சமஸ்
பிஹார் சட்டமன்ற தேர்தலை ஒட்டி, புதிய தலைமுறை குழுவினர் அங்கு முகாமிட்டிருக்கும் நிலையில், 2025 தேர்தலில் முடிவுகளைத் தீர்மானிப்பவர்களாக பெண் வாக்காளர்களே இருப்பார்கள் என்கிறார் ஆசிரியர் சமஸ்.
பிஹார் தேர்தலில் யார் வெல்வார்? இந்தக் கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில் வைத்திருக்கலாம். ஆனால், கொஞ்சம் அரசியல் தெரிந்த விமர்சகர்களும் சரி; அரசியல் செயல்பாட்டாளர்களும் சரி; ஒரே பதிலைத்தான் சொல்கிறார்கள். பிஹார் பெண்கள் கைகளில்தான் முடிவு இருக்கிறது!
சுதந்திரம் அடைந்த முதலான அரை நூற்றாண்டு காலம் கிட்டத்தட்ட பெண்களுக்குப் பெரிய முக்கியத்துவம் இல்லாமல்தான் அரசியல் போய்க்கொண்டிருந்தது. அரசியல் என்றாலே, அது ஆண்களின் பேட்டை என்றிருந்த சூழலுக்கு, பதிவாகும் மொத்த ஓட்டுகளில் ஆண்களுடைய பங்கே அதிகமாக இருந்ததும் ஒரு காரணம். இந்தியாவில், ஒரு தேர்தலில் பதிவாகும் மொத்த ஓட்டுகளில் ஆண் வாக்காளர்களுடைய பங்கு என்ன; பெண் வாக்காளர்களுடைய பங்கு என்ன என்ற கணக்கெடுப்பு 1962 தேர்தலில்தான் முதன்முதலில் தொடங்கியது. பிஹாரை எடுத்துக்கொண்டால், அந்தக் காலகட்டத்தில் ஆண் வாக்காளர்களில் 54.9% பேர் வாக்களித்தால் பெண் வாக்காளர்களில் 32.5% பேரே வாக்களித்திருந்தனர். அதாவது, ஆண் வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பேர் வாக்களித்தால், பெண்களில் மூன்றில் ஒருவரே வாக்களித்தார்.
காலம் மாறமாற சூழல் மேம்பட்டாலும், 2005 தேர்தல் வரை ஆண்கள் ஆதிக்கமே அதிகம் இருந்தது. ஆனால், 2010 தேர்தலில் பிஹார் தேர்தல் களம் மாறியது. ஆண்களைக் காட்டிலும் பெண்கள் வாக்களிப்பது முதல் முறையாக அதிகமானது. இது படிப்படியாக வளர்ந்து 2020 சட்டமன்றத் தேர்தலில் ஆண்களில் 54.5% பேர் வாக்களித்தால், பெண்களில் இந்த எண்ணிக்கை 59.7% ஆக உயர்ந்தது. அதாவது, ஆண்களோடு ஒப்பிட பெண் வாக்களிப்பு 5% அளவுக்கு அதிகம் ஆனது.
நாட்டிலேயே இந்தப் போக்கில் பெரும் பலன் அடைந்தவர் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரைத்தான் சொல்ல வேண்டும்.
தேர்தலில் பெண்களின் பங்களிப்பு உயர உயர அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்களுடைய கணக்குகளில் பெண்களின் அக்கறைகள் முன்னுரிமை பெறலாயின. நாட்டிலேயே இந்தப் போக்கில் பெரும் பலன் அடைந்தவர் என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரைத்தான் சொல்ல வேண்டும். சாதி கணக்குகள் பெரும் தாக்கம் செலுத்தும் பிஹார் அரசியலில், பெரிய செல்வாக்கு இல்லாத, எண்ணிக்கையில் மிகவும் சிறுபான்மையான குர்மி சமூகத்தைச் சேர்ந்தவர் நிதிஷ் குமார். ஆனால், சென்ற இரு தசாப்தங்களாக அவருடைய கொடியே பிஹாரில் பறக்கிறது. மண்டல் அரசியல் எதிர் கமண்டல் அரசியல் எனும் வீரியமான பிளவுகள் நிலவும் பிஹார் களத்தில், இரண்டுக்கும் மத்தியில் நிதிஷ் குமார் அசையாமல் நிற்பதற்கு பின்னணியில் இருக்கும் முக்கியமான ஓட்டு வங்கி பெண்கள்தான்!
பிஹாரில் கணிசமான பெண் வாக்காளர்கள் நிதிஷ் பின்னால் வர ஆரம்பித்ததற்கு முக்கியமான காரணம், ஒருகாலத்தில் தாதாயிஸத்துக்குப் பேர் போன மாநிலமாக இருந்த பிஹாரை சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவர் கொடுத்த முக்கியத்துவம். தவிர, பொருளாதார சுதந்திரத்தின் வழியாகவே பிஹார் பெண்களை அதிகாரமயப்படுத்த முடியும் எனும் அரசியல் பார்வையும் நிதிஷிடம் இருந்தது. 2000இல் முதல்வராக பொறுப்பேற்றிருந்த ஒரு வருஷத்துக்கும் குறைவான காலத்திலேயே அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார். பிஹாரில் பெண் கல்வியை வளர்த்தெடுத்த மிக முக்கியமான திட்டம் இது.
2005இல் முதல்வராகப் பொறுப்பேற்ற அடுத்த சில ஆண்டுகளிலேயே உள்ளாட்சி பதவிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீட்டை வழங்கினார். இப்படி பெண்களுக்கு சரிபாதி இடஒதுக்கீடு என்பது இந்தியாவிலேயே அதுதான் முதல் முறை. 2010இல் முதல்வர் பொறுப்பேற்ற் அடுத்த சில ஆண்டுகளில், காவல் துறை உள்பட எல்லா அரசுப் பணிகளிலும் 35% இடஒதுக்கீட்டை பெண்களுக்கு அறிவித்தார். 2015இல் முதல்வரானதும் எவ்வளவோ எதிர்ப்புகள் மத்தியிலும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார்.
இவற்றுக்கெல்லாம் உச்சம் போன்றதுதான் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், உலக வங்கியுடன் பிஹார் அரசு இணைந்து கொண்டுவந்த ஜீவிகா திட்டம். ஜீவிகா என்றால், வாழ்வதாரம் என்று அர்த்தமாம். 2006இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், சுயவுதவிக் குழுக்களின் வழியாக மகளிரின் பொருளாதாரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டது. இன்றைக்கு கிட்டத்தட்ட 11 லட்சம் மகளிர் சுயவுதவி குழுக்கள் இருக்கின்றன; இவற்றில் 1.4 கோடி பெண்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். குறைந்த வட்டியில் இவர்களுக்கு கடன்கள் கொடுக்கப்பட்டது, பிஹார் பெண் சமூகத்தில் நல்ல மாற்றங்களை உண்டாக்கியிருக்கிறது.
ஜீவிகா திட்டத்தின் கீழ் நிறைய முன்னெடுப்புகளை செய்கிறார்கள். குறிப்பாக "ஜீவிகா தீதி கி ரசோய்” எனும் திட்டத்தை சொல்லலாம். “தீதி கி ரசோய்" என்றால், ‘நம்ம சகோதரியோட உணவகம்’ என்று மொழிபெயர்க்கலாம். அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் வளாகத்திலேயே நல்ல உணவைச் சமைத்து தரும் வேலையில் இங்கே பெண்கள் ஈடுபடுகிறார்கள்.
பெண்களுடைய பொருளாதாரத்தை மேலே கொண்டுசெல்லும் ஜீவிகா திட்டத்தின் அடுத்த கட்டமாகத்தான் 2025 தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்கள் முன்பு முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா எனும் திட்டத்தை அறிவித்தார் நிதிஷ். பிஹாரின் 1.4 கோடி பெண்களுடைய சிறு தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக தலா ரூ.10,000 வழங்கும் திட்டம் இது. அது ஆடு வளர்ப்போ, சின்ன பெட்டிக்கடையோ ஏதோ ஒரு வகையில், நல்லபடி தொழிலை விருத்தி செய்து காட்டினால், அடுத்த ஆறு மாதங்களில் தலா ரூ.2 லட்சம் வரை நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
பிஹாரை பொருத்த அளவில் இதெல்லாமே அர்த்தபூர்வமானதுதான். பத்தாயிரம் ரூபாய் எல்லாம் ஒரு காசா; இதெல்லாம் ஒரு திட்டமா என்று பிஹாரை அறிந்தவர்கள் யாருமே சொல்ல மாட்டார்கள். மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மாநிலம் இது. அதாவது, மாதம் 6000 ரூபாய்க்கு கீழே சம்பாதிக்கும் நிலையிலேயே மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இருக்கிறார்கள். இந்தியாவிலேயே அதிகமான வறுமை விகிதம் இது. இந்தியாவில் அதிகம் கால்நடைகள் வளர்க்கும் மாநிலங்களில் ஒன்றும் இது. பிஹார் கிராமங்களில் கிட்டத்தட்ட 90% குடும்பங்கள் கால்நடை வளர்ப்பையும் சார்ந்துதான் இருக்கின்றன. “பத்தாயிரத்தில் ஐந்து ஆட்டுக்குட்டிகளை வாங்கலாம் அல்லது நல்லதாக ஒரு மாட்டு கன்றை வாங்கலாம்; எப்படியும் எளிய மக்களுக்கு இது குறிப்பிடத்தக்க தொகைத்தான்” என்கிறார்கள்.
எது எப்படியோ, பிஹார் அரசியல் களத்தில் இந்த செயல்பாடுகள் எல்லாமே தீவிரமான தாக்கத்தை உண்டாக்குகின்றன. 2020 சட்டமன்ற தேர்தலை எடுத்துக்கொண்டால், பிஹாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகம் உள்ள தொகுதிகள் 119. இந்த 119 இடங்களில், 72 தொகுதிகளை - அதாவது 60.5% இடங்களை நிதிஷ் தலைமையிலான கூட்டணியே வென்றது. மாறாக, பெண்களைவிட ஆண்கள் அதிகமாக இருந்த தொகுதிகளில், எதிரணியான தேஜஸ்வி கூட்டணியே அதிகமாக வென்றது; ஆண்கள் அதிகமுள்ள 124 தொகுதிகளில் 68 தொகுதிகளை - அதாவது, 54.8% இடங்களை அது வென்றது.
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால், 2020 தேர்தலில் நிதிஷ் அணி, தேஜஸ்வி அணி இரண்டுமே கிட்டத்தட்ட 37% வாக்குகளையே பெற்றிருந்தன. ஆனால், வெற்றி கணக்கில் தேஜஸ்வி அணியைவிட 15 இடங்களைக் கூடுதலாக வென்றதால் நிதிஷ் அணி ஆட்சி அமைத்தது. இந்தக் கூடுதல் வெற்றிக்கான முக்கியமான காரணம் பெண்கள் அதிகமான தொகுதிகளில் நிதிஷ் அணிக்குக் கிடைத்த கூடுதல் வெற்றி.
இரு தசாப்தங்களாக முதல்வர் பதவியில் இருக்கும் நிதிஷ் அரசு மீது நிறையவே இம்முறை அதிருப்தி குரல்களைக் கேட்க முடிகிறது. பிஹாருக்கான தேவைகள் அதிகம்; மாற்றம் வேண்டும் என்ற பேச்சை பரவலாகக் கேட்க முடிகிறது; ஆண்கள் உரத்துப் பேசுகிறார்கள்; ஆனால், பெண்களிடம் உரத்த குரலைக் கேட்க முடியவில்லை; பிஹாருக்கு மாற்றம் வேண்டும் என்று சொல்லும் பெண்களிலும்கூட பெரும்பான்மையினர் நிதிஷைப் பற்றி மரியாதையோடுதான் பேசுகின்றனர். நிதிஷை வீழ்த்த வேண்டும் என்றால், அவருடைய பெண்கள் ஓட்டு வங்கியை உடைக்க வேண்டியது அவசியம் என்பதை தேஜஸ்வி நன்றாகவே உணர்ந்திருக்கிறார். அதனால்தான் அவர் தலைமையிலான கூட்டணியின் தேர்தல் அறிக்கை பெண்கள் முன்னேற்றத்துக்கு பெரும் அக்கறை அளிக்கிறது. பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 வழங்கப்படும் என்றும், ஜீவிகா குழு மகளிருக்கு நிரந்தர வேலை அளிக்கப்படும் என்றும் தேஜஸ்வி அறிவித்திருப்பது பெண் அரசியலின் அடுத்தகட்ட பாய்ச்சல் என்று சொல்லலாம்.
சித்தாந்த சார்பு, சாதி, மதச் சார்பு இவற்றையெல்லாம் தூக்கி வீசிவிட்டு, நடைமுறை வாழ்க்கைக்கான தேவைகளை முன்னிறுத்தி பெண் அரசியல் முன்னகர்வது அரசியலில் மட்டும் அல்லாமல் சமூகத்திலும் பண்பு மாற்றத்தை உருவாக்குகிறது. ஜெயிக்கப்போவது யார் என்று தெரியவில்லை; ஆனால், யார் ஜெயித்தாலும் பெண்களின் அரசியலும், பெண்களுக்கான அரசியல் முக்கியத்துவமும் அடுத்தகட்டத்துக்கு போகும் என்பது நிச்சயம். அந்த வகையில் பிஹார் 2025 தேர்தல் நாட்டுக்குச் சொல்லும் முக்கியமான இன்னொரு சேதி பெண்களின் எழுச்சி!