aap, congress
aap, congress twitter
இந்தியா

குஜராத்: கைகோர்த்த ஆம் ஆத்மி - காங்கிரஸ்.. பாஜகவை வீழ்த்த வியூகம்!

Prakash J

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 7ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், குஜராத்தைச் சேர்ந்த 2 பாஜக வேட்பாளர்கள் மக்களவை தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தது அக்கட்சிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், குஜராத்தில், வரும் தேர்தலில் பாஜகவை எதிர்த்து காங்கிரஸும் - ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவுசெய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிக்க: அறிவித்த 1 மணி நேரத்தில் உத்தவ் அணி வேட்பாளருக்கு 3 வருட பழைய ஊழல் வழக்கில் நோட்டீஸ்; ஆக்‌ஷனில் ED!

கடந்த 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள 26 நாடாளுமன்றத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. இரண்டு தேர்தல்களிலும் அக்கட்சி 60 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து, கடந்த 2022 குஜராத் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியும் தனித்தனியாகப் போட்டியிட்டதால், எதிர்க்கட்சி வாக்குகள் பிரிந்து, மாநிலத்தில் உள்ள 182 தொகுதிகளில் 156இல் 51 சதவீத வாக்குகளுடன் பாஜக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அதேநேரத்தில் காங்கிரஸ் 27.5 சதவீத வாக்குகளுடன் 17 இடங்களையும், ஆம் ஆத்மி 13 சதவீத வாக்குகளுடன் 5 இடங்களையும் மட்டுமே பெற முடிந்தது. அதிலும் கடந்த நான்கு மாதங்களில் மாநிலத்தில் 4 காங்கிரஸ் மற்றும் 1 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த நிலையில்தான் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்குகளைப் பிரிப்பதற்கு திட்டம் வகுத்து குஜராத்தில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் இணைந்துள்ளன. அதன்படி, 26 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் 24 இடங்களிலும், ஆம் ஆத்மி 2 இடங்களிலும் போட்டியிட முடிவுசெய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே இந்த இரண்டு கட்சிகளும் I-N-D-I-A கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில், ஒருசில மாநிலங்களில் மட்டும் இணைந்து போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளன. அந்த வகையில், பஞ்சாப்பில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. அங்கு ஆம் ஆத்மி ஆட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ”தேர்தல் பத்திரம் மிகப்பெரிய ஊழல்; இது பூதாகரமாக உருவெடுக்கும்” - நிர்மலா சீதாராமனின் கணவர் கருத்து!