், அந்த 6 எம்எல்ஏக்களும் ஹரியானாவில் இருந்து நேற்று மாநில சட்டசபைக்கு வந்தபோது, பாஜகவினர் அவர்களைக் கைதட்டி வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

விக்ரமாதித்ய சிங்
விக்ரமாதித்ய சிங்

திடீரென பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்!

இந்தப் பரபரப்புக்கிடையே இமாச்சல் பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகனான பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த விக்ரமாதித்ய சிங் திடீரென ராஜினாமா செய்தது, மேலும் அம்மாநிலத்தில் புயலைக் கிளப்பியது. 6 எம்எல்ஏக்கள் போக இன்னுமொருவர் பாஜகவிற்குத் தேவை என தகவல் பரவிய நிலையிலேயே, விக்ரமாதித்ய சிங் திடீர் ராஜினாமா செய்ததாகவும், அவரும் விரைவில் அசாம் மாநில முதல்வர் ஹேமந்த் பிஸ்வாஸ் முன்னிலையில் பாஜகவில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விக்ரமாதித்ய சிங்கின் தாயார் பிரதிபா சிங் அம்மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார். பிரதீபா சிங்கே முதலமைச்சராக விரும்பியதாகவும், ஆனால் 2022 சட்டமன்றத் தேர்தலில் சுக்விந்தர் சிங் சுகுவை காங்கிரஸ் மேலிடம் முதல்வராக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த அதிருப்தியில்தான் அவர் விலகியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

இதையும் படிக்க: சந்தேஷ்காலி விவகாரம்: முக்கிய நபர் கைது.. கொண்டாடிய பெண்கள்.. மம்தா கட்சி எடுத்த அதிரடி முடிவு!

பெரும்பான்மையை நிரூபிக்க கோரிக்கைவைத்த பாஜக!

இதைத் தொடர்ந்து, ’இமாச்சல சட்டப்பேரவையில் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லை. எனவே, சட்டப்பேரவையில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி எதிர்கட்சித் தலைவர் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லாவை சந்தித்து வலியுறுத்தினர்.

இதையடுத்து, இமாச்சல முதல்வர் சுக்வீந்தர் ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியானது. இதை மறுத்த முதல்வர் சுக்வீந்தர், ’அது தவறான செய்தி எனவும், காங்கிரஸ் அரசு இமாச்சலில் 5 ஆண்டு ஆட்சியை முழுவதுமாக நிறைவுசெய்யும்’ எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில் சபாநாயகர் அறையில் கோஷம் எழுப்பியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் உள்பட 15 பாஜக எம்எல்ஏக்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள காங்கிரஸ் தரப்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 எம்.எல்.ஏக்கள்!

மேலும், மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு, ராஜீந்தர் ராணா, சுதீர் சர்மா, இந்தர் தத் லக்கன்பா, தெய்வேந்தர் குமார் பூட்டோ, ரவி தாக்கூர், சேத்தன்ய சர்மா ஆகிய காங்கிரஸைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்த குற்றத்துக்காக அம்மாநில சபாநாயகரால் இன்று தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் விரைவில் பாஜகவில் இணைந்து இடைத்தேர்தலில் களமிறங்க உள்ளனர். இதற்கிடையே சட்டசபையில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை என்பது 62 என குறைந்துள்ளது. தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் கட்சிக்கு 32 எம்எல்ஏக்கள் வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 34 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சி ஆட்சியை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதையும் படிக்க: வீல்சேர் இல்லாததால் முதியவர் உயிரிழந்த விவகாரம்: ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்!

காங்கிரஸ் எம்.ஏல்.ஏக்கள் மாறி ஓட்டளிக்கக் காரணம் என்ன?

கடந்த 2022ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்தவர், ஹர்ஷ் மகாஜன். இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தார். காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தியால் பின்னர் பாஜகவுக்குத் தாவினார். அவர்தான் சமீபத்தீல் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக நிறுத்தப்பட்டு தற்போது வெற்றி கண்டிருப்பவர். இமாச்சலில் தற்போது அரசியல் புயல் வீசுவதற்கு இவரே காரணம் எனக் கூறப்படுகிறது. இவர் விரித்த வலையில் வீழ்ந்தவர்கள்தான் அந்த 6 காங். எம்.எல்.ஏக்களும்.

ஹர்ஷ் மகாஜன்
ஹர்ஷ் மகாஜன்

இதில், ராஜிந்தர் ராணா, சுதிர் சர்மா மற்றும் ரவி தாக்கூர் ஆகியோரிடம் முதற்கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார், ஹர்ஷ். காரணம், இவர்கள் மூவரும் அமைச்சர் பதவி கிடைக்காத வருத்தத்திலும் முதல்வர் மீதான அதிருப்தியிலும் இருந்துள்ளனர். இவர்களை ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய அவர், அடுத்து இவர்களுடன் தொடர்பில் இருந்த இதர காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான லக்கன் பால், சைதன்ய ஷர்மா மற்றும் தேவேந்திர பூட்டோ ஆகியோரையும் இழுத்துள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களே பாஜகவுக்கு பச்சைக்கொடி காட்டிய தைரியத்தைப் பார்த்த 3 சுயேட்சை எம்எல்ஏக்களான ஹோஷ்யர் சிங், கே.எல்.தாக்கூர், ஆஷிஷ் ஷர்மா ஆகியோரும் அந்தப் பக்கம் சாய்ந்துவிட்டனர்.

இதையும் படிக்க: முதலிரவு குறித்த கேள்வி: டி.வி. நேரலையில் காமெடி நடிகரைத் தாக்கிய பிரபல பாகிஸ்தான் பாடகி!

நெருக்கடியில் காங்கிரஸ்: தீர்வுகாணும் டி.கே.சிவகுமார்

வடஇந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் இமாச்சலப் பிரதேசம்தான். ஆனால் இங்கும் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் முளைத்திருப்பதால், ஆட்சியை காப்பாற்ற பல்வேறு அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டு உள்ளது. மேலும் எம்எல்ஏக்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திலும் காங்கிரஸ் கட்சி உள்ளது. இத்தகைய பிரச்னைக்குத் தீர்வுகாண, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரால்தான் முடியும் என தீர்மானித்து அந்தப் பொறுப்பை காங்கிரஸ் தலைமையிடம் அவரிடம் ஒப்படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

டி.கே.சிவகுமாரை, காங்.தலைமை தேர்வு செய்தது ஏன்?

காரணம், தென் இந்தியாவின் கர்நாடகாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸாரிடம் நிலவிய அதிருப்தியைச் சரிகட்டி, அதிலும் வெற்றியும் பெற்றவர் டி.கே.சிவகுமார். அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிப்பதற்கு அவருடைய பங்களிப்பும் பாதி என்று கூறப்பட்டது. அதேபோல், சமீபத்தில் நடைபெற்ற தெலங்கானாவில் காங்கிரஸ் முதல்முறையாகப் பிடிப்பதற்கு இவர் தந்த ஆலோசனைகளே அதிகம் எனக் கூறப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், 2001இல் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேஷ்முக் தலைமையிலான காங்கிரஸ் கட்சி சிக்கலை எதிர்கொண்டபோது, காங்கிரஸ் எம்எல்ஏக்களை பெங்களூரு வரவழைத்து, அவர்களை உபசரித்து நெருக்கடியை தீர்த்தார். அதன்மூலம் சிக்கலை தீர்த்துவைக்கக்கூடிய தலைவர் என டி.கே.சிவக்குமார் பெயர்பெற்றார். அதாவது எதிரிகளின் வலையில் வீழ்ந்துவிடாதவண்ணம் அளவுக்கு கட்சியினரை ஒற்றுமையாய் வைத்திருப்பதிலும், வளர்த்தெடுப்பதிலும் டி.கே.சிவகுமார் திறமையானவர் என காங்கிரஸ் மேலிடம் நம்புகிறது. அந்த நம்பிக்கையில்தான் அவரிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைப்பட்டிருப்பதாகவும், அங்கும் நெருக்கடியைச் சுலபமாக எதிர்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அதை உடைக்க பாஜக முயற்சி செய்துவருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com