சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட எழுத்தாளர்.. யார் இந்த பானு முஷ்டாக்?
உலக அளவில் ஆங்கில இலக்கியப் புனைவுக்காக வழங்கப்படும் உயரிய விருது சர்வதேச புக்கர் பரிசு. நடப்பாண்டுக்கான இந்த விருது, பிரபல கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக் எழுதிய ’ஹார்ட் லாம்ப்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு அறிவிக்கப்படுள்ளது. 1990 மற்றும் 2023-க்கு இடையில் எழுதப்பட்ட கதைகளை உள்ளடக்கிய ‘ஹார்ட் லாம்ப்’, தென்னிந்தியாவில் முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை சித்தரிக்கிறது. சர்வதேச அளவில் இறுதிப் போட்டியில் இருந்த ஆறு புத்தகங்களில் இருந்து இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்புத்தகம் அதன் நகைச்சுவையான, துடிப்பான பேச்சு வழக்கு, நெகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான" கதை சொல்லலுக்காக பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதன்மூலம் சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் கன்னட எழுத்தாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
யார் இந்த பானு முஷ்டாக்?
எழுத்தாளர், வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலரான பானு முஷ்டாக், கர்நாடகாவின் ஒரு சிறிய நகரத்தில் இஸ்லாம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். தொடக்கம் முதலே கன்னடத்தைக் கற்றுக் கொண்ட அவர், அம்மொழியில் சிறந்து விளங்கினார். அது, பின்னர் அவரது இலக்கிய வெளிப்பாட்டின் மொழியாக மாறியது. பள்ளியிலேயே அவர் எழுதத் தொடங்கினாலும், அவருடைய படைப்பு வெளியாக பல ஆண்டுகள் ஆகின. பானுவின் முதல் சிறுகதை, அவருடைய திருமணம் ஆன ஒரு வருடம் கழித்து 27ஆவது வயதில் உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றில் வெளியானது. எனினும், அவருடைய திருமண வாழ்க்கையின் ஆரம்ப வருடங்கள் உணர்ச்சிப் போராட்டத்தால் குறிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். ”எனக்கு எப்போதும் எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தது, ஆனால் எழுத எதுவும் இல்லை, ஏனென்றால் திடீரென்று, ஒரு காதல் திருமணத்திற்குப் பிறகு, பர்தா அணிந்து வீட்டு வேலைகளில் என்னை அர்ப்பணிக்கச் சொன்னார்கள்” எனத் தெரிவித்துள்ள அவர், அதன்பிறகு, பத்திரிகை ஒன்றில் நிருபராகச் சேர்ந்து, தனது கதைப் பயணத்தை அவ்வழியே பெருக்கியுள்ளார்.
இன்னொரு முறை, உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றதாகவும், அப்போது கணவர் காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். பத்திரிகைத் துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, பானு சட்டத் தொழிலுக்கு மாறினார். 1981-ஆம் ஆண்டில் அவர் மற்றொரு தீவிரமான நோயை அனுபவித்து அதிலிருந்தும் மீண்டார். அந்தச் சமயத்தில் பீஜாப்பூரைச் சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர், இஸ்லாம் சமூக இளைஞர்களால் துன்புறுத்தப்பட்டார். இதை வைத்து, அவர் ஓர் உணர்ச்சி மிகுந்த கட்டுரை எழுதினார். அந்த கட்டுரை பத்திரிகையில் வெளியான நிமிடம் சிலிர்ப்பூட்டுவதாக இருந்ததாகவும், அதுவே பொது எழுத்துப் பயணத்தின் தொடக்கமாக இருந்ததாகவும் பேட்டி ஒன்றில் பானு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னுடைய துணிச்சலான, நேர்மையான எழுத்து பெரும்பாலும் தம்மை ஓர் இலக்காக மாற்றியதாகவும், குறிப்பாக, மசூதிகளில் பிரார்த்தனை செய்யும் பெண்களின் உரிமையை பகிரங்கமாக ஆதரித்த பிறகு இது வலுவடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். 2000-ஆம் ஆண்டில், பானுவுக்கு அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், தனக்கு எதிராக ஒரு ஃபத்வா பிறப்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஃபத்வா என்பது இஸ்லாத்தில் ஒரு தகுதிவாய்ந்த அறிஞரால் வழங்கப்பட்ட ஒரு மதத் தீர்ப்பு ஆகும். மேலும், தனது எழுத்துக்காக ஒரு நபர் தன்னை கத்தியால் தாக்க முயன்றதாகவும், ஆனால் அவரது கணவரால் அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பானு முஷ்டாக்கின் படைப்புகள் கர்நாடக சாகித்ய அகாடமி விருது மற்றும் தான சிந்தாமணி அத்திமாப்பே விருது உட்பட பல பரிசுகளைப் பெற்றுள்ளன.