மைசூரு தசரா பண்டிகை.. புக்கர் பரிசு பெற்ற முஸ்லிம் எழுத்தாளருக்கு முதல்வர் அழைப்பு.. சாடிய பாஜக!
நடப்பாண்டு மைசூருவில் தசரா விழாவை பானு முஷ்டாக் தொடங்கி வைப்பார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். இதை பாஜக தலைவர் பிரதாப் சிம்ஹா கடுமையா விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான, பிரபலமான விழாக்களில் தசராவும் ஒன்று. இது, அக்டோபர் 2ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில், தசரா கொண்டாட்டங்களைத் தொடங்கி வைக்க புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரும் சமூக நல ஆர்வலருமான பானு முஷ்டாக் அழைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் ஆங்கில இலக்கியப் புனைவுக்காக வழங்கப்படும் உயரிய விருதான சர்வதேச புக்கர் பரிசு, நடப்பாண்டில் பிரபல கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக் எழுதிய ’ஹார்ட் லாம்ப்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது. இது, தென்னிந்தியாவில் முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களைச் சித்தரிக்கிறது. மறுபுறம் எழுத்தாளர், வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலரான பானு முஷ்டாக், கர்நாடகாவின் ஒரு சிறிய நகரத்தில் இஸ்லாம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். தொடக்கம் முதலே கன்னடத்தைக் கற்றுக் கொண்ட அவர், அம்மொழியில் சிறந்து விளங்கி வருகிறார்.
இந்த நிலையில், நடப்பாண்டு மைசூருவில் தசரா விழாவை பானு முஷ்டாக் தொடங்கி வைப்பார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர், "கர்நாடகாவின் ஹாசனைச் சேர்ந்த எழுத்தாளர் பானு முஷ்டாக், இந்த ஆண்டு உலகப் புகழ்பெற்ற தசரா மஹோத்சவத்தைத் தொடங்கி வைப்பார். விழாக்கள் செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கும், விஜய தசமி 11ஆம் தேதி, அக்டோபர் 2 ஆம் தேதி கொண்டாடப்படும். பானு முஷ்டாக்கின் இலக்கியப் படைப்பான ’ஹார்ட் லாம்ப்’ புக்கர் பரிசை வென்றுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பெண் எழுத்தாளர் இந்த கௌரவத்தைப் பெற்றது நமக்குப் பெருமை மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது. பானு முஷ்டாக் விவசாயிகள் அமைப்புகள், கன்னடப் போராட்டங்கள் மற்றும் முற்போக்கான இயக்கங்களுடன் தொடர்புடையவர். தசராவைத் தொடங்கி வைக்க ஒரு பெண் அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நான் தனிப்பட்ட முறையில் அவரிடம் பேசினேன். எங்கள் மாவட்ட நிர்வாகம் பானு முஷ்டாக்கிற்கு முழு மரியாதையுடன் முறையான அழைப்பை வழங்கும்" என்று அவர் கூறியிருந்தார்.
அவருடைய இந்த அறிவிப்பு, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, பாஜக தலைவர் பிரதாப் சிம்ஹா, கேள்வி எழுப்பியுள்ளார். அவர், “நீங்கள் ஒரு முஸ்லிம் என்பதால் நான் நிச்சயமாக இந்த ஆட்சேபனையை எழுப்பவில்லை. உங்கள் சாதனைகள் மீது எங்களுக்கு மரியாதை உண்டு. இலக்கியத்திற்கும் நீங்கள் பங்களிப்பு செய்திருக்கிறீர்கள். நீங்கள் புக்கர் பரிசையும் வென்றிருக்கிறீர்கள். கர்நாடகாவிலும் இந்தியாவிலும் உள்ள நாங்கள் அனைவரும் அதை மதிக்கிறோம், நேசிக்கிறோம், பெருமைப்படுகிறோம். ஆனால் தசரா கொண்டாட்டம் ஒரு மதச்சார்பற்ற நிகழ்வு அல்ல. இது ஒரு மதக் கொண்டாட்டம். பானு முஷ்டாக்கின் தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் தசரா 100 சதவீதம் எங்கள் மதத்தின் பிரதிபலிப்பு. இது எங்கள் பண்டிகை. மைசூருவில் இந்த பாரம்பரியம் விஜயநகரப் பேரரசின் காலத்திலிருந்தே நடைபெற்று வருகிறது. இன்றும்கூட, மைசூரு அரண்மனையில் சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாம் இப்போது ஒரு ஜனநாயக நாடாக இருப்பதால், மாநில அரசு தசராவை ஏற்பாடு செய்கிறது. ஆனால், அது மதச்சார்பின்மையின் குறிகாட்டியாக இல்லை; இது சாமுண்டேஸ்வரி தெய்வத்திற்கு பூஜை செய்வதை உள்ளடக்கிய ஒரு மத நிகழ்வு. பானு முஷ்டாக், சாமுண்டேஸ்வரி தேவியை நம்புகிறாரா? மேலும் அவர் எங்கள் சடங்குகளைப் பின்பற்றுகிறாரா" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் இதுகுறித்து பானு முஷ்டாக், கருத்து தெரிவிக்கவில்லை. எனினும் முதல்வர் அழைப்பின் காரணமாக, அவர் அங்குச் செல்ல இருப்பதாகத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.