தந்தை பெரியார் முகநூல்
சிறப்புக் களம்

பெரியார் மீது எல்லை மீறும் அவதூறுகள்.. தீவிரமாக கற்பிக்க தவறுகிறதா திராவிட இயக்கங்கள்?

பெரியார் நினைவு நாளான இன்று பெரியார் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து பெரியாரிய ஆய்வாளர்கள் முன்வைத்த பல்வேறு விதமான விளக்கங்களை இங்கே விரிவாக காணலாம்.

Rajakannan K

தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கும் பெரியார் மீதுதான் அன்றைய காலம் தொட்டு இன்றுவரை அவதூறுகளும் தொடர்கின்றன. எந்த தலைவரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் கிடையாது. விமர்சனங்கள் உரையாடல்களை நிகழ்த்தி எது சரி என்று இருதரப்பையும் யோசிக்க வைக்கும். அது வெற்று அவதூறுகளாக மாறும் பொழுது, ஆளுமைகளை அவதூறுகளால் சிதைக்கும் போக்கு ஆபத்தானதாக மாறுகிறது. திராவிட இயக்கங்கள் அவரின் கருத்துகளை முழுமையாக விளக்கத் தவறுவதால்தான் இத்தகைய அவதூறுகள் பரவுகின்றன என்று ஒரு கருத்து உண்டு. பெரியாரின் கருத்துகளை நேரடியாகப் படிக்காமல், அவதூறுகளை நம்புவது பிரச்னைகளை உருவாக்குகிறது. பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகளை புரிந்து கொள்ளும் முயற்சிகள் தேவை.

பெரியார் மீதான விமர்சனங்கள் ஏன் கவனிக்கத்தவை?

தமிழ்நாடு பல்வேறு தனித்தன்மைகளுடன் பொருளாதார வளர்ச்சியிலும், சிந்தனை வளர்ச்சியிலும் முன்னோக்கிய பாய்ச்சலில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் இன்றைய முன்னேற்றத்திற்கு பல்வேறு ஆளுமைகள் தங்களது பங்களிப்பை வரலாற்றில் செய்திருக்கிறார்கள். அத்தகைய ஆளுமைகளில் தமிழ்நாடு உச்சி முகர்ந்து இன்றளவும் கொண்டாடி வரும் முக்கிய ஆளுமை தந்தை பெரியார். எந்த அளவிற்கு பெரியார் கொண்டாடப்படுகிறாரோ அதே நேரத்தில் காலம் தோறும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். அதாவது பெரியாரைப் போல் போற்றப்படுபவரும் இல்லை, தூற்றப்படுபவரும் இல்லை.

ஏனெனில், பெரியார் முன் வைத்த கருத்துகள் பலவும் மிகவும் காத்திரமானவை. எத்தகைய நெளிவு சுளிவுகளும் இல்லாமல் நேரடியாக அழுத்தம் திருத்தமாக முன் வைக்கப்பட்டவை. அதனால், பலருக்கும் அதனை உள்வாங்கிக் கொள்வதற்கு மிகவும் சிரமாக உள்ளது.

பெரியார்

சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, மூட நம்பிக்கை எதிர்ப்பு என பல்வேறு கருத்துகளை ஓங்கி முழங்கியவர், செயல்படுத்திக்காட்டியவர் பெரியார். தமிழைக் கொச்சைப்படுத்தினார், திருக்குறளை மலம் என்று விமர்சித்தார், பெண்ணுணர்வை மதிக்காதவர், தமிழின உணர்வை மழுங்கடித்தவர் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுவதும் அதற்கு திராவிட இயக்க சிந்தனையாளர்கள் விளக்கங்கள் கொடுப்பதும் தொடர் கதையாகிவிட்டது. தற்போது பெரியார் மீதான விமர்சனத்தை முன் வைப்பது நாம் தமிழர் இயக்கத்தினரும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும்.

எல்லா காலத்திலும் விமர்சனங்கள் இருந்தாலும் தற்போது மிகவும் மோசமான அவதூறுகளையும் பெரியார் சந்திக்க வேண்டியிருக்கிறது. குத்தூசி குருசாமி, பாரதிதாசன், வஉசி என பெரியார் காலத்தில் பெரியாரோடு பயணித்து அவர் மீது மதிப்பு கொண்டவர்களை தங்களுக்கானவர்களாகக் காட்டிக்கொண்டே பெரியார் மீது அவதூறுகளை பரப்புகிறார்கள். பெரியார் இருந்தவரை காமராஜர், அண்ணா, கலைஞர் என யாரும் இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து விமர்சித்ததில்லை. உரிமையோடு விமர்சனங்களை வைத்தார்கள்.. அவதூறுகளாக அது மாறவில்லை. ஆனால், தற்போது நிலைமை சற்றே மாறியிருக்கிறது.

இப்படியாக பெரியார் நினைவு நாளான இன்று பெரியார் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து பெரியாரிய ஆய்வாளர்கள் பல்வேறு விதமான விளக்கங்களைக் கொடுக்கிறார்கள். அவர்கள் முதலில் சொல்வது பெரியாரை அவருடைய எழுத்துகளில் இருந்து புரிந்துகொள்ளுங்கள் என்பதுதான். மகாத்மா காந்தி, பெரியார், அண்ணா, டாக்டர் அம்பேத்கர் போன்றோரெல்லாம் காலம் முழுக்க எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும்தான் இருந்திருக்கிறார்கள். அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவர்களை நேரடியாகப் படிப்பதன்தான் சரியானது. ஆனால், அப்படி நடப்பதில்லை என்கிறார் பெரியாரிய ஆள்வாளர் பசு கவுதமன்.

பெரியாரை மேற்கோள்களால் அல்ல, நேரடியான எழுத்துகளால் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்

”விமர்சனங்கள் வைக்கப்படுவது பெரியாருக்கு புதிது இல்லை. பெரியார் பொதுவாழ்வை துவங்கிய காலத்தில் இருந்தே எதிர்வினை இருந்து கொண்டேதான் இருந்தது. இந்த விமர்சனங்களை எல்லாம் தாண்டிதான் பெரியார் நிலைத்து நின்று கொண்டே இருக்கிறார். பெரியாரை புரிந்து கொள்ளும் அளவிற்கான படிப்பினையை முறையாக யாரும் செய்யவில்லை. அது ஒரு பெரிய குறை. பெரியாரை பெரியாரின் எழுத்துகளில் இருந்து நேரடியாக படிப்பதில் இருந்துதான் புரிந்து கொள்ள முடியும். பெரியாருக்கான வியாக்கியானங்களில் இருந்து புரிந்து கொள்ள முயற்சிப்பதால்தான் இவ்வளவு பிரச்னைகள் வருகிறது”.

காலம் பெரும்பாலும் மாறிக்கொண்டே இருக்கிறது. மன்னர்கள் காலத்தில் போருக்கு சென்று எதிரிகளை வீழ்த்துவது ‘அறம்’ என்றால் தற்காலத்தில் போர் என்பதே தடுக்கப்பட வேண்டியது. போருக்கான நடைமுறைகள் கூட காலம் முழுவதும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. ஒரு நாட்டில் சட்டப்படி சரியான ஒரு விஷயம் இன்னொரு நாட்டில் சட்டப்படி தவறானது. ஒருகாலத்தில் அனைவருக்கும் சரியெனப் பட்ட ஒரு விஷயம், தற்காலத்தில் தவறாகப்படுகிறது. அப்படியிருக்கும்போது, ஒரு தலைவரின் கருத்து எந்த காலக்கட்டத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலையில் முன்வைக்கப்பட்டது என்பது ஆராய வேண்டியது. அதைச் சரியாகச் செய்ய வேண்டுமென்கிறார் பசு கவுதமன்.

பெரியார்

“பெரியார் எதனையுமே எதற்கு சொன்னார் ஏன் சொன்னார் எந்த காலகட்டத்தில் சொன்னார் என்பதையெல்லாம் யாரும் யோசிப்பதில்லை. முழுமையாக எதையும் படிக்காமல், முழுமையாக எதையும் உள்வாங்காமல் முன்னையும் விட்டுவிட்டு பின்னையும் விட்டுவிட்டு நடுவே இருப்பதை பிடித்துக் கொள்கிறார்கள். இதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. பெண்ணியம் குறித்து அவர் பேசிய கருத்துக்களை புரிந்து கொள்ள சிரமமாக இருப்பதே வெறும் வார்த்தைகளை மட்டும் பார்ப்பது.

பெரியாரை பெரியாராக படிக்கணும்...

நாம் தமிழர் இயக்கத்தில் பயணித்த சாகுல் ஹமீது போன்றோர் பெரியாரை எப்படி புரிந்து கொண்டார்கள் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். ஏன் அவர்களது வாரிசுகளே அதனை புரிந்து கொள்ளவில்லை. பெரியார் என்ன பேசியிருக்கிறார் என்பதை முழுமையாக புரிந்து கொள்ளாமல் வெறுமனே உணர்வுமயப்பட்ட நிலையில் பேசுகிறார்கள். அறிவுமயப்பட்ட நிலையில் யாரும் இல்லை. இஸ்லாத்தை பற்றி பெரியார் என்ன பேசினார், எந்த அளவிற்கு விமர்சனபூர்வமாக இருந்தார் என சொல்லிக் கொடுத்தால்தானே தெரியும். திராவிட இயக்கத்தில் இருப்பவர்களே பெரியாரை முழுமையாக சொல்லிக் கொடுக்கவில்லையே.

பெரியாரை பெரியாராக படிப்பதற்கு உண்டான பணிகளை திராவிட இயக்க பெரியாரிய அமைப்புகளே தீவிரமாகவும், செறிவாகவும் செய்யவில்லை. இப்பொழுது நிறைய பேர் பெரியாரை தேடுகிறார்கள், படிக்கிறார்கள். பெரியார் இயக்கங்களுக்கு வெளியே இருப்பவர்கள்தான் பெரியார் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை முழுமையாக கற்க நினைக்கிறார்கள். அவரது கருத்துகளை செயல்படுத்த நினைக்கிறார்கள்” என்றார்.

தந்தை பெரியார்

விமர்சனங்கள் எப்போதும் கொள்கை ரீதியாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், பெரும் ஆளுமைகள் பற்றி ஒரு பக்கம் கூட படிக்காமல் அல்லது அரைகுறையாக படித்துவிட்டு, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வரும் தகவல்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஒருவர் மீது எளிதாக விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். அப்படித்தான் பெரியாருக்கும் நடந்து கொண்டிருக்கிறது. சில விஷயங்கள் எத்தனை புத்தகங்கள் ஆய்வுகட்டுரைகள் வழியாக மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தாலும், அவதூறுகள் வேகமாகப் பரவுகின்றன. பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் “அவர் அப்படித்தான் போலயே?” என்ற கேள்விகளையும் எழுப்புகின்றன. இதை தடுக்க வேண்டுமென்றால் மீண்டும் மீண்டும் பேச வேண்டிய தேவை இருக்கிறது. சாதி ஒழிப்பு எப்படி தொடர்ந்து பேசப்பட வேண்டியதோ, பெண் விடுதலை மற்றும் பெண் சுதந்திரம் எப்படி தொடர்ந்து பேசப்பட வேண்டியதோ அப்படி, தலைவர்கள் மேல் வைக்கப்படும் அவதூறுகள் குறித்தும் தொடர்ந்து பேசப்பட வேண்டியதன் தேவை இருக்கிறது. இதைத்தான் பெரியாரிய ஆய்வாளர் இக்லாஸ் உசேன் விளக்குகிறார்.

பெரியார் குறித்த அவதூறுகள் எப்படிக் கட்டமைக்கப்படுகின்றன?

“பெரியார் மீதான விமர்சனங்கள் கருத்தியல் அடிப்படையில் அல்லது கொள்கைச் சார்ந்து அல்லது அவரின் இலக்குச் சார்ந்து வைக்கமாட்டார்கள். விமர்சனத்தை அவதூறுகளாகத்தான் கட்டமைத்து வருகிறார்கள். எடுத்துக்காட்டாக எழுத்தாளர் ஜெயமோகனை சொல்லலாம். பெரியார் வைக்கம் வீரர் என்றோ அல்லது வைக்கத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்றோ சொல்லமுடியாது என்று அவதூறு பரப்பினார். அவர் கருத்துக்கு, மறுப்பாகவும் அத்துடன் பல்வேறு ஆதாரங்களை ஒன்று திரட்டி ஆய்வாளர் பழ.அதியமான் ‘வைக்கம் போராட்டம்’ பற்றிக் கட்டுரையும் முக்கியமான ஆய்வுநூலையும் வெளியிட்டார். வைக்கத்தில் பெரியார் செய்த பணி என்னென்ன என்பதையும், வைக்கம் போராட்டத்தின் இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையில் பெரியாரின் கருத்தையும் பதிவுசெய்தார். கிட்டதட்ட பெரியார் வைக்கம் வீரர் அல்ல வைக்கம் போராட்டத்தின் தளபதியாகத் திகழ்ந்தார் என்று சொல்லும் அளவுக்கு அதியமான் அவர்கள் தகவல் தந்தார்‌. அவதூறு சொன்ன ஜெயமோகன் மழுப்பல் செய்ததோடு சரி, பெரியார் பற்றி அவதூறாகச் சொல்லிவிட்டேன் என்று ஒப்புக்கொள்ளவில்லை. அது ஜெயமோகன் மட்டுமல்ல பெரியாரை அவதூறாகப் பேசுபவர்கள் பெரும்பாலும் அறிவு நேர்மை அற்றவர்களாக தங்களை அடையாளப் படுத்துகிறார்கள்.

அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., பெரியார்

பெரியார் ஒரு கட்சியை நிர்வாகித்துத் தேர்தலில் வாக்குவாங்கி ஆட்சி செய்து, அந்த ஆட்சி நிர்வாகத்தில் ஒழுங்கின்மை - நிர்வாகம் சரியில்லை என்று சொல்லி அவரை விமர்சனம் செய்தால், அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பெரியார் செய்தது சமூக சீர்திருத்தம். அந்த சீர்திருத்தத்தை எப்படி யாரைக் கொண்டு செய்யமுடியும் என்றுதான் அவரின் அரசியல் இருந்தது. பெரியாரின் அரசியல் இரண்டு வகையில் செயல்படுகிறது. ஒன்று நேரடியாக சமூகத் தளத்தில் கருத்துருவாக்கத்தை மாற்றத்தை முன்னெடுப்பது. அதாவது, பிறவி இழிவாகத் தொடரும் அனைத்து இழிவுத் தன்மையும் ஒழிப்பது. அடுத்து ஆட்சியில் இருப்பவர்கள் மூலம் வகுப்புவாரி இட ஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு கிடைக்கச் செய்வது. இதுதான் பெரியாரின் செயல் திட்டமாக இருந்தது.

காமராஜருக்கு பக்க பலமாகவே இருந்தார் பெரியார்

1925 இல் பெரியார் நீதிக்கட்சியை ஆதரித்தக் காரணம், பெரியாரின் சீர்திருத்தக் கருத்தை தன் கொள்கையாக அது ஏற்றுக் கொண்டது. அதனால், நீதிக்கட்சியை ஆதரித்தார். பின்னர் நீதிக்கட்சியின் தலைமை பதவிக்கு பெரியார் வந்த பிறகு, தேர்தல் அரசியலைவிட சமூகச் சீர்திருத்த அரசியலை முன்னெடுக்க நீதி 1944இல் நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக மாற்றினார். இடையில் ‘மதராஸ் மகான் பிரதமர்’ பதவியை ஆங்கிலேய அரசு கொடுக்க முன் வந்தபோது கூட அதை ஏற்றுக்கொள்ள மறுத்தவர் பெரியார். பிறகு தனது சீர்திருத்தக் கருத்துக்கு ஏற்ற வகையில் உதவும் அரசியல் நடவடிக்கையில் எப்போதும் பெரியார் ஆதரித்தார். அதில் காமராஜரை பெரியார் ஆதரித்தார் என்று சொல்வதைவிட, காமராஜருக்கு பக்க பலமாகவே இருந்தார்.

காமராஜர் ஆட்சி காலத்தில்தான் பிராமணாள் கஃபே பெயர் அழிப்பு போராட்டம், அரசியல் சட்ட எரிப்பு போராட்டம், தேசப்பட எரிப்பு போராட்டம், பிள்ளையார் சிலை உடைப்பு போன்ற சமூகச் சீர்திருத்த போராட்டங்களை முன்னெடுத்தது... இன்னொரு பக்கம் காமராஜர் ஆட்சியை ஆதரித்தது. அதுவரையில்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் தொடக்க கல்வியை தமிழகம் முழுக்க கொண்டு சேர்க்கத் திட்டம் வகுத்தது மற்றும் அரசு வேலை என்பது பார்ப்பனர்களுக்கு மட்டுமே இருந்ததை பாமரர்களுக்கும் கிடைக்க வழி செய்த வகையில் காமராஜர் ஆட்சியை பெரியார் கொண்டாடினார். பெரியாரின் சமூகப் பணியோடு ஆட்சியில் இருப்பவர்களிடம் ஒரு வேண்டுகோள் அல்லது ஒப்பந்தம் செய்துகொண்டுதான் இணைந்து செயல்படுவார். இது நீதிக்கட்சி தொடங்கி காமராஜர் ஆட்சி காலம் வரை அப்படித்தான் இருந்தது.

பார்ப்பனியத்தை தொடர்ந்து எதிர்த்துக்கொண்டேதான்...

அண்ணா, பெரியார்

1967இல் திமுக ஆட்சிக்கு வந்த பின் ‘இந்த ஆட்சியை பெரியாருக்கு சமர்ப்பிக்கிறேன்’ அன்று அறிஞர் அண்ணா சொன்ன பிறகு 1967ஆம் முதல் 1973ஆம் ஆண்டு பெரியார் மறையும் வரை பெரியாரின் கோரிக்கை என்பதற்கு பதில் பெரியார் சொல்வதை உத்தரவாக - கட்டளையாக அண்ணாவும் கலைஞரும் மாற்றினார்கள். ஆட்சி வந்துவிட்டது என்று போராட்டத்தைச் சீர்திருத்தத்தை பெரியார் என்றைக்கும் கைவிட்டதில்லை. தான் இறக்கப் போவதற்கு முன்புகூட சூத்திர இழிவு ஒழிப்பு போராட்டத்தை முன்னெடுத்தார். தேர்தல் அரசியல் வெற்றி என்பதோடு தன் பணி முடிந்து போய்விடுமென்று கருதி இருப்பாரானால், பார்ப்பனியம் கால ஓட்டத்தில் பெரியாரையும் தனதாக்கிக் கொண்டிருக்கும். பெரியார் தனது அரசியலை ஒரு ‘கருவியாக’ பார்ப்பன மேலாண்மையை ஒழிக்கும் கருவியாக வாழ்ந்து காட்டியுள்ளார். அது பார்ப்பனியத்தை தொடர்ந்து எதிர்த்துக்கொண்டேதான் இருக்கும்” என்றார்.