நடந்து கொண்டிருக்கும் போது, விளையாடிக்கொண்டிருக்கும் போது, வங்கியில் நின்று கொண்டிருக்கும் போது, நாற்காலியின் அமர்ந்திருக்கு போது இப்படி ஏதோ ஒரு நிலையில் கண் இமைக்கும் நேரத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பலரும் உயிரிழந்த வீடியோக்களை சமீப காலங்களில் பார்த்திருப்போம். பெரியோர்கள் அதாவது வயதில் மூத்தவர்கள் என்றால் கூட பரவாயில்லை இளம் வயதினரும் சில சமயங்களில் சிறாரும் இப்படி மாரடைப்பால் உயிரிழப்பது பலரையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது.
சமீபத்தில் கூட இதுபோன்ற திடீர் மரணங்கள் குறித்து ஓர் விவாதம் நடைபெற்றது. அதாவது, “திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம்” என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவிக்க, அதற்கு மத்திய அரசு தரப்பில் ”கொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்பு மரணங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் அதுபோல ஒரு சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
குண்டலா ராகேஷ் என்னும் 25 வயதுடைய இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது அப்பா கம்மம் பகுதியின் முன்னாள் தலைவராக இருந்துள்ளார். ராகேஷ் நேற்று இரவு ஹைதராபாத்தில் உள்ள உப்பல் மைதானத்தில் நண்பர்களுடன் பேட்மிட்டன் விளையாடிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்து இருக்கிறார். அப்போது மயங்கி விழுந்த ராகேஷை மீட்டு அவரது நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இதுபோன்ற பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.
முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 13 வயது சிறுவன் ஊர்த்திருவிழாவில் நடனமாடிக்கொண்டிருக்கும்போது மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிழந்திருந்தது பெரும் அதிச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதயநோய் நிபுணர்கள் இதுகுறித்து கூறுகையில், “உரத்த சத்தம் ஒழுங்கற்ற இதயத் துடிப்பைத் தூண்டி, மரண விளைவுகளுக்கு வழிவகுக்கும்” என்று கூறுகின்றனர்.
கடந்த ஆண்டே, துபாய்க்கு வேலை தேடிச்சென்ற கேராளாவைச் சேர்ந்த இளைஞர் நண்பர்களுடன் கால்பந்து விளையாண்டு கொண்டிருக்கும் போது சுருண்டு விழுந்து மரணம் அடைந்து இருந்தார். பின்னர் அவரின் உடல் கோழிக்கோடான அவரின் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
இளம் வயது மாரடைப்பை தடுக்க முடியுமா?
இளம் வயதில் மாரடைப்பு வருவதற்கு சீரற்ற உணவுப்பழக்கம் முக்கியக் காரணமாக இருக்கிறது. உடற்பயிற்சி மற்றும் சீரான உனவுப்பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் மாரடைப்பு வருவதை தடுக்க முடியும்.
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே..!
நெஞ்சுவலி, கை வலி, திடீர் பதட்டம், மூச்சுத்தினறல் போன்றவை மாரடைப்பிற்கான காரணங்கள் இந்த மாதிரியான அறிகுறிகள் தென்பட்ட ஒரு மணி நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் போது அவரை காப்பாற்றுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்றும் கூறுகின்றனர்.
மேலும் மாரடைப்பு ஏற்படும்போது தனியாக இருக்கும் நிலை நேர்ந்தால் சுயமாக வாகனம் ஓட்டுவதை தவிர்த்து 108 என்ற மருத்துவ உதவி எண்ணின் மூலம் உதவியை நாடலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.