பானு முஷ்டாக், சித்தராமையா முகநூல், பிடிஐ
இந்தியா

தசராவுக்கு அழைப்பு விடுத்த கர்நாடக அரசு.. இஸ்லாமிய எழுத்தாளர் பானு முஷ்டாக்கிற்கு எதிர்ப்பு ஏன்?

தசரா பண்டிகையைத் தொடங்கிவைக்க இஸ்லாமிய எழுத்தாளர் பானு முஷ்டாக்கிற்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்துள்ளதற்கு மாநிலத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Prakash J

கர்நாடக அரசு தசரா விழாவைத் தொடங்க இஸ்லாமிய எழுத்தாளர் பானு முஷ்டாக்கை அழைத்தது அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கடுமையாக எதிர்க்க, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மதச்சார்பின்மையை வலியுறுத்தினார். பானு முஷ்டாக் தசரா விழாவை மதிப்பதாகவும், சாமுண்டேஸ்வரியைப் பற்றிய மரியாதையை வெளிப்படுத்தினார்.

தசராவுக்கு அழைப்பு விடுத்த கர்நாடக அரசு

இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான, பிரபலமான விழாக்களில் தசராவும் ஒன்று. இது, அக்டோபர் 2ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில், தசரா கொண்டாட்டங்களைத் தொடங்கி வைக்க புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரும் சமூக நல ஆர்வலருமான பானு முஷ்டாக்கிற்கு முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்திருந்தார்.

அவர், இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்த விவகாரம் கர்நாடக மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது. பாஜக தலைவர் பிரதாப் சிம்ஹா இதுகுறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். ”நீங்கள் ஒரு முஸ்லிம் என்பதால் நான் நிச்சயமாக இந்த ஆட்சேபனையை எழுப்பவில்லை. ஆனால் தசரா கொண்டாட்டம் ஒரு மதச்சார்பற்ற நிகழ்வு அல்ல. இது ஒரு மதக் கொண்டாட்டம். பானு முஷ்டாக்கின் தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இது சாமுண்டேஸ்வரி தெய்வத்திற்கு பூஜை செய்வதை உள்ளடக்கிய ஒரு மத நிகழ்வு. பானு முஷ்டாக், சாமுண்டேஸ்வரி தேவியை நம்புகிறாரா? மேலும் அவர் எங்கள் சடங்குகளைப் பின்பற்றுகிறாரா” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

முஷ்டாக்கிற்கு எதிரான இந்த எதிர்ப்பு அனைத்தும் அரசியல். அயோத்தி ராமர் கோயில் ஏன் இந்துக்களுக்கு மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை? ஏன் அப்படி ஒரு பலகையை அங்கு வைக்கவில்லை
டி.கே.சிவகுமார், துணை முதல்வர்
டி.கே.சிவகுமார், சித்தராமையா

ஆதரவு தெரிவித்த துணை முதல்வர்

இதற்குப் பதிலளித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், “சாமுண்டி மலையும் சாமுண்டி தேவியும் ஒவ்வொரு மதத்திற்கும் சொந்தமானவர்கள். அது, இந்துக்களின் சொத்து மட்டுமல்ல. அனைத்து சமூக மக்களும் சாமுண்டி மலைகளுக்குச் சென்று தெய்வத்திற்கு பிரார்த்தனை செய்கிறார்கள். அது அவர்களின் நம்பிக்கை. நாங்கள் தேவாலயங்கள், ஜெயின் கோயில்கள், தர்காக்கள், குருத்வாராக்களுக்குச் செல்கிறோம். முஷ்டாக்கிற்கு எதிரான இந்த எதிர்ப்பு அனைத்தும் அரசியல். அயோத்தி ராமர் கோயில் ஏன் இந்துக்களுக்கு மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை? ஏன் அப்படி ஒரு பலகையை அங்கு வைக்கவில்லை. இது ஒரு மதச்சார்பற்ற நாடு. ஓர் அரசியலமைப்பு உள்ளது. அனைவருக்கும் பாதுகாப்பு உள்ளது, மேலும் அனைவரும் தங்கள் நம்பிக்கையைப் பின்பற்றலாம்” எனத் தெரிவித்திருந்தார்.

கடுமையாக எதிர்க்கும் பாஜக

எனினும் இந்த விவகாரம், கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேயான மோதலாக மாறி வருகிறது. டி.கே.சிவகுமார் தொடர்பாக பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா, ”நூறு டி.கே.சிவகுமார்கள் வந்தாலும் அதை மாற்ற முடியாது. சாமுண்டி மலை, தர்மஸ்தலா, திருப்பதி, சபரிமலை, இவை அனைத்தும் இந்துக்களின் சொத்து. சாமுண்டி மலையில் உள்ள பொருட்களை நீங்கள் தொடவோ அல்லது மாற்றவோ முயன்றால், கிளர்ச்சி ஏற்படும். கவனமாக இருங்கள், நான் காங்கிரஸ் கட்சிக்கு இந்த எச்சரிக்கையை விடுக்கிறேன்” என எச்சரித்துள்ளார்.

அதேபோல் மைசூரு எம்பி யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ வாடியாரும், துணை முதல்வரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ”சாமுண்டி பெட்டா ஒரு சக்தி பீடம். சாஸ்திரங்களால் புனிதப்படுத்தப்பட்டு கோடிக்கணக்கான இந்துக்களால் போற்றப்படுகிறது. இந்தக் கோயில் அன்றும், இன்றும், எப்போதும் இந்துக்களின் சொத்தாகவே இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

பானு முஷ்டாக் தசராவைத் தொடங்கி வைப்பதற்குப் பின்னால் ஒரு பெரிய திட்டம் இருக்கிறது
தேஜஸ்வி சூர்யா, பாஜக எம்.பி.

சனாதன தர்மம் என்பது சிலை வழிபாடு மற்றும் தெய்வத்திற்கு பிரார்த்தனை செய்வது ஆகியவற்றை உள்ளடக்கியது. நீங்கள் அதை ஒப்புக்கொள்கிறீர்களா? நீங்கள் ஒப்புக்கொண்டால், உங்கள் நிலைப்பாட்டைப் பகிரங்கப்படுத்தி தசரா விழாக்களைத் தொடங்கி வைக்கவும்” என்று பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா தெரிவித்திருந்தார்.

இந்துத்துவ ஆதரவாளர் சக்ரவர்த்தி சுலிபெலே, "கன்னட புவனேஸ்வரியை சகிக்க முடியாத சாமுண்டேஸ்வரியின் ஆடம்பரத்திற்கு முன்னால் தலைவணங்க பானு முஷ்தாக் எப்படி ஒப்புக்கொண்டார்” எனக் கேள்வி எழுப்பினார்.

பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, ”பானு முஷ்டாக் தசராவைத் தொடங்கி வைப்பதற்குப் பின்னால் ஒரு பெரிய திட்டம் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரும் எதிர்ப்பு

மேலும், டி.கே.சிவகுமாரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, ”காங்கிரஸ் கட்சியின் தொனி மற்றும் நிலைப்பாடு தொடர்ந்து இந்து விரோதமாகவும், அம்மக்களின் நலன்களுக்கு எதிரானதாகவும் இருந்து வருகிறது. மதச்சார்பின்மை பற்றி தொடர்ந்து பிரசங்கிப்பவர்கள் கோயில்கள் ’மதச்சார்பற்ற இடங்கள்’ அல்ல, அவை இந்துக்களுக்குச் சொந்தமான புனித நிறுவனங்கள் என்பதை உணர வேண்டும். காங்கிரஸ் கட்சி தனது இந்து எதிர்ப்பு மனநிலையை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. நமது கடவுள்களை வெளிப்படையாக நிராகரிக்கும் பானு முஷ்டாக்கை மைசூர் தசராவைத் தொடங்கி வைக்க அவர்கள் அழைக்கிறார்கள். இப்போது அவர்களின் துணை முதல்வர் சாமுண்டி இந்துக்களின் சொத்து அல்ல என்று சொல்லத் துணிகிறார். கர்நாடகாவின் நம்பிக்கை மற்றும் மரபுகள் மீது அவர்கள் வைத்திருக்கும் மரியாதை இதுதானா” எனக் கேள்வியுள்ளார்.

பானு முஷ்டாக் விழாவைத் தொடங்கி வைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு பரவலாக ஏற்றுக்கொள்ளத்தக்கது. அதை அரசியலாக்கத் தேவையில்லை
எச்.கே.பாட்டீல், கர்நாடக அமைச்சர்

அதேநேரத்தில், சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் எச்.சி.மகாதேவப்பா மற்றும் சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் எச்.கே.பாட்டீல் ஆகியோர் பானு முஷ்டாக்கிற்கும் அரசாங்கத்தின் அழைப்புக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். "பானு முஷ்டாக் விழாவைத் தொடங்கி வைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு பரவலாக ஏற்றுக்கொள்ளத்தக்கது. அதை அரசியலாக்கத் தேவையில்லை" என்று எச்.கே.பாட்டீல் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் விளைவாக, தசரா பதவியேற்பு விழாவில் பாரம்பரியமாக மைசூருவின் தலைமை தெய்வமான சாமுண்டேஸ்வரி தேவிக்கு, வேத மந்திரங்களுடன் மலர் அஞ்சலி செலுத்துவது வழக்கம் என்பதால், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சிலர் அவரது தேர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

பானு முஷ்டாக்கிற்கு எதிர்ப்பு ஏன்?

கடந்த 2023ஆம் ஆண்டு கன்னட மொழியை, ’புவனேஸ்வரி தேவி’ வடிவில் வழிபடுவதாக எழுத்தாளர் பானு முஷ்டாக் விமர்சித்துள்ளார். அது தன்னைப் போன்ற மொழியியல் சிறுபான்மையினருக்கு விலக்கு அளிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அந்த பழைய காணொளியின் வாயிலாகவே இந்த எதிர்ப்பு அலை உருவாகி உள்ளது.

பானு முஷ்டாக்

இதற்கிடையே, பானு முஷ்டாக் தசராவைத் தொடங்கி வைத்தது தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், "அன்னை சாமுண்டேஸ்வரி மீது எனக்கு மரியாதை உண்டு" என எழுத்தாளர் தெளிவுபடுத்தியுள்ளார். ”தசராவை மாநில விழா என்று அழைப்பதும், அன்னை சாமுண்டேஸ்வரியை அன்புடனும் பாசத்துடனும் குறிப்பிடுவதும் நமது கலாசாரத்தின் ஒரு பகுதியாகும். அதனால்தான் அது எனக்கும் மிகவும் பிடித்தமானது. மக்கள் அவரை அம்மா சாமுண்டேஸ்வரி என்று அழைக்கிறார்கள். மக்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். பலர் தசரா விழாவை நாட ஹப்பா (மாநில விழா) என்று அழைக்கிறார்கள், அதையும் நான் மதிக்கிறேன். தசரா என்பது நானும் முன்பு அன்புடன் பங்கேற்ற ஒரு திருவிழா. மைசூர் தசராவின் ஜம்பூ சவாரியைக் காண நான் என் பெற்றோருடன் பலமுறை சென்றேன். இப்போது விழாவைத் தொடங்கி வைக்க அழைக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.